செய்திகள்

சுன்னாகத்தில் அதிபரின் வீட்டில் கத்தி முனையில் பாரிய கொள்ளை

யாழ்.சுன்னாகம் அந்தோனியார் தேவாலயத்துக்கு அண்மையிலுள்ள அதிபரின் வீடொன்றில் ‘கத்தினால் குத்துவோம்’ என்று மிரட்டிப் பாரிய கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளிறங்கிய இரண்டு திருடர்கள் கத்தி முனையில் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி தாலிக் கொடி உட்பட 15 பவுண் நகைகள்,ஒரு தொகைப் பணம்,கைத் தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறையிடப்பட்டதையடுத்துப் பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-