செய்திகள்

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கும் முடிவை கூட்டமைப்பு எடுக்கவில்லை: சுரேஷ் கண்டனம்

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார். அந்த நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்று அவர் தெரிவித்தார்.

அவ்விருவரும் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கூட இது தொடர்பில் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், சுதந்திர தின நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் பங்கேற்பு உகந்ததாக இருக்காது என தானும், மாவை சேனாதிராஜாவும் அவரிடம் கூறியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.

சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது என்பது இலங்கையின் அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொண்டதற்கு சமம் என்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் பங்குபெறாமல் இருந்து வந்தன என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஆனால் இப்போது என்ன அடிப்படையில், என்ன காரணத்துக்காக அவ்விருவரும் கலந்து கொண்டனர் என்பதும் கூட யாருக்கும் தெரியாது என அவர் கூறுகிறார். அவர்களின் பங்கேற்புக்கும் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.