செய்திகள்

செந்தில் தொண்டமான் பொலிஸ் நிலையத்தில் சரண்

கைது செய்வதற்கான பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமான் இன்று காலை பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் தன்னுடைய சட்டத்தரணியுடன் வந்து சரணடைந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

செந்தில் தொண்டமான், அவரது இடத்திலிருந்து தலைமறைவாகிவிட்டார் எனவும், அவர் வெளிநாடு செல்வதைத் தடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், நாட்டை விட்டு தப்பிசெல்லாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

“தபால் விநியோகிக்கும் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

“அவர், நாட்டைவிட்டு தப்பிசெல்லாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் வெளிநாடுக்கு தப்பிசெல்ல முற்பட்டால் அவரை உடனடியாக கைது செய்யுமாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க மற்றும் மத்தல சர்வதேச விமான நிலையங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் செந்தில் தொண்டமான் அவரது பிரதேசத்திலிருந்து தப்பிசென்றுவிட்டார் அதன்காரணமாகவே  அவரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவர், நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிக்க வாக்குசாவடிக்கு வரவில்லை” என அஜித் ரோஹண மேலும் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே இன்று காலை செந்தில் தொண்டமான் சரணடைந்தார்.