செய்திகள்

சுன்னாகம் நொதேர்ன் பவரின் மின்சார வயர்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸில் முறைப்பாடு

யாழ்.சுன்னாகம் நொதேர்ன்பவர் மின் நிலையத்திற்குள்ளிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான மின்கடத்திகள் (வயர்கள்) இனந்தெரியாதவர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பொறியியலாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்துள்ள பிரதேசங்களிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணை கலக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு நோதேர்ன் பவர் நிறுவனமே காரணமெனத் தெரிவித்து மல்லாகம் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் குறித்த நிறுவனம் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து மூடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த நிறுவனத்திலுள்ள இயந்திரங்களின் பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு நிறுவனம் மேல் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதன்பின்னர் கடந்த 06 ஆம் திகதி திங்கட்கிழமை பராமரிப்பு வேலைகள் மீண்டும் ஆரம்பித்த போதே அங்கிருந்த மின்கடத்திகள் வெட்டிச் செல்லப்பட்டமை தெரிய வந்தது. இது தொடர்பாக ஊழியர்கள் பொறியியலாளருக்கு அறிவித்ததையடுத்தே அவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.