செய்திகள்

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சுருண்டது ஏமாற்றமளிக்கின்றது: சங்ககார

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சுருண்டமை குறித்து குமார்சங்ககார கவலை வெளியிட்டுள்ளார்.

இன்றைய காலிறுதி போட்டியில் ஜே.பி டுமினியே இலங்கை அணியின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தார். 26 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றி இலங்கை அணியை 133 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்கச்செய்தார்.

தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் மிகத்திறமையாக பந்துவீசியிருந்தனர். இலங்கை அணி 15 ஓவர்களில் 45ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்திருந்த நிலையிலேயே தென்னாபிரிக்க அணி தலைவர் சுழற்பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார்.

இதன் பின்னர் தென்னாபிரிக்காவின் டுமினியும், தாஹிரும் சிறப்பாக பந்துவீசி இலங்கை துடுப்பாட்ட வீரர்களை ஓட்டங்கள்எடுக்க விடாமல் கட்டுப்படுத்தி தவறிழைக்கச்செய்தனர்.

தனது இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடும் சங்கா இறுதிவரை போராடினார். குமார் சங்ககார ஓன்பதாவது வீரராக 96 பந்துகளில் 46 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சே சிறப்பானதாக விளங்கும் நிலையில் நாங்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏழு விக்கெட்களை இழந்ததே அதிக ஏமாற்றத்தை அளித்த விடயம். காலிறுதிகள் அவ்வாறே விளையாடப்படுகின்றன, நீங்கள் அதற்கு தகுதியில்லாவிட்டால் இறுதியில் ஏமாற்றமும் கவலையுமே மிஞ்சும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அணியின் வீரர்களுடன் விளையாடியது குறித்து நான் பெருமிதம் அடைகிறேன். எனது ஓரு நாள் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நான் மகிழ்ச்சிடைகிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியை பார்த்துக்கொண்டிருந்த பலர் நாங்கள் விளையாடிய விதம் குறித்து ஏமாற்றமடைந்திருக்கவேண்டும்.நாங்கள் இன்று சிறப்பாக விளையாடவில்லை,ஆனால் அவர்கள்தங்களால் முடிந்தளவு முயன்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.