சென்னையில் ஒரே மாதத்தில் 21 பாலியல் தரகர்கள் கைது
தமிழ்நாடு மாநிலத்தின் சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 21 பாலியல் தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 25 பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் பாலியல் தொழிலுக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்பு, மசாஜ் மையங்களில் போலீஸார் மாறுவேடத்தில் சென்று ரகசிய விசாரணை செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை தொடர்ச்சியாக மீட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக எடுக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கையின் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு, பங்களாக்கள், மசாஜ் மையங்கள் ஆகியவற்றில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 25 பெண்கள் மீட்கப்பட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளையில், இளம் பெண்களை மிரட்டியும், ஏமாற்றியும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த 21 தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது போலீஸார் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என சென்னை காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.