செய்திகள்

சூதாட்டத்தில் தொடர்புடைய சென்னை வீரர்களை பாதுகாக்க நினைக்கும் என்.சீனிவாசன்: லலித் மோடியின் அடுத்த குண்டு

ஐ.பி.எல். லீக் தொடரின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. நிதி முறைகேடு தொடர்பாக கடந்த 2010-ம் ஆண்டில் அந்த பதவியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டு தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார்.
ஐ.பி.எல். லீக் தொடரை வைத்து நடத்தப்பட்ட சூதாட்டம் குறித்து 2013-ம் ஆண்டில் ஐ.சி.சி., தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு, லலித் மோடி அனுப்பிய ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரெய்னா, ஜடேஜா, பிராவோ உள்பட குறைந்தது நான்கு சென்னை அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக லஞ்சம் மட்டுமன்றி, சில ‘பிளாட்டுகளும்’ பரிசாக பெற்றனர். பிரபல கிரிக்கெட் சூதாட்ட ‘புக்கி’ என்று சந்தேகிக்கப்படும் தொழிலதிபர் பாபா திவான் என்பவரிடம் இவர்கள் மூவரும் நெருங்கிய தொடர்பில் இருந்தனர். இது இவர்களின் நேர்மையை கேள்விக்குறியாக்கியது. இதெல்லாம் உண்மையாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை உண்மையாக இருந்தால், இன்னும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம்,’ என, தெரிவித்திருந்தார்.

மேலும், பிரிமியர் லீக் தொடரின்போது ஒரு ரூ. 10 ஆயிரம் கோடி வரை சூதாட்டம் நடக்கிறது. இதை பல ஆண்டுகளாக கூறுகிறேன். அப்படி இருந்தும் இதைத் தடுக்க யாரும் முன்வரவில்லை,’ எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் விசாரித்து வருகின்றது.

இந்நிலையில், அவரால் குற்றம்சாட்டப்பட்டுள்ள வீரர்கள் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? என லலித் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். குற்றச்சாட்டுக்குள்ளான வீரர்களை அவர் பாதுகாக்க நினைக்கிறாரா? என்பதை அறிந்த கொள்ள நான் மட்டுமல்ல; இந்தியா கூட ஆவலாக உள்ளது. தனது பதவிக்குரிய நம்பகத்தன்மைக்கு ஏற்ப சீனிவாசன் செயல்படவில்லை என்றால்.., கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.