செய்திகள்

சு.க.வை பாதுகாத்தவர்கள் பட்டியலில் பிரபாகரனும் உள்ளார் : பிரதமர் சபையில் தெரிவிப்பு

எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க போன்றோரினால் பாதுகாக்கப்பட்டிருந்த அதேநேரம், 2005 ஆம் ஆண்டில் பிரபாகரனாலேயே அக்கட்சி பாதுகாக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்துள்ளார்.

பராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; ‘தேர்தல் முறைமை மாற்றம் பற்றிப் பேசுவதற்கு தற்போது ஆவணமொன்று இருக்கிறது. மக்களின் அபிப்பிராயங்களை அறிந்து கொள்வதற்காகவே 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், தினேஷ் குணவர்த்தன தலைமையிலான தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான தெரிவுக்குழுவின் அறிக்கையைப் பற்றியும் கலந்துரையாடமுடியும். மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்று முன்செல்வதே இங்கு எமது தேவையாகவுள்ளது. இதேநேரம், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசொன்றை ஏற்படுத்தி 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சமர்ப்பிக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்தாபித்தார். 1956 ஆம் ஆண்டு தேர்தலுக்கு வரமுடியாத நிலைமை இருந்தபோது தமது சொத்துக்களை விற்று தேர்தலுக்குப் பிரவேசித்து அவர் தான் கட்சியை காப்பாற்றினார். பின்னர் சுதந்திரக்கட்சி சிதறுண்டு சென்றதன் பின்னர் சிறிமாவோ பண்டாரநாயக்கவே அக்கட்சியைக் காப்பாற்றினார். 1977 ஆம் ஆண்டின் பின்னர் சுதந்திரக் கட்சி மீண்டும் சிதறுண்டு சென்றபோது, 1994 ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலொன்றுக்குப் பிரவேசித்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவே அக்கட்சியை காப்பாற்றினார். எனினும், 2005 ஆம் ஆண்டில் பிரபாகரன்தான் சுதந்திரக்கட்சியை காப்பாற்றினார்.

அந்த தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை பிரபாகரன் தடுக்காமல் இருந்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றிருக்க மாட்டார். அதேபோல், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்திருந்தால், பேசும்யாரும் இங்கு வந்திருக்க மாட்டார்கள். சுதந்திரக் கட்சியில் மைத்திரிபால சிறிசேனவைத் தலைவராக்கிவிட்டு, அவரை அதில் இருந்து நீக்குவதற்காக மறைமுகமாக செயற்படுகின்றனர்” என தெரிவித்துள்ளார்.