செய்திகள்

சுதந்திர தின வைபவங்கள்: கூட்டமைப்பு கலந்துகொள்ளுமா?

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை 4 ஆம் திகதி ஶ்ரீஜெயவர்த்தனபுரவில் நடைபெறவிருக்கும் உத்தியோகபூர்வ வைபவங்கள் மற்றும் அணிவகுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அதன் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்வார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்பட்டுள்ளது.

CVWஇந்த வைபவத்தில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என இது தொடர்பாகக் கேட்கப்பட்டபோது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரை இவ்வாறான வைபவங்கள் எதிலும் தான் பங்குகொள்ளப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேவேளையில், ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற வைபவத்தில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், சுதந்திரனும் கலந்துகொண்டிருந்தார்கள். மற்றவர்கள் கலந்துகொண்டிருக்கவில்லை. நாளைய வைபவத்தில் இவர்களும் கலந்துகொள்வார்களா என்பது தெரியவில்லை.