Search
Thursday 14 November 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அணுகுமுறையில் மாற்றம் அவசியம்!

அணுகுமுறையில் மாற்றம் அவசியம்!

பி.மாணிக்கவாசகம்-

தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் நிலவிய அரசியல் புகைச்சல்கள் பூதாகரமாகி நான்கு கட்சிகளாக இருந்த அந்த அமைப்பு மூன்று கட்சிகளாகச் சுருங்கியிருக்கின்றது. இந்த சுருக்கத்தைச் சரி செய்வதற்காக கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றும், கூட்டமைப்பின் நிறுவனக் கட்சிகளில் ஒன்றுமாகிய டெலோ, ஈபிஆர்எல்எவ் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற வராதராஜப் பெருமாள் அணியை உள்ளடக்குவதற்கான அழைப்பை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் மனங்களை வென்றிருந்த ஓர் அரசியல் அமைப்பாகும். கூட்டமைப்பு, கூட்டு அமைப்பாக அல்லாமல் ஒன்றிணைந்த ஓர் அரசியல் சக்தியாக அதிக பலத்துடன் செயற்பட வேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்பியிருந்தார்கள். இன்னமும் விரும்புகின்றார்கள். ஆனால், பல தடவைகள் இந்தப் பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டதைப்போல மக்கள் ஒற்றுமையாக ஓர் அணியில் தமக்குப் பின்னால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையாகத் திரண்டிருக்க வேண்டும் என்று வாய்கிழிய பிரசாரம் செய்து வருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தமக்குள் ஒற்றுமையாகச் செயற்படுவதற்குத் தவறியிருக்கின்றார்கள்.

தங்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அல்லது கருத்து முரண்பாடுகள். கருத்து வேறுபாடுகளுக்கு இணக்கமான முறையில் முடிவு காண முடியாமல் தடுமாறியிருக்கின்றார்கள். இந்தத் தவறும் தடுமாற்றமும் இன்று நேற்றல்ல. நீண்ட காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

வடக்கில் புதிய கூட்டணி

இதனால், காலத்துக்குக் காலம் கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் பிரிந்து சென்றிருக்கின்றன. அந்த வகையில் முதலில் தமிழ்க்காங்கிரஸ் பிரிந்து சென்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியைத் தொடங்கியது. தமிழர் விடுதலைக்கூட்டணியும் கூட்டமைப்பில் இருந்து விலகிய போதிலும், தமிழ்க்காங்கிரஸ் விலகிச் சென்றதைப் போன்று வெளிப்படையான அரசியல் விடயமாக அது அமையவில்லை.

மூன்றாவதாக ஈபிஆர்எல்எவ் கட்சி வருகின்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பயன்படுத்துகின்ற தமிழரசுக் கட்சியின் தேர்தல் சின்னமாகிய வீட்டுச் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை. பிரிந்து சென்று போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றது.

அது மட்டுமல்லாமல் கூட்டமைப்பில் இருந்து ஏற்கனவே விலகியுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து இந்த உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் களமிறங்கப் போவதாக ஈபிஆர்எல்எவ் கட்சி தெரிவித்துள்ளது. இதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரும் உறுதி செய்திருக்கின்றார்.

இந்தப் புதிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ் மக்கள் பேரவையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இணைத்தலைவர்களில் ஒருவராகிய வடமாகாண முதலமச்சர் விக்னேஸ்வரன் ஏற்றுக்கொள்ளவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மற்றுமொரு இணைத்தலைவராகிய வசந்தராஜாவும் அதேநிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனால், சுரேஷ் மற்றும் கஜேந்திரகுமார் இருவரும் இணைந்துள்ள புதிய கூட்டணி தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது குறித்து குழப்பகரமான நிலைமையே காணப்படுகின்றது.

புதிய கூட்டணியும் தமிழ் மக்கள் பேரவையும்

தமிழ் மக்கள் பேரவையானது அரசியலில் ஈடுபடமாட்டாது. தேர்தல்களில் போட்டியிடுகின்ற எண்ணம் அதற்குக் கிடையாது என்று பேரவை உருவாக்கப்பட்டபோதே தெளிவாகப் பல தடவைகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் புதிய கூட்டணிக்கு பேரவை ஆதரவு தெரிவிக்குமானால் அது அதனுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கு முரணானதாக இருக்கும். எனவே, அத்தகைய ஒரு நிலைப்பாட்டை தமிழ் மக்கள் பேரவை எடுக்கக்கூடாது. அத்தகைய நிலைப்பாட்டை அனுமதிக்க முடியாது என்பதற்காகவே புதிய கூட்டணிக்கு தேர்தலில் தமிழ் மக்கள் பேரவை ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ் மக்கள் பேரவையின் மூனறு இணைத்தலைவர்களில் இரண்டு இணைத்தலைவர்களாகிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் வசந்தராஜா ஆகிய இருவரும் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து அதன் பங்காளிக்கட்சிகளில் ஒன்றாகிய ஈபிஆர்எல்எவ் விலகிச் செல்வதன் மூலம் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைவது குறித்து தமிழ் அரசியல் வட்டாரங்களில் கவலை வெளியிடப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு வலுமிக்கதாகச் செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இவ்வறான பிரிவு எற்படுவது ஏற்புடையதல்ல. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ் மக்களின் எதிர்கால அரசியலில் அக்கறையும் கொண்டிருப்பவர்களினால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதேநேரத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகள் காலத்திற்கும் தமிழ் மக்களின் எதிர்கால அரசியலுக்கும் உகந்ததாக அமையவில்லை என்ற காரணத்தினால் புதிய செயலணி உருவாக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே, தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் பிரிந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியுடன் புதிய கூட்டணியை உருவாக்கியதையடுத்து, பேரவைக்குள்ளேயும் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. ஈபிஆல்எல்எவ் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழ் மக்கள் பேரவையில் முக்கிய பங்காளிகளாக இணைந்திருப்பதே இதற்குக் காரணமாகும்.

முரண்பாடுகள்

இந்த நிலைமைகள் ஒருபக்கம் இருக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் கூட்டமைப்பின் தலைமைக்கும், ஏனைய கட்சிகளுக்கும் இடையில் அரசியல் ரீதியாக இருக்க வேண்டிய நெருக்கமான செயற்பாட்டு உறவுகள் இல்லாத காரணத்தினாலேயே ஈபிஆர்எல்எவ் கட்சி கூட்டமைப்பைவிட்டு விலகி புதிய கூட்டணியில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட நேர்ந்திருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்புக்குள்ளேயே தொடர்ச்சியாக ஈபிஆர்எல்எவ் கட்சி விமர்சனங்களை முன்வைத்து வந்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அதன் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக்கட்சியின் தலைவர்களும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதில்லை. தாங்களாகவே முடிவுகளை மேற்கொள்கின்றார்கள்.
தமிழ் மக்கள் சார்பான அரசியல் விடயங்களிலும் அவர்களுடைய பிரச்சினைகளிலும் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள், முன்னெடுப்புக்கள், நிலைப்பாடுகள் என்பன குறித்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்குக்கூட தெரிவிப்பதில்லை. ஏதேச்சதிகாரமாக அவர்களே தமிழ் மக்கள் சார்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பிலும் முடிவுகளை எடுக்கின்றார்கள். நிலைப்பாடுகளைத் தீர்மானிக்கின்றார்கள் என்று கூட்டமைப்பின் தலைமை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த விமர்சனங்கள் படிப்படியாக ஊடகங்களிலும் வெளிவரத்தொடங்கின.

ஆயினும், பங்காளிக்கட்சிகளுடன் விடயங்களைக் கலந்தாலோசித்து செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற விடயத்தில் கூட்டமைப்பின் தலைமையிடம் எதிபார்க்கப்பட்ட மாற்றங்கள் நிகழவில்லை. யுத்த மீறல்கள், யுத்தகால மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பான விடயங்களை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட விடயத்தில் ஐநா தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்காவின் விருப்பத்திற்கு அமைவாக கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்திருந்த போதிலும் கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு அது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே, கால அவகாசம் வழங்கப்படக் கூடாது என கோரி ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு ஒன்பது பேர் வரையில் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தார்கள். அவ்வாறு அவர்கள் கடிதம் அனுப்பியமை குறித்து பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைமை கடுமையாகக் கேள்விகளைக் கேட்டிருந்தது.

அவ்வாறு கூடிய நாடாளுமன்ற குழு கூட்டத்திலேயே அரசாங்கத்திற்கு இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதற்கு கூட்டமைப்பினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்த விடயம் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தெரியவந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தகக்து.

அதேபோன்று புதிய அரசியலமைப்பின் ஊடான அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைமை நியாயப்படுத்தும் தொனியில் கருத்துக்களை வெளியிட்ட போதிலும், அது தொடர்பான பின்னணி விடயங்கள் அல்லது உண்மையான நிலைமைகள் குறித்து ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ அல்லது பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கோ தெரிவிக்கப்படவில்லை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

நாடாளுமன்றத்தில் அவைத்தலைவரிடம் முறையீடு

இந்த நிலையில் அரசியலமைப்புக்கான வழிகாட்டல் குழுவினால் வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை குறித்து முதலில் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்துரையாட வேண்டும் என்று ஈபிஆர்எல்எவ் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு அல்லது கூட்டமே முதலில் நடத்தப்பட்டது. இவ்வாறு கூடியதன் பின்னர் நடத்தப்பட்ட நாடாளுமன்ற கூட்டத்தில் ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக, அந்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாகவே இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் தலைவரான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்பது ஓர் இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட ஒரு கட்சியாகவோ அல்லது அமைப்பாகவோ கட்டமைக்கப்படவில்லை. அத்தகைய நிலையில் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இடைக்கால அறிக்கை தொடர்பான முக்கியமான விவாதத்தில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டமை நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக மோசமான மீறலாகவே பலராலும் நோக்கப்படுகின்றது.

ஒரே கட்சியைச் சேர்ந்த தலைவருக்கும் உறுப்பினராகிய நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அல்லது முரணான நிலைமை காரணமாக இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பாக அவைத்தலைவரிடம் சிவசக்தி ஆனந்தன் முறையீடு செய்ததும் நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரையில் இடம்பெற்றிராத ஒரு சம்பவமாகவே கருதப்படுகின்றது. இத்தகைய ஒரு நிலையில்தான் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகிய தமிழரசுக்கட்சி உச்சகட்ட ஜனநாயகம் உள்ள கட்சியென வர்ணிக்கப்பட்டிருக்கின்றது.

அணுகுமுறையில் மாற்றம் அவசியம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இறுக்கமான ஓர் அரசியல் அமைப்பாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதற்காகவே அதனையோர் அரசியல் கட்சியாக அல்லது அரசியல் அமைப்பாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது. தமிழ் மக்களுடைய மிக முக்கியமான அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு மற்றும் அதன் கருத்துக்கள் வலுவாக வெளிப்படுவதற்கு இந்தக் கட்டமைப்பு அவசியம் என பலராலும் கருதப்பட்டது.

கூட்டமைப்பு ஓர் இறுக்கமான கட்டமைப்பாகச் செயற்படுகின்ற தருணத்திலேயே அதன் செயற்பாடுகள் அனைத்துக்கும் அதில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்புடையவர்களாக இருப்பார்கள். அதேவேளை, ஒத்த கருத்துடையவர்களாகவும் ஒரே குரலில் பேசுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். அத்தகைய கட்டமைப்பு இல்லாத காரணத்தினாலேயே பகூட்டமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட பல சந்தர்ப்பங்களில் ஒத்த கருத்துடையவர்களாக ஒத்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

அதேவேளை, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்படாமல் தங்களுக்குள் முரண்படும்போது ஒற்றுமையற்றவர்களாக வெளியில் தோற்றமளிக்கும்போது கூட்டமைப்பையே மலைபோல நம்பியிருக்கின்ற தமிழ் மக்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாக நேர்கின்றது. அது மட்டுமல்லாமல் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழக்கின்ற ஆபத்தான நிலைமையும் உருவாகக்கூடும். அத்தகைய ஒரு நிலைமை தற்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம், இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான போராட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் காணப்படுகின்றது. இது மிகவும் துரதிஸ்டவசமான ஒரு நிலையாகும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காகவே செயற்படுகின்றது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆயினும், அதன் செயற்பாடுகள் வலுவுள்ளதாக பிரச்சினைகளுக்குத் தீர்வை நோக்கி நகர்ந்து செல்வதாக பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தோற்றவில்லை. கூட்டமைப்பு இறுக்கமான கட்டமைப்பைக் கொண்டிருக்காததே இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைமை ஏனைய பங்காளிக்கட்சிகளுடனும் அவற்றின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் புரிந்துணர்வோடும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை அரசியலில் பழுத்த அனுபவமுடைய தலைவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அது அவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்திருக்க வேண்டும்.

எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமை மீதும் தலைமைத் தலைவர்கள் மீதும் முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களை அவர்கள் ஆரோக்கியமான விமர்சனங்களாக நோகக வேண்டும். அவற்றை தலைமைக்கட்சிக்கு எதிரான அரசியல் கருத்தாகவோ அல்லது அந்தக் கட்சியைப் பாதிக்கச் செய்வதற்காக மன்வைக்கப்படுகின்ற கருத்தாகவோ கருதக்கூடாது.

தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான செயலாற்றல் மிக்கதோர் அரசியல் தலைமை இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களினதும் தமிழ் மக்களுடைய அரசியல் நலன்களில் ஆர்வமுடையவர்களினதும் தமிழ் அரசியல் அபிமானிகளினதும் கருத்தாகும். அதுவே அவர்களுடைய நிலைப்பாடும் ஆகும்.

வலுவான செயலாற்றல் மிக்க அரசியல் அமைப்பின் ஊடாகவே சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் சித்தாந்தத்தைக் கொண்டுள்ள இந்த நாட்டின் பேரின அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் அரசியல் தலைவர்களிடமும் இருந்தும் நீதியான ஜனநாயக ரீதியான அரசியல் தீர்வை தமிழ் மக்கள் அடைய முடியும்.

இன்றைய இலங்கையின் அரசியல் சூழல் என்பது தமிழ்மக்களுக்கு மிகவும் முக்கியமான காலமாகும். பல்வேறு வழிகளில் முக்கியத்துவம் மிக்க இந்தத் தருணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும் சரியான அரசியல் அணுகுமுறையைத் தங்களுக்குள் கடைப்பிடித்துச் செயற்பட வேண்டியது அவசியம்.

நீண்டதொரு யுத்தத்தில் சிக்கி மோசமான பாதிப்புகளுக்கு ஆளாகி, யுத்தம் முடிவுக்கு வந்து எட்டு வருடங்கள் முடிவுற்ற நிலையிலும், இன்னும் தமது அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அரசியல் பிரச்சினைக்கும் முடிவு ஏற்படவில்லையே என ஏங்கிக் கொண்டிருக்கின்ற மக்களை மேலும் மேலும் குழப்பியடிக்கின்ற நடவடிக்கைகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுவது அழகல்ல. நியாயமானதுமல்ல.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *