சுதந்திரக் கட்சியில் மகிந்த போட்டியிடுவதற்கு தடையில்லை: அனுர பிரயதர்சன யாப்பா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சுதந்திரக்கட்சியின் சார்பில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தத் தடையும் இல்லை என்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அனுர பிரியதர்ஷன யாப்பாவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதாவது மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அரசியலில், ஈடுபடுவதை தடுப்பதற்காக சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனரா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தொடர்ந்து குறிப்பிடுகையில்,
எமது கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார். அதேபோன்று முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக் ஷ மற்றும் சந் திரிகா குமாரதுங்க ஆகியோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் பங்கேற்கலாம். செயற்படலாம். மேலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அவர்க ளுக்கு எந்தத் தடையும் இல்லை என்றார்.