தலைப்பு செய்திகள்

அகவை 80 இல் விக்னேஸ்வரன்

அகவை 80 இல் விக்னேஸ்வரன்

யதீந்திரா

நீதியசரர் கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் இன்று அகவை 80 இல் கால்பதிக்கின்றார். நீதித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்து பின்னர், இலங்கை உச்சநீதிமன்றத்தின் நீதியரசராக உயர்ந்தவர். இந்தக் காலத்தில் அவர் தமிழ் பற்றாளர், சைவசமய ஈடுபாட்டாளர், தமிழ்த் தேசிய இன உணர்வாளர் எனப் பலமுகங்களில் அறியப்பட்டிருந்தார். விக்னேஸ்வரன் உச்சநீதிமன்ற நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்தபோது, அவர் ஆற்றிய உரை அப்போது அதிகம் பேசப்பட்ட ஒன்று அதே வேளை சிங்கள கடும்போக்குவாதிகளால் அது அதிகம் எதிர்க்கப்பட்ட ஒன்றாகவும் இருந்தது. அன்றைய சூழலில், சிங்கள ஆளும்வர்க்கத்தின் கூடாரத்திற்குள் இருந்துகொண்டே அவ்வாறானதொரு உரையை நிகழ்த்த வேண்டிய தேவை எதுவும் விக்கினேஸ்வரனுக்கு இருந்திருக்கவில்லை. தனது உரை சிங்கள ஆளும்வர்க்கத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது என்பதை அறிந்தே விக்னேஸ்வரன் அதனைச் செய்தார்.

சிங்கள நீதித்துறைக்குள் இருந்த போது, அந்த நீதித்துறைக்கு  எந்தளவிற்கு விசுவாசமாக இருந்தாரோ, அந்தளவிற்கு தனது இனத்திற்கும் அந்த இனத்தின் நியாயங்களுக்கும் அவர் விசுவாசகமாக இருந்தார். சர்வதேச மோதல் ஆய்வுக்குழுவின் வார்த்தையில் சொல்வதானால் இலங்கையின் நீதித்துறை என்பது, அரசியல் மயப்படுத்தப்பட்ட நீதிமன்றங்களையும் சமரசப்படுத்தப்பட்ட உரிமைகளையும் (Sri Lanka’s Judiciary Politicised Courts, Compromised Rights) கொண்டவையாகும். இந்த நீதித்துறைக்குள் விக்னேஸ்வரன் ஒரு தமிழராகவும் இலங்கையின் நீதிபதியாகவும் இருந்தார் என்பதுதான் உண்மை. விக்னேஸ்வரன் தனது இனத்தின் உரிமைகள் மீது காண்பித்த சமரசமற்ற விசுவாசமும் ஈடுபாடும்தான் அவரை தமிழ்த் தேசிய அரசியலுக்குள் கொண்டுவர வேண்டும் என்னும் எண்ணத்தை பலருக்கும் கொடுத்தது. விக்கினேஸ்வரனது அரசியல் பிரவேசம் ஒரு தற்செயல் நிகழ்வுதான் ஆனால் அந்த தற்செயல் நிகழ்வானது, இன்று அவரை தமிழ்த் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக்கிவிட்டது.

2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டதன் மூலம் தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத ஒரு துறைக்குள் அவர் கால்பதிக்க நேர்ந்தது. அவர் வடக்கு மாகாண சபையின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னணியில் அவர் தெரிவித்திருந்த கருத்துக்களும் இப்போது அவர் தரித்துநிற்கும் இடமும் அவர் அதிகம் அரசியலால் புடம்போடப்பட்டதன் விழைவுகள்தான். 2013 ஜூலையில் விக்னேஸ்வரன் சண்டேடைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இப்படிக் கூறியிருந்தார். லண்டனிலிருந்து தன்னை தொடர்புகொண்ட ஒரு பத்திரிகையாளர் ஒருவர் சுயநிர்ணய உரிமை தொடர்பிலும் அதனோடு தொடர்புடைய விடயங்களை பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நான் இவ்வாறு பதிலளித்திருந்தேன். இவைகள் எல்லாம் அரசியல்வாதிகளுக்குரியவை. நான் ஒரு அரசியல்வாதியல்ல. நான் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கான நிவாரணங்களை ஏற்படுத்திக்கொடுப்பதிலேயே கரிசனை கொண்டிருக்கிறேன். இதனை முன்வைத்து அப்போது நான் ஒரு கட்டுரையையும் எழுதியிருந்தேன். இவ்வாறு கூறும், விக்னேஸ்வரன் ஜயா ஒரு அரசியல்வாதியாகும் காலம் விரைவில் ஏற்படும். அதிலிருந்து அவர் ஒருபோதுமே விலகிச்செல்ல முடியாது. இன்று விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்னும் ஒரு கட்சியின் தலைவர், தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்தும் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை. ஒரு மாற்றுத் தலைமைக்கான குறியீடு. இவைகள் எவையுமே விக்னேஸ்வரன் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. அவரது விருப்பங்களையும் தாண்டி அவரை தழுவிக்கொண்டவையே இவையனைத்தும். முன்னர் அவர் கூறிய பல கூற்றுக்களை அவரே மறுதலிக்க நேர்ந்திருக்கிறது. முன்னர் சரியென்று அவர் நம்பிய விடயங்கள் பலவற்றிலிருந்தும், அவர் நம்பிய நபர்கள் சிலரிலிருந்தும், அவர் விலகியும் விலத்தியும் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விக்னேஸ்வரன் என்னும் தலைவர், வடக்கு மாகாண சபை முதலமைச்சர் என்பதிலிருந்து, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் என்னும் நிலைக்கு மாறிய காலகட்டத்தின் விளைவுகளாகும்.

அகவை 80 இல் கால்பதிக்கும் விக்னேஸ்வரனுக்கு முன்னால் இன்னும் பல அரசியல் நிகழ்வுகளும், அந்த நிகழ்வுகள் தரும் சவால்களும் காத்திருக்கின்றன. வடக்கு மாகாண சபை முதலமைச்சராக இருந்த காலத்திலும் அதன் பின்னரான அரசியல் செயற்பாடுகளின் போதும், விக்னேஸ்வரன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனது உறுதியை தளரவிட்டதில்லை. தான் கூறும் வார்த்தைகளுக்கும் அதனை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகளுக்கும் நேர்மையான ஒருவராகவே இருந்திருக்கிறார். 2013 இல் வடக்கு மகாண சபையில் போட்டியிடுவதற்கு முன்னர் அவர் தனிப்பட்ட ரீதியில் சில பார்வைகளை வரித்துக்கொண்டிருந்த போதிலும் கூட, 2013 அக்டோபரில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில், விஞ்ஞாபனமொன்றை முன்வைத்து போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர், அதற்கு மாறாக ஒருபோதும் அவர் பேசியதில்லை. அதிலிருந்து நாம் விலகிச்செல்ல வேண்டுமாயின் மீண்டுமொரு விஞ்ஞாபனத்தை முன்வைத்துத்தான் அதிலிருந்து விலக வேண்டுமென்று உறுதியாக இருந்தார். அந்த உறுதியே அவரை பலரும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு மக்கள் தலைவன் மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளிலிருந்து, மக்களின் ஆணையின்றி ஒரு போதும் விலகமுடியாது என்பதே அவரது அரசியலாக இருக்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் அவருக்கு முன்னால் மீண்டுமொரு சவால் குறுகிடுகின்றது.

அண்மையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட, ஐந்து கட்சிகள் கூட்டாக ஒரு இணக்கப்பாட்டிருற்கு வந்திருந்தன. இதனடிப்படையில் 13 அம்ச கோரிக்கைள் அடங்கிய ஆவணம் ஒன்றில் அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டிருந்தனர். அதில் விக்னேஸ்வரன் அவர்களும் ஒருவர். அந்த அடிப்படையில், இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் அதற்கு அமைவாகவே அடுத்த கட்டம் தொடர்பில் சிந்திப்பதென்றும் முடிவுகாணப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் வெளியான செய்திகளோ ஒன்றுக்கு பின் ஒன்று முரணாக இருக்கின்றன. ஆவணம் இல்லாமல் சந்திக்கப் போவதாக ஒரு கட்சி கூறுகின்றது. இதற்கிடையில் தனித்தனியான சந்திப்புக்கள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது. கூட்டமைப்பு தனியாக பேசியதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறாயின் விக்னேஸ்வரனும் கையெழுத்திட்ட அந்த ஆவணத்தின் பெறுமதி என்ன? இந்த ஆவணத்திலிருந்து கட்சிகள் விலகிச் செல்லுமாக இருந்தால் அந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பெறுமதி என்ன? குறித்த ஆவணத்தின் அடிப்படையில் இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிடப்பட்ட போதிலும் இதுவரை அது நிகழவில்லை. பிரதான வேட்பாளர்களில் ஒருவர் அதனை எற்கனவே நிராகரித்துவிட்டார். நிலைமைகளை உற்றுநோக்கும் போது, காலத்தை இழுத்தடித்துவிட்டு பின்னர் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடும் தேர்தல்கால வாக்குறுதிகள் போல்தான் இவையுமா? என்னும் கேள்வியே எழுகின்றது. இது அகவை 80 காணும் விக்னேஸ்வரன் அவர்கள் எதிர்கொள்ளப் போகும் புதிய சவால். இதனை அவர் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றார் என்பதும் அவரது அரசியல் வாழ்வின் பதிவாக மாறும்.

விக்னேஸ்வரன் திட்டமிட்டு அரசியலை தெரிவுசெய்யவில்லை ஆனால் அவர் அரசியலில் பிரவேசித்த பின்னர், தமிழ்த் தேசிய அரசியலில் நிகழும் ஒவ்வொரு விடயங்களும் அவரது வாழ்வை செதுக்கியிருக்கிறது. அவர் செதுக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் விளைவுகளே அவரது அரசியல் நகர்வுகள். ஓவ்வொரு நகர்வுகளும் அவரைச் செதுக்கியிருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் சூழலை எதிர்கொள்ளவும் அவர் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டியிருக்கிறது. விக்னேஸ்வரன் எந்தளவிற்கு உறுதியாக இருக்கின்றாரோ அந்தளவிற்கு அவர் தமிழ்த் தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத குறியீடாக இருப்பார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *