செய்திகள்

சுயசரிதை படத்தின் போஸ்டரை வெளியிட்ட சச்சின் தெண்டுல்கர்

சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட சச்சின் எ பில்லியன் டிரீம்ஸ் என்ற திரைப்படத்தின் டீசர் போஸ்டரை தெண்டுல்கர் இன்று வெளியிட்டுள்ளார்.இங்கிலாந்தை சேர்ந்த இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கியுள்ள இப்படத்தில் 42 வயது நிறைந்த சச்சின் முதன்முறையாக நடித்துள்ளார்.  இந்த போஸ்டரில், கிரிக்கெட் பேட் ஒன்றை சுமந்து கொண்டு பேட்கள் அணிந்தபடி மைதானத்தில் சச்சின் நடந்து செல்வது போன்ற காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.  55 நாட்கள் பயிற்சி.  ஒரு ஜோடி டிரவுசர்கள்.  சச்சினின் கதை என்ற தலைப்பு அதில் இடம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 14ந்தேதி வெளியாகிறது.  இது குறித்து டுவிட்டரில் சச்சின் வெளியிட்டுள்ள செய்தியில், பல வருடங்களாக என் மீது அன்பு செலுத்தி, ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி!  ஏப்ரல் 14ந்தேதி மதியம் 1 மணி அளவில் வெளியாகும் டீசரை காணுங்கள் என தெரிவித்துள்ளார்.

699627
இந்த படம் குறித்த அதிகாரபூர்வ டுவிட்டரிலும் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  மும்பையை சேர்ந்த 200நாட்அவுட் என்ற தயாரிப்பு நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.  சச்சின் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  சர்வதேச ஒரு நாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 என 3 நிலைகளிலும் சேர்த்து 100 சதங்களை கடந்தவர்.

தனது ஓய்வு முடிவினை 2013ல் வெளியிட்ட சச்சின் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 ஆயிரத்து 357 ரன்களை எடுத்துள்ளார்.  ராஜ்ய சபையின் எம்.பி.யாக இருக்கும் சச்சினுக்கு இந்தியாவின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது கடந்த வருடம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.