செய்திகள்

சுதந்திரக் கட்சி நிறைவேற்றுக்குழு அவசரமாக நாளை கூடுகின்றது: புதிய தலைவர் முறைப்படி தெரிவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் குழுவான நிறைவேற்றுக்குழுவின் முக்கிய கூட்டம் ஒன்று நாளை வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் பங்குகொள்ளும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் அடுத்த தலைவர் உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்படுவார்.

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நாளை மாலை நடைபெறவுள்ள இந்த நிறைவேற்றுக்குழுவின் அவசரக் கூட்டத்தில் பங்குகொள்ளுமாறு கட்சியின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கட்சியின் தலைமைத்துவத்துக்கு உருவாகியுள்ள சர்ச்சைகளுக்கு முடிவைக்காணும் வகையில், தலைமைப் பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு விட்டுக்கொடுப்பதற்கு தான் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்‌ஷ நேற்றிரவு அறிவித்தார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றையடுத்தே இதனை ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகியிருந்த தலைமைத்துவப்பிரச்சினைக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் இன்று தெரிவித்தன. இருந்த போதிலும் முறைப்படி இது தொடர்பில் கட்சியின் நிறைவேற்றுக்குழுவே தீர்மானிக்க வேண்டும் என்பதால்தான் நாளைய கூட்டம் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.