செய்திகள்

சுஹாசினியின் சர்ச்சைப் பேச்சு! மணிரத்னம் விளக்கம்

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், மவுசை மூவ் பண்ணத் தெரிந்தவர்கள் எல்லாம் எழுத்தாளராகிவிட்டார்கள். எழுதத் தெரிந்தவர்கள்தான் படத்தை விமரிசனம் செய்யவேண்டும் என்று சுஹாசினி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மணி ரத்னம் விளக்கம் அளித்துள்ளார்.

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய சுஹாசினி மணி ரத்னம், பத்திரிகையாளர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். அவர் கூறியதாவது:

“மெட்ராஸ் டாக்கீஸில் இருந்து ஒரே ஒரு வேண்டுகோள்தான். எங்களைவிட நீங்க பலம் வாய்ந்த பேனாவை உங்க கையில வைச்சுட்டு இருக்கீங்க. எப்படி தகுதியுள்ளவர்கள்தான் படத்தில் நடிக்க முடியுமோ, ஒளிப்பதிவு பண்ண முடியுமோ, ரஹ்மான் மாதிரி மியூசிக் தெரிஞ்சவங்கதான் மியூசிக் பண்ண முடியுமோ அதேமாதிரி எழுதத் தெரிஞ்சவங்கதான் விமரிசனம் எழுதணும். இந்தப் படத்தைப் பத்தி எல்லாம் எழுதணும். நீங்க எல்லாம் இருக்கும்போது எல்லோரையும் எழுத விட்டுடாதீங்க.

முதல்ல நீங்க வந்து இந்தப் படத்தைப் பார்த்துட்டு, இந்தப் படத்தைப் பத்தின விஷயங்களை எழுதுங்க. இப்போ கம்ப்யூட்டர் உலகத்துல, மவுஸ் மூவ் பண்ணத் தெரிஞ்சவங்க எல்லாம் எழுத்தாளராயிட்டாங்க. அப்படி விடவேண்டாம். நீங்க எல்லாம் இவ்வளவு தகுதியுள்ளவர்களாக இருக்கும்போது எதுக்கு மத்தவங்களை எழுத விடறீங்க. உங்களை நம்பிதான் நாங்க இருக்கோம். அதனால், இந்தப் படத்தைப் பத்தி நல்லா எழுதணும்ணு வேண்டிக்கறேன்.” என்றார். சுஹாசினியின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் சுஹாசியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இந்நிலையில், சுஹாசினியின் கருத்து குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இயக்குநர் மணி ரத்னம் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“சுஹாசினியின் கருத்தை அவர் சொன்ன விதத்திலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. ஒருவேளை, அவர் சரியாகச் சொல்லாமலும் இருந்திருக்கலாம். அவர் தொழில்முறை விமரிசனம் பற்றி பேசினார் என எனக்குத் தெரியும். பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த அனைவரிடமும் எப்போதும் போல இந்தப் படத்துக்கும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சுஹாசினி உள்பட யார் என்ன சொன்னாலும் மக்கள் தங்கள் கருத்தைப் பகிர்வதற்கு யாரும் தடை விதிக்கமுடியாது. நீங்கள் ஒரு படம் பண்ணினால் எனக்கு அதில் ஒரு கருத்து இருக்கும். அது உங்களுக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை. திரைப்படம் என்பது பொதுமக்களின் கலை. அதைப் பற்றி கருத்து சொல்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு. இன்று, மக்கள் தங்கள் கருத்தைச் சொல்ல ஒரு தளம் உள்ளது. அது மேலும் பலமடங்கு அதிகரிக்கலாம். எனவே விமரிசனங்களை நாம் பின்னூட்டமாக எடுத்துக்கொள்ளவேண்டும். அதை வைத்து அடுத்தப் படைப்பைத் தரமானதாகக் கொடுக்கப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விமரிசனங்கள் என்பது எப்போதும் இருக்கும். அது எப்படி முன்வைக்கப்படுகிறது என்பதில்தான் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கிரிக்கெட் பார்க்கும்போது, பேட்ஸ்மேன் என்ன ஷாட் அடித்துள்ளான் என நான் விமரிசிப்பேன். விமரிசனம் செய்ய எனக்கு என்ன தெரியும்? இருந்தும் நான் விமரிசிப்பேன். அதுபோலத்தான் படம் பார்க்கச் செல்லும் எல்லோருக்கும் படத்தைப் பற்றி சொல்வதற்கு ஏதாவது இருக்கும். ஆனால், விமரிசனம் எதிர்வினைக்குத் தூண்டுவதாக இருக்கக் கூடாது. அத்தகைய கலாசாரம் ஆன்லைனில் உள்ளது. நேர்மையான விமரிசனம் என்றால் நிச்சயம் அதை வரவேற்கவேண்டும். கடல் படம் பற்றியும் விமரிசித்தார்கள். எனக்கு அதில் ஒரு பிரச்னையும் இல்லை. என் பாணியில் அதை எடுத்துக்கொண்டேன்” என்றார்.