செய்திகள்

சுஷ்மா சுவராஜ் இம்மாத இறுதியில் இலங்கை வருகிறார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இம் மாதம் இறுதிப் பகுதியில் இலங்கை வரவுள்ளார். சுஷ்மா சுவராஜின் விஜயம் உறுதி யாகியுள்ள தாகவும் எனினும் திகதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப் பையேற்று இலங்கை வரவுள்ள சுஷ்மா சுவராஜ் இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு ஆணைக்குழு அமர்வில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு அரச விஜயத்தை மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பயண ஏற்பாடுகள் குறித்தும் சுவராஜ் ஆராயவுள்ளார்.

அது மட்டுமன்றி இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான பொருளாதார, அரசியல், கலாசார மற்றும் வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ அரச விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். 1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திய பிரதமர் ஒரு அரச விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளமை இதுவே முதற்தடவையாக அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மோடி வட மாகாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார்.