செய்திகள்

சுதந்திரதின அணிவகுப்பில் தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதா? புலனாய்வுத் தகவலையடுத்து முறியடித்ததாக தகவல்

பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில், புதிய அரசாங்கத்தின் தலைவர்களைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தமை தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து முன்னரே தகவல் கிடைத்ததால், அதனைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு புலனாய்வு  எச்சரிக்கை கிடைத்தது. கோட்டே பாராளுமன்ற வளாகத்துக்கு வெளியே நடக்கும் இராணுவ அணிவகுப்பில்  அரச தலைவர் ஒருவர் அல்லது தலைவர்கள் தாக்குதலுக்குள்ளாகும் வாய்ப்பு இருப்பதாக அந்த புலனாய்வு அறிக்கை எச்சரித்திருந்தது.

1981ம் ஆண்டு இராணுவ அணிவகுப்பு ஒன்றில் எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டது போன்ற தாக்குதலுக்கு வாய்ப்புள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இராணுவ அணிவகுப்பை பார்வையிட்டுக் கொண்டிருந்த எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த இராணுவ வாகனங்களில் இருந்து திடீரெனக் குதித்த படையினரால் சரமாரியாக சுடப்பட்டு மரணமானார்.

புலனாய்வு எச்சரிக்கையை பாதுகாப்புச் செயலர் பி.எம்.யூ.டி.பஸ்நாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குத் தெரியப்படுத்தியிருந்தார். அதையடுத்து, ஜனாதிபதி தலைமையில், நடந்த கூட்டத்தில், அத்தகைய முயற்சிகளைத் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிடப்பட்டன.

எந்த அசம்பாதவிதங்களும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த உடனடியாக தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, அரசாங்க வட்டாரம் ஒன்று கூறியது. எனினும், சரியான இலக்கு  அல்லது இலக்குகள் யார் என்றோ, எந்த இடத்தில் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாகவோ அந்த எச்சரிக்கையில் கூறப்படவில்லை.

இந்த அதிரடித் தாக்குதல் எச்சரிக்கை கிடைக்க முன்னரே, சுதந்திர நாள் கொண்டாட்டத்தை எளிமையாக நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்திருந்தார். அணிவகுப்பில் இராணுவ தளபாடங்களைக் காட்சிப்படுத்துவது அவசியமிலலை என்றும், போர் விமானங்களில் அணிவகுப்புத் தேவையில்லை என்றும்,அவர் முடிவு செய்திருந்தார்.