Search
Friday 23 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]

அரசியல் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தல் சாத்தியமான ஒன்றா?

அரசியல் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தல் சாத்தியமான ஒன்றா?

யதீந்திரா

தமிழ் அரசியல் சூழலில் ஒற்றுமை என்னும் சொல் அதிக கவர்ச்சியுடைய ஒன்றாகும். அதிலும் தேர்தல் காலத்தில் இந்தச் சொல்லை அனைத்து தரப்புக்களுமே பாரபட்சமில்லாமல் கையாளுவதுண்டு. ஆனாலும் அந்த ஒற்றுமை எப்போதுமே தமிழ் அரசியல் சூழலில் இருந்ததில்லை. ஒரு பல்கட்சி ஜனநாயக சூழலில் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கும் ஒற்றுமை சாத்தியம்தானா? அனைத்து தமிழ் தரப்புக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருதல் என்பது நிச்சயமாக சாத்தியமில்லை ஆனால் தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்தி செயல்படும் தரப்புக்கள் மத்தியில் ஒரு ஜக்கியத்தை ஏற்படுத்துவது ஓரளவு சாத்தியமானதுதான் ஆனாலும் அதிலும் இதுவரை குறிப்பிடத்தகு வெற்றியை எவராலும் காண்பிக்க முடியவில்லை. இன்றுவரையில் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்னும் சுலோகத்தால் நன்மையடைந்து கொண்டிருப்பது ஒப்பீட்டிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான். ஒற்றுமை என்னும் சொல்லுக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கவர்ச்சியை ஒவ்வொரு தேர்தல்களின் போதும், கூட்டமைப்பு நன்றாக பயன்படுத்திக் கொள்கின்றது. இதுவரை இதுதான் நிலைமை.

கடந்த ஒரு சில வருடங்களாகவே ஒரு மாற்றும் தலைமையை ஏற்படுத்துவற்கான முயற்சியில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவந்திருக்கின்றனர் எனினும் இன்றுவரை அந்த மாற்றுக்கான தகுதியுடைய அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர முடியவில்லை. கடந்த உள்ளுராட்சி தேர்தலின் போது ஒரு தேர்தல் கூட்டை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் அது எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. விரைவாக உருவாக்கிய மேற்படி கட்சிகளின் கூட்டு, மிகவும் விரைவாகவே இல்லாமல் போய்விட்டது. இதன் பின்னர் முன்னைநாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமையின் கீழ் ஒரு புதிய கூட்டை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

எனினும் மாற்றுத் தலைமை ஒன்றில் தவிர்க்க முடியாத நபரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றுவரை அந்த கூட்டுக்குள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவில்லை. கஜேந்திரகுமாரை கூட்டுக்குள் கொண்டுவருவதற்காக, சில தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அதே போன்று விக்கினேஸ்வரன் அவர்களை, கஜேந்திகுமாரை நோக்கி கொண்டு செல்லுவதற்கான முயற்சிகளிலும் சில தரப்பினர் ஈடுபட்டனர். அதுவும் வெற்றியளிக்கவில்லை. இந்தத் தோல்விகள் எதனை உணர்த்துகின்றன? உண்மையில் எவரையும் எவரிடமும் கொண்டு செல்ல முடியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் சேர்ந்து இயங்க முடியாது என்பதால்தான் தனியான கட்சிகளில் இயங்குகின்றனர். எனவே இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீர் போன்றதுதான். எதிர்காலத்திலும் இவ்வாறான முயற்சிகளில் எவரேனும் ஈடுபட்டால் அதுவும் நிச்சயமாக தோல்வியில்தான் முடியும்.

இது ஒரு புறம் என்றால் கிழக்கு மாகாண சபை தேர்தலை இலக்காகக் கொண்டு, அதே போன்று, எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களை இலக்காகக் கொண்டும், ஒவ்வொரு தரப்புக்களும் தேர்தல் கூட்டுக்களை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில் உரையாடிவருகின்றன. கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் இரண்டு இனங்களுடன் போட்டியிடபோட நெருக்கடி நிலையை எதிர்கொள்வதால், கிழக்கில் அனைத்து தரப்புக்களும் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்னும் கருத்தும் உண்டு. ஆனால் இந்தக் கருத்து இதுவரை ஒரு பலமான வாதமாக திரட்சிபெறவில்லை. அதே வேளை திருகோணமலை அம்பாறை போன்ற மாவட்டங்களில் உள்ள சிவில் சமூக குழுக்கள் என்போரும் இவ்வாறான ஒற்றுமை பற்றி பேசிவருகின்றனர்.

பொதுச் சின்னம் பற்றி பேசுவோர் எவரிடமும் அவ்வாறானதொரு பொதுச் சின்னத்தை நோக்கி அனைவரையும் எவ்வாறு கொண்டுவருவது என்பதில் தெளிவான புரிதலில்லை. உதாரணமாக கிழக்கில் ஒரு பொதுச் சின்னத்தின் கீழ் அனைத்து கட்சிகளையும் கொண்டுவர வேண்டுமாயின் தமிழரசு கட்சி அதன் வீட்டுச் சின்னத்தை கைவிட வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமான ஒன்றா? ஓவ்வொரு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று, பிரதான கட்சியாக இருக்கும் ஒரு கட்சி, அதன் சின்னத்தை கைவிட்டு, எதற்காக பிறிதொரு சின்னத்தின் கீழ் செல்ல வேண்டும்? தேர்தல் ஒற்றுமை பற்றி பேசுவோரிடம் இதற்கான பதிலில்லை? அதே போன்று கொள்கை அடிப்படையில் பிறிதொரு தரப்புடன் கைகோர்க்க முடியாது என்று சொல்லும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் என்ன பயன்? உதாரணமாக கூட்டமைப்புடன் முரண்பட்டுத்தான் கஜேந்திரகுமார் வெளியேறிருக்கிறார். சுரேஸ்பிரேமச்சந்திரன் வெளியேறியிருக்கிறார். இறுதியாக விக்கினேஸ்வரன் வெளியேறியிருக்கிறார். இவ்வாறு கூட்டமைப்புடன் அரசியல் ரீதியில் முரண்பட்டு வெளியேறியிருப்பவர்களை மீண்டும் வீட்டுச் சின்னத்தின் கீழ் வாருங்கள் என்று கோருவது எந்தளவு அறிவுபூர்வமான அனுகுமுறையாக இருக்கும்? எனவே கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளும் ஒரு சின்னத்தின் கீழ் வருவது என்பது முயல்கொம்புக்கு ஒப்பானது. எனவே இன்று ஒற்றுமை பற்றி பேசும் பலர் முயலில் கொம்மைத் தேடும் பணியைத்தான் செய்து வருகின்றனர்.

TNA

இந்த பின்புலத்தில் நோக்கினால் ஒற்றுமையை எவரும் வெளியிலிருந்து ஏற்படுத்த முடியாது என்பதுதான் உண்மை. ஆனால் சூழ்நிலை தரும் படிப்பனைகள் ஒரு வேளை தேர்தல் ஓற்றுமைகளை ஏற்படுத்தலாம். அதற்கான வாய்ப்புக்கள் நிச்சயமாக உண்டு. இன்று கூட்டமைப்பிலிருக்கும் டெலோ மற்றும் புளொட் ஆகியவை தமிழரசு கட்சியுடன் பல்வேறு முரண்பாடுகள் இருக்கின்ற போதிலும், இதுவரை தமிழரசு கடசியிலிருந்து தனித்துச் செல்ல முயலவில்லை. ஏனெனில் கூட்டமைப்புக்குள் அவர்களுக்கான தேர்தல் வெற்றி பிரகாசமாக இருப்பதே காரணம். ஆனால் தமிழரசு கட்சியோ படிப்படியாக இவர்களது வேட்பாளர்களை தோல்வியடையச் செய்து, இவர்களை அரசியல் அனாதைகளாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

தமிழரசு கட்சியை பொறுத்தவரையில் அதற்கு ஒரு நீண்டகால இலக்குண்டு. அதாவது 1989களுக்கு முன்னர் இருந்தது போன்று தமிழ் அரசியலை முற்றிலுமாக அப்புக்காத்துக்களின் அரசியலாக மாற்றுவது. அதனை சாத்தியப்படுத்த வேண்டுமாயின், அதற்கு இயக்கங்களைச் சேர்ந்தவர்களை தேர்தல் அரசியலில் தோற்கடிக்க வேண்டும். ஈ.பி.ஆர்.எல்.எப் விடயத்தில் அதனை ஒரளவு செய்துவிட்டனர். அடுத்தது, டெலோவும் புளொட்டும்தான். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் டெலோவின் தலைவர் மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் இலக்கு வைக்கப்படலாம். ஒரு வேளை இவர்களது தோல்வி இவர்கள் ஒற்றுமையாக பயணிக்க வேண்டிய தேவையை உணர்த்தலாம். அதே போன்று, அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஒவ்வொரு தரப்பும் தனியாக போட்டியிடும் போது, ஒவ்வொருவரது பலமும் அவர்களுக்கு தெரியவரும். அதுவும் ஒற்றுமைக்கான பட்டறிவை கொடுக்கலாம். எனவே ஒற்றுமை, அனுபவங்களின் வழியாகத்தான் சாத்தியப்படுமே தவிர, விளக்கங்களால் அல்ல. எனவே கட்சிகளை ஒற்றுமைப்படுத்தும் முயற்சி ஒரு பயனற்ற செயல் என்பதுதான் இதுவரையான பட்டறிவு.

ஆனால் தேர்தல் காலத்து ஒற்றுமை என்பது போலியானது என்பது அனைத்து கட்சிகளுக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில் தேர்தலுக்காக ஒரு கூட்டுக்குள் வரப்போவதில்லை என்பதை வெளிப்படையாக கூறுவது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டும்தான் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால் தேர்தல் ஒன்றில் போட்டியிட முற்படும் போது, நெளிவு சுழிவுகளற்று பயணிக்க முடியுமா என்பதும் இன்னொரு கேள்வி. ஏனெனில் தேர்தல் அரசியல் என்பதே பல்வேறு சிக்கல்கள் கொண்டதுதான். தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சமூகத்தின் நிலவும் சாதியமைப்பையும் ஒவ்வொருவரும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதில் உடன்பாடு இல்லாதவர்கள் கூட, தேர்தல் வெற்றியை இலக்கு வைத்து அந்த அசிங்கமான ஆட்டத்தை ஆடுகின்றனர். இதனை இங்கு சுட்டிக்காட்டுவதற்கு காரணம், பல்வேறு நெளிவு சுழிவுகளோடுதான் தேர்தல் அரசியலை செய்ய வேண்டியிருக்கிறது என்ற யதார்த்ததை சுட்டிக்காட்டவே! எனவே தேர்தல் என்பது நெளிவு சுழிவுகள் மிக்கது என்னும் போது, அதில் அதிகம் பிடிவாதமான கொள்கைகளை வைத்திருப்பதில் என்ன பயன்? அரசியல் ரீதியான கொள்கை நிலைப்பாடு என்பதையும் தேர்தல் கூட்டிற்கான கொள்கை நிலைப்பாட்டையும் பிரித்துத்தான் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் எக்காலத்திலும் ஒரு கூட்டுக்குள் வர முடியாமல் போகும். எனவே அரசியலில் ஒற்றுமை என்பதும் கூட, நெளிவு சுழிவுகளுடன் கூடிய ஒன்றுதான். இதனை ஏற்றுக்கொண்டால்தான் அந்த ஒற்றுமை சாத்தியப்படும்.

2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் அதிகம் கட்சிகள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவைகள்தான் இருந்தன. தன்முனைப்புவாத முரண்பாடுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்ததால் அது இன்றுவரை சாத்தியப்படவில்லை. இப்போதும் ஒற்றுமை பேசுபொருளாக இருக்கின்றதே தவிர, செயற்பாட்டு நிலையில் இல்லை. யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் ஆகிவிட்ட பின்னரும் கூட, விடுதலைக்காக பெரும் விலை கொடுத்த ஒரு தேசத்தில் ஒற்றுமை பேசு பொருளாகத்தான் இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒரு நிலைமைதான்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *