செய்திகள்

சுன்னாகத்தில் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடாத்த இடைக்காலத் தடை

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் 14 நாட்களுக்கு ஆர்ப்பாட்டம் நடாத்த மல்லாகம் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.சுன்னாகம் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையைப் பரிசீலித்த போதே நீதிமன்றம் இந்தத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.இன்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த உத்தரவு அமுலிலிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்துச் சுன்னாகம் உள்ளிட்ட பிரதேசங்களில் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையிலேயே மல்லாகம் நீதிமன்றம் இவ்வாறு தடையுத்தரவிட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொடூர படுகொலையைக் கண்டித்தும் குற்றவாளிகளுக்கு அதியுட்சத் தண்டணை வழங்குமாறு வலியுறுத்தியும் யாழ்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள்; மாணவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்து பல்வேறு போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.அண்மையில் யாழ்.நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியதில் பொலிஸார் காயமடைந்ததுடன் யாழ். நீதிமன்றம் உட்பட பொதுச் சொத்துக்களும் நாசப்படுத்தப்பட்டன.இதன் விளைவாக 130 பேர் கைது செய்யப்பட்டுத் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.நகர் நிருபர்-