Search
Monday 13 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அப்பாவின் வீரத்துடன் அத்தனை பேரையும் நடுங்க வைப்பேன் : ஜீவன்

அப்பாவின் வீரத்துடன் அத்தனை பேரையும் நடுங்க வைப்பேன் : ஜீவன்

நாம் தற்போது அமைதியாக இருக்கின்றோம். ஆறுமுகன் தொண்டமானின் மறைவின் பின்னர் ஏன் இந்த அமைதி என சிலர் கேட்கின்றனர். பொறுமைக்கும், அமைதிக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. நாம் பொறுமையாகவே இருக்கின்றோம். அதனை பலவீனமாகக்கருதவேண்டாம். மக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் அக்கரப்பத்தனையில் நடைபெற்ற இ.தொ.காவின் மக்கள் சந்திப்பு நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்குவதற்கு கம்பனிகள் இணங்கியுள்ளன. ஆனால், கூடுதலாக இரண்டு கிலோ கொழுந்தும், இறப்பர் தோட்டங்களில் மேலதிகமாக ஒரு கிலோவும் எடுக்கப்படவேண்டும் என கூறுகின்றனர். இதற்கு நாம் உடன்பட முடியாது. அந்த கோரிக்கையை ஏற்றால் அப்பா என்னை மன்னிக்கமாட்டார். கம்பனிகள் வெள்ளையர் காலத்தில் போல் தான் தற்போது செயற்படமுற்படுகின்றன. இதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பேச்சுவார்த்தை என்பது தேர்தல் நாடகம் என்று சிலரால் விமர்சிக்கப்படுகின்றது. சம்பளத்தை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்யவேண்டிய தேவை இ.தொ.காவுக்கு கிடையாது. ஏனெனில் மக்கள் எம்பக்கமே உள்ளனர்.
மக்கள் எனக்கு தேர்தல்மூலம் அதிகாரத்தை வழங்கிய பின்னர் சௌமியமூர்த்தி தொண்டமானின் சாணக்கியத்துடனும், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் வீரத்துடனும் அத்தனை பேரையும் நடுங்கவைப்பேன். ஆறுமுகன் தொண்டமான் போய்விட்டார், இ.தொ.காவின் கதை முடிந்துவிட்டது என சிலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். யார் எதனை வேண்டுமானாலும் நினைத்துவிட்டுபோகட்டும். மக்களுக்காக எப்போதும் காங்கிரஸ் செயற்படும். என அவர் தெரிவித்துள்ளார். -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *