செய்திகள்

சென்னையில் இன்று மோதும் கொல்கத்தா- சென்னை

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடக்கும் 28–வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்– கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது.

தோனி தலைமையிலான சென்னை அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்றது. டெல்லியை ஒரு ரன் வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 45 ரன்னிலும், மும்பையை 6 விக்கெட்டிலும், பெங்களூரை 27 ரன்னிலும், பஞ்சாப்பை 87 ரன்னிலும் தோற்கடித்தது. ராஜஸ்தானிடம் 8 விக்கெட்டில் தோற்றது.

சென்னை அணியில் தொடக்க வீரர்களான மெக்கல்லம், சுமித் சிறப்பாக ஆடி வருகின்றனர். மேலும் ரெய்னா, டோனி, டுபெலிசிஸ் ஆகியோரும் தங்களது பங்களிப்பை அளித்து வருகிறார்கள். ஆல்–ரவுண்டரில் பிராவோ இருக்கிறார். பந்துவீச்சில் வேகப்பந்து வீரர் ஆசிஷ் நெக்ரா நல்ல நிலையில் உள்ளார்.

தொடக்க ஆட்டங்களில் திணறிய சுழற்பந்து வீச்சாளர்கள் பஞ்சாப்புக்கு எதிராக சிறப்பாக விளையாடினர். இதனால் பந்துவீச்சு பலம் பெற்று உள்ளது. அனைத்து துறையிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.

சென்னையில் நடந்த 3 போட்டியிலும் சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 6–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.

காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வி பெற்று உள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை.

அந்த அணியில் ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்யகுமார் யாதவ், மார்னே மார்கல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

பந்துவீச்சு சர்ச்சையில் சிக்கியுள்ள சுனில்நரீன் இன்றைய போட்டியில் ஆடமாட்டார். இது கொல்கத்தாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

சென்னை அணிக்கு எதிராக அனைத்து வகையிலும் ஈடுகொடுத்து விளையாட கொல்கத்தா போராடும். அந்த அணி 4–வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.