செய்திகள்

சுதந்திர கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லையென என தெரிவித்துள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,சதித்திட்டம் மூலம் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான எவ்வித சந்தர்ப்பமும் இல்லை எனவும்   வலியுறுத்தியுள்ளார்.

இன்று முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.

பல்வேறு கூட்டங்களை நடத்திக்கொண்டிருப்பவர்களின் நோக்கம் கட்சியின் வெற்றியல்லவெனவும் அவர்கள் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கே அழுத்தம் பிரயோகிக்க முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஹைட் பார்க்கில் நடத்திய கூட்டத்தில் 11,900 பேர் வரையில் கலந்துகொண்டதாக அரச புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஆட்சியாளார் திரண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கையை நீதிமன்றம் உணர வேண்டும் என அறிவித்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் பலத்தை காண்பித்து விசாரணை அதிகாரிகள் மற்றும் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை இந்த கூற்றின் மூலம் புலப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

n10