செய்திகள்

சுன்னாகம் நொதேர்ன் பவர் நிறுவனத்தின் மின்சார வயர்கள் திருட்டு: சந்தேகத்தில் இருவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகம் நொதேர்ன் பவர் நிறுவனத்தின் மின் வயர்களைத் திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை காலை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நிறுவன ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 06 ஆம் திகதி திங்கட்கிழமை நிறுவனத்திற்குச் சொந்தமான ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான வயர்கள் இனந்தெரியாதவர்களால் திருடப்பட்டடிருந்தன.

இது தொடர்பாக ஊழியர்கள் பொறியியலாளருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து நிறுவன பொறியியலாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நேற்று இரு சந்தேகநபர்களைக் கைது செய்து அவர்களிடம் விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.

கைதான இருவரும் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இந் நிறுவனத்தில் முன்னர் பணி புரிந்த ஊழியர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.