Search
Friday 23 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]

அமெரிக்காவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையும்

அமெரிக்காவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையும்

யதீந்திரா
அமெரிக்க இராஜாங்கத் தினைக்களத்தின் உயர் அதிகாரியான கிரிஸ்ரினா ஜேம்ஸ் மற்றும் அமெரிக்க தூதரக அரசியல் அலுவலர் ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இதன் போது வழமைபோல் அங்குள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்திருந்தனர். அமெரிக்க அதிகாரிகள் மட்டுமல்ல ஏனைய தூதரகங்களைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து, சந்திப்புக்களில் ஈடுபடுவது சாதாரணமான ஒன்றுதான்.

இந்த விஜயத்தின் போது, ஜனநாயக போராளிகள் என்று அறியப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலரையும் கிரிஸ்ரினா ஜேம்ஸ் சந்தித்திருக்கிறார். குறித்த முன்னைநாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழுவினரை மேற்குலக தூதரகங்களைச் சேர்ந்த கீழ் மட்ட அதிகாரிகள் அவ்வப்போது சந்தித்து வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பரில் இந்தக் குழுவினரை, பிரித்தானிய தூதரக அதிகாரிகள் போல் கிறின், பொப் ஆகியோர் சந்தித்திருந்தனர். அதே போன்று, டிசம்பரில் இலங்கைக்கான கனடிய தூதுவர் டேவிட் மெக்கினன் சந்தித்திருந்தார். இதன் தொடர்ச்சியாகவே கிரிஸ்ரினா ஜேம்சும் சந்;தித்திருக்கிறார். கிரிஸ்ரினா, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்கள் தொடர்பான வெளிவிவகார அதிகாரி ஆவார். இவர், இதற்கு முன்னர் ராஜாங்க திணைக்களத்தின் தீவிரவாத முறியடிப்பு பிரிவில் ஒரு அதிகாரியாக பணியாற்றியிருக்கிறார். இவர் விடயங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அதிகாரி மட்டுமே. இங்கு விடயம் இவர் பற்றியதல்ல மாறாக, இவரது சந்திப்பு பற்றியது.

2009இல் யுத்தம் நிறைவுற்றதன் பின்புலத்தில், 11400 இற்கும் அதிகமான சரணடைந்த போராளிகளை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் விடுதலை செய்திருந்தது. இவ்வாறு விடுதலையானவர்களில் பலர் இன்று எவ்வாறான நிலையில் இருக்கின்றார்கள் என்னும் புள்ளிவிபரங்கள் எவரிடமும் இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2015 யூலையில் உதயன் மற்றும் சுடரொளி பத்திரிகைகளின் முன்னைநாள் ஆசிரியர் வித்தியாதரனின் தலைமையில், ‘ஜனநாயக போராளிகள்’ என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதான செய்திகள் வெளியாகின. 2015 ஓகஸ்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் குறித்த குழுவினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இரா.சம்பந்தன், வித்தியாதரன் தலைமையிலான குறித்த குழுவினரை ‘அரச உளவாளிகள்’ என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில் நிராகரித்திருந்தார். இதன் பின்னர், குறித்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், வித்தியாதரன் தலைமையில் ஒரு சுயேற்சைக் குழுவாக தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் 2009இற்கு பின்னர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழுவினரை கட்சி அரசியலுக்குள் கொண்டுவந்தவர் என்னும் பெருமை வித்தியாதரனையே சாரும். ஆனால் இந்த தேர்தல் அனுபவங்களின் பின்னர் குறித்த குழுவினர் வித்தியாதரனிலிருந்து விலகி, தனியாக செயற்பட ஆரம்பித்தனர். இது தொடர்பில் ஒரு கதையுமுண்டு. அதாவது, வித்தியாதரன் இவர்களை இந்திய துனைத் தூதரகத்தோடு இணைக்க முற்பட்டதாகவும் ஆனால் அதனை இவர்கள் விரும்பவில்லை என்றும் அதன் காரணமாகவே இவர்கள் தனி வழியில் சென்றதாகவும் ஒரு கதையுண்டு. அது வெறும் கதைதானா என்பதை குறித்த குழுவினர்தான் உறுதிப்படுத்த வேண்டும்.

குறித்த குழுவினர், தாங்களும் ஒரு கட்சி என்னும் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் பின்புலத்தில்தான் அதற்கு ஒரு அங்கீகாரம் வழங்கும் வகையில் மேற்கு நாடுகளின் தூதரக அதிகாரிகளும் அவ்வப்போது இவர்களை சந்தித்து வருகின்றனர். இதன் மூலம் இவர்களுக்கு ஒரு மறைமுகமான அங்கீகாரம் உருவாகியிருக்கிறது. இந்த அங்கீகாரத்திற்கு பிறிதொரு காரணமும் இருக்கலாம் என்பது எனது அனுமானம். அதாவது, இந்தக் குழுவினர் கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போது, இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைந்து செயற்பட்டிருந்தனர். தமிழரசு கட்சியினருடன், முக்கியமாக அதன் போச்சாளர் சுமந்திரனுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்தி;ப்புக்களிலும் பங்குகொண்டிருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யும் மேற்கு நாட்டு தூதரக அதிகாரிகள் இவர்களையும் தங்களின் சந்திப்பு பட்டியிலில் உள்ளடக்கியிருக்கின்றனரா?

tus_human_rights_official_in_meeting_with_democratic_militants_party_1

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னைநாள் உறுப்பினர்கள், ஜனநாயக அரசியலில் பிரவேசிப்பது ஆரோக்கியமான விடயம்தான். அது ஊக்குவிக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் இவ்வாறான போராளிகளின் ஜனநாயக பிரவேசம் தொடர்பில் கரிசனை காண்பிக்கும் அமெரிக்கா, விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் ஏன் தனது வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியில் உள்ளடக்கியிருக்கிறது? விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் ஆகின்ற நிலையிலும்கூட, விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? கிரிஸ்ரினா ஜேம்சுடனான சந்திப்பின் போது, குறித்த முன்னாள் போராளிகள் குழுவினர், தாம் தொடர்ந்தும் அரச படைகளின் கண்காணிப்பில் உள்ளதாகவும் அது தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குறிப்பிட்டதாக, த-அகிலண்ட ஆங்கிலப்பத்திரிகை செய்தியிட்டிருக்கிறது. யுத்தம் முடிவுற்று பத்து வருடங்களின் பின்னரும் கூட, அமெரிக்கா இப்போதும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக பேணிவரும் சூழலில், இலங்கை இராணுவம் எவ்வாறு விதிவிலக்காக சிந்திக்க வேண்டுமென்று ஒரு தமிழர் எதிர்பார்க்க முடியும்?

1997ஆம் ஆண்டு, பில்கிளின்ரன் ஜனாதிபதியாக இருந்த போது, அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது(Foreign Terrorist Organizations (FTOs). இதனை எதிர்த்து விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு இரண்டு தடவைகள் வழக்குகளை தாக்கல் செய்திருந்தது எனினும் அவ்வழக்குகளை நீதிமன்றம் நிராகரித்திருந்தது. விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புக்களின் போதுகூட. அமெரிக்கா விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கவில்லை. சமாதான உடன்பாட்டுக் காலத்தில் கூட அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை அதன் பயங்கரவாத பட்டியலிருந்து நீக்க முயற்சிக்கவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் (ஏப்பிரல் 14 2003) வோசிங்கடனில் இடம்பெற்ற உதவி வழங்கும் மகாநாட்டில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் பங்குகொள்வதை அமெரிக்கா நிராகரித்திருந்தது. இதனைத் தொடர்ந்தே பேச்சுவார்த்தைகள் குழம்பின. இது தொடர்பில் அப்போது (பெப்பிரவரி 14இ 2003) கருத்துத் தெரிவித்திருந்த அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரிச்சர்ட் ஆமிட்ரேஜ் – விடுதலைப் புலிகள் அமைப்பு அவர்களது தீவிரவாத நடவடிக்கைகளிலிருந்து விலகி, ஒரு அரசியல் தீர்வை காண்பதில், அவர்களுக்குள்ள ஈடுபாட்டை, அவர்களது செயல்களால் நிரூபிக்கும் பட்சத்தில், அமெரிக்கா அவர்களை பயங்கரவாத பட்டியலிலிருந்து விடுவிக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் 2009இற்கு பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரால் இராணுவ ர்Pதியில் இயங்கக் கூடிய எவரும் இல்லை. கடந்த பத்துவருடகால அனுபவங்கள் அதனை தெளிவாக நிரூபித்திருக்கின்றன. விடுதலைப் புலிகள் மீது அனுதாபமுள்ள புலம்பெயர் அமைப்புக்களும் ஜனநாயக ரீதியில்தான் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனாலும் அமெரிக்காவோ, தொடர்ந்தும் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் பேணிவருகிறது. அமெரிக்கத் தடையின் காரணமாகவே ஏனைய நாடுகளும் விடுதலைப் புலிகள் மீதான தடையை பேணிவருகின்றன. இதுவே இலங்கைக்கும் உற்சாகமளிக்கின்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் உண்மையிலேயே ஜனநாயாக அரசியல் நீரோட்டத்தில் பங்குகொள்ள வேண்டுமென்று அமெரிக்கா விரும்பினால், அதற்கு முன்நிபந்தனையாக விடுதலைப் புலிகளை அதன் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும். அமெரிக்கா ஒரு முறை பயங்கரவாதிகளாக அறிவித்தவர்களை பின்னர் அந்த அறிவிப்பிலிருந்து விலக்கிக் கொண்ட ஏராளமான சந்தர்ப்பங்கள் உண்டு. உதாரணமாக, 1997இல் பயங்கரவாத அமைப்பாக பட்டியல்படுத்தப்பட்ட – People’s Mojahedin Organization of Iran  என்னும் ஈரானிய அமைப்பு 2012இல் அப்பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அதே போன்று பலஸ்தீனிய அமைப்பான – Abu Nidal Organization (ANO) 2017 இல் பட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் ஏன் விடுதலைப் புலிகள் அமைப்பை விடுவிக்க முடியாது? விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனநாயக அரசியலில் ஈடுபட விரும்புபவர்களுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். அமெரிக்காவின் தடை நீக்கம் அதற்கான ஆரம்பமாக இருக்க முடியும். அமெரிக்க ராஜதந்திரிகளை சந்திக்கும் தமிழ் சிவில் சமூகத்தினர் இது தொடர்பில் வலியுறுத்த வேண்டும். ஆனால் அதன் முக்கியஸ்தர்களாக தங்களை அடையாளங் காட்டுவோர் இதுவரை இப்படியான விடயங்களில் வாய்திறந்ததாக சான்றில்லை. அதே போன்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துடன் நல்ல உறவில் இருக்கும் அமெரிக்க தமிழர் அரசியல் செயலவை (USTPAC) மற்றும் உலகத் தமிழர் பேரவை (GTF) போன்ற அமைப்புக்கள் இதனை வலியுறுத்த வேண்டும் ஆனால் அவர்கள் இதுவரை வலியுறுத்தியதாக தெரியவில்லை. ஏன்?


One thought on “அமெரிக்காவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையும்

  1. REEGANA

    இவர்கள் முன்பு புலிகள் அமைப்பில் இருந்தாலும் தற்போது அவர்கள் அந்த அமைப்பின் பெயரில் தேர்தலில் ஈடுபடவில்லை.ஜனநாயக அமைப்பு என்ற பெயரில் தான் செயல்படுகிறார்கள். அதனால் தான் அவர்களை வெளிநாட்டு பிரதி நிதிகள் சந்திக்கிறார்கள். இன்னொரு வகையில் கூறுவதானால் அவர்கள் ஜனநாயக வழியில் செயல்படுபவர்களுடன் தான் தமது தொடர்பை வைத்து இருப்பார்கள். ஆகவே ஜனநாயக அமைப்பை அமெரிக்க பிரதிநிதிகள் சந்தித்து தமது அங்கீகாரத்தை வழங்கினார்கள் இன்பத்துக்காக புலிகள் மீதான தடையை அகற்ற சொல்லி கோருவது காமடித்தனம்.அதனால் தான் எவரும் புலி மீதான தடையை நீக்கும் படி கோரவில்லை. அது மட்டுமில்லாமல் இந்த மைப்புகள் கூட புலிகளின் மீள் எழுச்சியை விரும்பவில்லை என்றும் கருதலாம்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *