Search
Sunday 22 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்க வேண்டிய உறுதி மொழி

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்கள் வழங்க வேண்டிய உறுதி மொழி

அரசாங்க துப்பாக்கி நாட்டின் எந்தவொரு பிரஜையையும் குறி வைக்காத ஒரே யுகம் தனது ஆட்சிக்காலமேயாகுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டின் 62 இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் அப்போதைய ஆட்சிக்கெதிராக வாக்களித்தது இந்த சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்குமேயாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இன்று (18) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் அபேட்சகராக போட்டியிட்டாலும் அவர் போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மக்களுக்கு உறுதிமொழி வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
முழு சமூகத்தையுமே அழிவுக்குள்ளாக்கிவரும் போதைப்பொருள் கடத்தலை ஒழித்துக் டி கட்டுவது காலத்தின் முக்கிய தேவையாகுமென்றும் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், போதைப்பொருள் கடத்தலுக்கு எத்தகைய அரசியல் அனுசரணையும் வழங்கப்படக் கூடாதெனத் தெரிவித்தார்.
எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து விடயங்களையும் மாற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவர்களது கொள்கையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையொன்றைப் போன்றே எந்தவொரு நாட்டையும் சார்ந்திருக்காத வெளிநாட்டுக் கொள்கையொன்றும் நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பலப்படுத்துவதும் அவர்களது அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இன்று சுதந்திரமாக பேசுவதற்கு மட்டுமன்றி விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களைக்கூட முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதென்றும் இதற்கு முன்னர் இருந்த தலைவர்களுக்கு அத்தகைய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்குமானால் அவர்கள் பாரதூரமான நிலைமைகளுக்கே முகங்கொடுத்திருக்க வேண்டி இருந்திருக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
யார் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும், கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தியது மட்டுமன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தடையாக இருந்த இலஞ்சம், ஊழல், மோசடிகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
சர்வதேச சக்திகளின் காரணமாக பாதிக்கப்பட்டு சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் ஏற்பட்ட பயங்கரவாத நிலைமைகளை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *