செய்திகள்

‘சுயமாகச் சிந்திப்போம் தன்னிறைவு காண்போம்’ : கல்விக் கண்காட்சி (படங்கள்)

புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் மாபெரும் கல்விக் கண்காட்சி நேற்று திங்கட்கிழமை காலை 09 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாடசாலையின் அதிபர் த.லோகராஜா தலைமையில் இடம்பெற்றது.

‘சுயமாகச் சிந்திப்போம் தன்னிறைவு காண்போம்’ எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்தக் கண்காட்சியில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி அ.ஜெயக்குமரன் மற்றும் வடமாகாணக் கல்வித் திணைக்கள உதவிக் கல்விப் பணிப்பாளர் தி.தர்மலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் ஆயக்கடவை சித்தி விநாயகர் முன்றலிலிருந்து மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் கண்காட்சிக் கூடத்தைச் சம்பிராதய பூர்வமாகத் திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் கண்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டனர்.
இந்தக் கண்காட்சியில் மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தும் பல்வேறு படைப்புக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக ஆரம்பக் கல்விக்குரிய கற்பித்தல் சாதனங்கள்,மாணவர்களின் செயற்பாட்டு ரீதியான பல்வேறு ஆக்கங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
விசேடமாக சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலான படைப்புக்கள்,சேதனப் பசளையூடாக மேற்கொபள்ளப்படும் இயற்கை விவசாய உற்பத்தி,உயிர்வாயு உற்பத்தி,10 அடி உயரத்தில் பாடசாலை முன்றலில் உருவாக்கப்பட்ட டைனசோர் உருவம் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த கண்காட்சியை அயற்பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆர்வலர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கண்டு களித்ததாகத் தெரிவித்த பாடசாலை அதிபர் இன்று செவ்வாய்க்கிழமையும் கண்காட்சி இடம்பெறுமெனவும் தெரிவித்தார்.

IMG_0499 (1) IMG_0568 IMG_0569 IMG_0597 IMG_0603