Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அமெரிக்கவுடனான MCC உடன்படிக்கை வடக்கு -கிழக்கில் பாரிய நில அபகரிப்புக்கும் குடியேற்றங்களும் வழிகோலும் அபாயம்

அமெரிக்கவுடனான MCC உடன்படிக்கை வடக்கு -கிழக்கில் பாரிய நில அபகரிப்புக்கும் குடியேற்றங்களும் வழிகோலும் அபாயம்

அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொள்ளவிருக்கும் MCC என்ற உடன்படிக்கை எதிர்காலத்தில் தனியார் மயமாக்கல் என்ற போர்வையில் வடக்கு-கிழக்கு பகுதிகளில் மிகப்பெரும் நில அபகரிப்புக்கும் குடியேற்றங்களுக்கும் வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தேச உடன்படிக்கையின் கீழ் நாட்டின் 67 சதவீதமான காணி கணினி முறையில் வரைபடப்படுத்தப்பட்டு பதிவுசெய்யப்படும். இதன் நோக்கம் முதலீட்டை அதிகரிப்பதும் காணி பயன்பாட்டை ஒரு பொருளாதார சொத்தாக அதிகரிப்பதுமாகும். இந்த செயற்திட்டத்தின் மூலம் தனியார் துறை 5 வழிமுறைகளில் பயன்படுத்தப்படாத அசர காணிகளை பெற்றுக்கொள்வது இலகுபடுத்தபப்டுகின்றது. MCC உடன்படிக்கையானது பாரியளவில் இயற்கை வளமான காணி தனியார்மயப்படுத்தப்படுவதற்கு வழிவகுக்கப்போகின்றது என்று அமெரிக்காவின் ஓக்லாந்து ஆய்வு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இது பெருமளவிலான காணி தனியார் துறையினரிடம் செல்லும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால், ஆரம்பத்தில் 7 மாவட்டங்களில் எல்லாமாக 28 சத வீதமான காணியில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படும். அனுராதபுரம், கண்டி, குருணாகல், மாத்தளை, பொலநறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களே இந்த 7 மாவட்டங்களும் ஆகும்.

வடக்கு -கிழக்கு பகுதிகளிலேயே ஏராளமான தரிசு நிலங்களும் பயன்படுத்தப்படாத நிலங்களும் காணப்படுவதால், எதிர்காலத்தில் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்பொழுது வடக்கு- கிழக்கு மாவட்டங்கள் கூடுதலாக உள்ளடக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னர், அபிவிருத்தி என்ற போர்வையில், பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு பாரிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டதுபோல, தற்போது இந்த உடன்படிக்கையின் கீழ் மீண்டும் பாரியளவில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகள் தனியார்மயப்பபடுதலினூடாக அபகரிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

“குடியேற்றங்களும் நில அபகரிப்புக்களும் நிறைந்த இலங்கையின் வரலாற்றின் பின்னனியில், வடக்கு-கிழக்கு பகுதிகளில் இந்த ஆபத்து குறித்த கவலைகளுக்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன” என்று ஓக்லாந்து நிறுவனத்தின் கொள்கை பணிப்பாளரும் புதிய அறிக்கையை தயாரித்தவருமான பிரெட்ரிக் மெஸ்ஸேவு சமகளத்துக்கு தெரிவித்தார்.

1950, 60, 70 மற்றும் 80ஆம் ஆண்டுகளில் பாரிய நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் வெளிநாடுகளிடம் இருந்தும் சர்வதேச அபிவிருத்தி நிறுவனங்களிடம் இருந்தும் கோடிக்கணக்கான பணத்தை அரசாங்கங்கள் பெற்று சிங்கள குடியேற்ற திட்டங்களை ஏற்படுத்தியதுபோல, இந்த உடன்படிக்கையின் கீழும் தனியார் துறையிடம் இருந்து பெரும் பணத்தை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடியும் அதேவேளை, வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை தனியார் துறையினூடாக கையகப்படுத்தி கைத்தொழில்பேட்டைகள், உட்கட்டுமானங்கள் என்ற போர்வையில் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதற்கான எல்லா வாய்ப்புக்களும் இருக்கின்றன.

தற்போது தெரிவுசெய்யுயப்பட்டுள்ள மாவட்டங்களில் திருகோணமலை மாவட்டம் மட்டுமே கிழக்கு மாகாணத்தை சேர்ந்ததாக இருக்கின்றபோதிலும், கடந்த தசாப்த காலங்களில் திருகோணமலையில் நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டங்கள் என்றபோர்வையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. ஆரம்பத்தில் மகாவலி போன்ற நீர்ப்பாசன திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோது இதேபோல, மத்திய மாகாண மற்றும் வட மேல் மாகாண மாவட்டங்களுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால், மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் உண்மையான அபிவிருத்தி நடைபெற, அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் பகுதிகளில் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன.

இதேபோன்று தான், தற்போதும் ஆரம்பத்தில் மத்திய மற்றும் வட மேல் மாகாணங்கள் உள்ளடக்கபட்டிருந்தாலும், எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டு தனியார் மயமாக்கல் தமிழர் பகுதிகளிலேயே இடம்பெற முழுஅளவிலான வாய்ப்பும் இருக்கிறது. MCC உடன்படிக்கைக்கு தென் இலங்கையில் பௌத்த பிக்குகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த உடன்படிக்கையின் கீழ், சிங்கள இடங்களில் வரைபடமாக்கலும் பதிவும் இடம்பெற, வடக்கு -கிழக்கு பகுதிகளிலேயே உண்மையான தனியார்மயமாக்கலுக்கு இடமளிக்கப்பட்டு தொழிற்சாலைகள் நிறுவுதல், வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் என்ற போர்வையில் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை வரலாற்றில் இருந்து உய்த்தறிந்து இப்பொழுதே கூறமுடியும்.

Download (PDF, 5.17MB)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *