செய்திகள்

சுனில் நரைன் இல்லாத குறையை நிவர்த்தி செய்த மூத்த வீரர்கள்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மேற்கிந்திய சுழல்பந்தவீச்சாளர் சுனில் நரைன். இவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாகக் கூறி பந்து வீச இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அனுமதியளிக்கவில்லை. நரைன் எங்கள் அணியின் சொத்து. அவரை பந்து வீச அனுமதிக்காவிட்டால் போட்டியில் இருந்து விலகுவோம் என்று கொல்கத்தா அணி மிரட்டியது. அதன்பிறகு மீண்டும் ஒரு சோதனை நடத்தி அவரை பந்து வீச அனுமதி அளித்தது.

ஆனால் சில ஆட்டங்களுக்குப் பிறகும் அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது ஓவ் ஸ்பின் பந்துவீச தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவரிற்கு பதிலாக 44 வயதாகும் பிராட் ஹாக் 33 வயதாகும் போத்தா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் சுனில் நரைன் இல்லாத குறையை சரி செய்து வருகின்றனர்.

பிராட் ஹாக் 3 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சென்னை அணிக்கு எதிராக நான்கு மற்றும் ஒரு விக்கெட்டும் பெங்களூர் அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டும் ஐதராபாத் அணிக்கு எதிராக 2 விக்கெட்டும் எடுத்துள்ளார். மொத்தம் 16 ஓவர்கள் வீசி 87 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்துள்ளார்.

இதேபோல் நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் போத்தா 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து அந்த அணியின் வீரர் மணீஷ் பாண்டே கூறும்போது ‘‘நாங்கள் சுனில் நரைனை இழந்துள்ளோம்அவர் கொல்கத்தா அணிக்கு பெரும் பங்கு வகித்தார். அனாலும் தற்போது ஹாக் மற்றும் போத்தா மூலம் கொல்கத்தா அணி வேறுபாட்டை காண்கிறது என்று நான் நினைக்கிறேன். ஐதராபாத் அணிக்கு எதிராக அவர்கள் இரண்டு பேரும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்’’ என தெரிவித்துள்ளார்