செய்திகள்

சுதந்திர தின நிகழ்வுகளில் சம்பந்தன் பங்கேற்பு!

இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினம் இன்று புதன்கிழமை சிறி ஜெயவர்த்தனபுர பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பங்கேற்றார். ஏற்கனவே இன்றைய நிகழ்வில் சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் கலந்துகொள்ளவில்லை.

இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பின்னர், 1972ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தீர்மானம் ஒன்றை எடுத்திருந்தது. அதில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் தமிழ்மக்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எனவே சுதந்திர தின நிகழ்வில் தமிழ் தலைவர்கள் எவரும் பங்குபற்றுவதில்லை என்றும், அந்த நாளை கறுப்பு பட்டியணிந்து துக்க நாளாகக் கடைப்பிடிப்பதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்றைய நிகழ்வில் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படாத நிலையில் அதில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என வடமாகாண முதலமைச்சர்.சி.வி.விக்னேஸ்வரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்கள்.