செய்திகள்

சூடுபிடிக்கும் ஜெனீவா விவகாரம்: அமெரிக்கா விரைகின்றார் மங்கள

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த எதிர்வரும் வியாழக்கிழமை 12 ஆம் திகதி அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா சில சாதகமான நகர்வுகளை மேற்கொள்ளக் கூடும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மேரி ஹாப் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் தொடர்பாகவே இந்தப் பேச்சுக்களின் போது இலங்கை அமைச்சர் முக்கியமாகக் கவனத்தைச் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க இருப்பதால், ஜெனீவா அறிக்கை வெளியிடப்படுவதை ஒத்திவைக்க வேண்டும் என இலங்கை வலியுறுத்துவதாகத் தெரிகின்றது. மங்கள சமரவீரவும் தன்னுடைய அமெரிக்க விஜயத்தில் இதனையிட்டே முக்கியமாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியை சந்திக்கும் மங்கள சமரவீர, ஜெனிவா விவகாரம் குறித்தே முக்கியமாக கவனம் செலுத்தவுள்ளார். இலங்கை வருமாறு ஜோன் கெரியை அவர் அழைப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாசிங்டனில் நேற்று முன்தினம் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்கா வரவுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் மேரி ஹாப்பிடம் கேள்வி எழுப்ப்ப்பட்டது.

அதற்குப் பதிலளித்த இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர், அடுத்தவாரம் நடக்கவுள்ள இந்தச் சந்திப்புத் தொடர்பான அட்டவணைப்படுத்தப்பட்ட அறிவிப்புகள் ஏதும் கைவசம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

“எனினும், நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம், ஜனநாயக ஆட்சி, பொறுப்புக்கூறல், உள்ளிட்ட விவகாரங்களுக்குத் தீர்வுகாண இலங்கையின் புதிய அரசாங்கம், எடுத்துள்ள நடவடிக்கைகளை நாம் வரவேற்றுள்ளோம். நிச்சயமாக, இங்கு சில சாதகமான நகர்வுகளை காணமுடிகிறது. அடுத்தவாரம் மேலதிகமான விபரங்களை எதிர்பார்க்க முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.