செய்திகள்

சுன்னாகத்தில் வழிப்பறி,கொள்ளை சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைதான நால்வரையும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்;தரவிட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் அண்மைக்காலமாக வழிப்பறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன.குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைப் பொலிஸார் தேடி வந்தனர்.இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் ஊரெழுவில் இருப்பதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சுன்னாகம் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையில் சென்ற பொலிஸ் குழு சந்தேகநபர்களை கடந்த 21 ஆம் திகதி வியாழக்கிழமை அவர்களது வீடுகளில் வைத்து மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.அத்துடன் சந்தேகநபர்கள் தங்கள் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள்,எலக்ரிக் பொருட்கள் என சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இதையடுத்துக் கடந்த வெள்ளிக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் நால்வரும் முற்படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதவான் சந்தேகநபர்களை இந்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை,குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மேலும் சிலரைத் தாம் தேடி வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
யாழ்.நகர் நிருபர்-