செய்திகள்

சுதந்திரக்கட்சி இரண்டாக உடைந்தது

மஹிந்த ராஜபக்ஸவை அவரது ஆதரவாளர்கள் அவர் தான் சுதந்திர கட்சின் தலைவர் எனவும் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் அவர் தான் சுதந்திரக்கட்சியின் தலைவர் எனவும் கொழும்பில் இரு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் அறிவித்திருக்கும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாக பிளவு பட்டிருக்கிறது.

கொழும்பு டார்லி வீதியில் உள்ள சுதந்திர கட்சின் தலைமை காரியாலயத்தில் ராஜபக்ஸ தலைமையில் கூடிய 44 மத்தியகுழு ஆதரவாளர்கள் மஹிந்த ராஜபக்க்ஷவையே மீண்டும் கட்சியின் தலைவராக நியமித்ததாக சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

இதேசமயம், மைத்திரிபால சிறிசேனவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதுடன் கட்சியின் பொதுச் செயலாளராக துமிந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டார். கட்சியின் தேசிய அமைப்பாளராக ஜனக பண்டார தென்னக்கோனும், கட்சியின் பொருளாளராக எஸ்.பி. நாவின்னவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கட்சியின் போசகர்களாக முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவளை, டார்லி வீதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் சட்டவிரோதமானது என்றும் தமக்கே மத்திய குழுவின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் சிறிசேனவின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.

சுதந்திர கட்சியின் மத்திய குழுவில் 55 பேர் இருக்கின்றனர். ஆனால் இருசாராருமே , தமக்குத்தான் பெரும்பான்மை பலம் இருக்கின்றது என்று வாதிட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், அனேகமாக, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுக்கியரது.