சு.க.வுடன் இணைந்து மீண்டும் ஆட்சியமைப்பேன்: மஹிந்த ராஜபக்ஷ சபதம்
“நான் பணத்தை எனது வீட்டுக்கு கொண்டு செல்லவில்லை. பாதைகளின் அபிவிருத்திக்கே செலவு செய்தேன். என்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்கள்” எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக் ஷ, “மீண்டும் சுதந்திரக் கட்சி குழுவினருடன் இணைந்து ஆட்சியை அமைப்பேன்” என சூழுரைத்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான கொஸ்வத்தை போதிராம விகாரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்று கையில்,
“நூறு நாள் ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் நூறு பொய்களை கூறியுள்ளது. வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை நான் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சுமத்தி வருகின்றார்கள். அந்த பணத்தை நான் மெதமுலனவுக்கு கொண்டு செல்லவில்லை. அப்பணத்தில் பாதியை தான் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை பாதுகாத்து கொடுப்பதற்காக ஸ்ரீகொத்தவுக்கு முன்பாகவுள்ள வீதிக்கு காபட் செய்யப்பட்டுள்ளது. அதனை அவர்கள் மறந்துவிட்டார்கள். எதிர்வரும் காலத்தில் சு.க. குழுவினர்களுடன் புதிய அரசாங்கத்தை அமைப்பேன்
வேலை தெரியாத டாசன்கள் என்னை தேர்தலுக்கு முன்பு சிறையில அடைப்பதற்கு முயற்சி செய்கின்றார்கள். நான் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களில் ் மூன்று மாதம் சிறையில் இருந்தவன். பேய்களுக்கு பயந்தால் சுடுகாட்டில் வீடு கட்டமுடியாது. நான் இதற்கு பயந்தவன் அல்ல.
கடந்த காலத்தில் இருந்த எமது அரசாங்கம் நாட்டை அபிவிருத்தி செய்தது. அரச சேவையாளர்களுக்கு மோட்டார் வண்டி வழங்கியது. தற்போது அந்த வேலைத்திட்டங்கள் எங்கே? தேயிலை இறப்பர் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக கூறினார்கள். தற்போது அவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதா?
தேயிலைக்கு 80 ரூபாவும் இறப்பர் 300 ரூபாவாகவும் உயர்த்தப்படவுள்ளதாக கூறினார்கள். தற்போது அவர்கள் கூறியது நிறைவேற்றப்பட்டுள்ளதா? மக்களுக்கு இந்த அரசாங்கம் என்ன செய்தது. இதை மக்கள் தற்போது புரிந்த வண்ணம் உள்ளார்கள்.
இன்று நடிகை ஒருவர் கூறுகின்றார் நாட்டில் பணம் இல்லை என்று. நாட்டின் அமைச்சர் ஒருவர் கூறுகின்றார் பணம் இருப்பதாக இது புதுமையான கதையாக உள்ளது. திறைசேரியில் கோடிக் கணக்கான பணம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் உரிமை இல்லாத ஒருவரால் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
எமது நாட்டின் மத்திய வங்கி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் எமது நாட்டை சேர்ந்தவர் அல்ல. அவர் சிங்கப்பூரை சேர்ந்தவர்.மத்திய வங்கி தலைவராக நியமிக்கப்படுபவர் எமது நாட்டின் உரிமையை பெற்றிருக்க வேண்டும். தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர் இலங்கை நாட்டின் உரிமை இல்லாத ஒருவர். எனவேதான் அவர் மத்திய வங்கி தலைவர் பதவியை ஏற்றதற்காக சத்தியப்பிரமானம் செய்ய வில்லை.
இப்படிபட்ட ஒருவர் பணத்திற்கு கையொப்பமிடுவது பெரிய தவறாகும். இது குறித்து தற்போது பிரச்சினைகளும் எழுந்துள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மேலும் தெரிவித்தார்.