செய்திகள்

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும்: கிழக்கு முதலமைச்சர்

கிழக்கு மாகானத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி அபிவிருத்தி செய்வதன் மூலம் கிழக்கு மாகாண இளைஞர் யுவதிகளுக்கு அதிகமான வேலை வாய்ப்புக்களை வழங்க முடியுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் வியாழக்கிழமை நடைபெற்ற கிழக்கு மாகாண புவியியல் சார் சுற்றுலா தேசப்பட வழிகாட்டி மற்றும் அதன் இணையத் தளம் என்பன அறிமுகம் செய்யும் வைபவத்தில் உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியுடன் தேசிய புவியியல் சார் ஒன்றியம், சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் என்பன இணைந்து அறிமுகம் செய்த இந்த செயற்திட்ட வைபவத்தில் தொடாந்துரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் யுத்தத்துக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை வளர்ச்சி கண்டு வருகின்றது.

சுற்றுலாத்துறை கிழக்கு மாகாண சபையினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதனை மேலும் அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பின்றி யிருக்கும் அதிகமான இளைஞர், யுவதிகளுக்கு பெருமளவிலான வேலை வாய்ப்புக்களை வழங்க முடியும்.

நமது சகோதர சகோதரிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று பல் வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

ஆனால் கிழக்கு மாகாணத்திலேயே அவர்களுக்கு சிறந்த தொழில் இருக்கின்றன. இதனை அபிவிருத்தி செய்து அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும்.

கிழக்கு மாகாண புவியியல் சார் சுற்றுலா தேசப்பட வழிகாட்டி மற்றும் அதன் இணையத்தளம் என்பன அறிமுகம் சிறந்த முன்மாதிரியாகும். இதற்காக என்னாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்க ஆயத்தமாக இருக்கின்றேன் என்றார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மற்றும் தேசிய புவியியல் பணிப்பாளர் ஜிம்டியோன், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் மெக்னா சிங், சர்வதேச நிதிக் கூட்டத்தாபனத்தின் சிரேஸ்ட செயற்பாட்டு அதிகாரி கிறேன்ட் ஹரீஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு பங்களிப்புச் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களின் உரிமையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

3 4 5 6 7 8 9

2