Search
Saturday 30 May 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியல் கைதிகளும் ஜனாதிபதியிடம் விடப்படும் கருணை கோரிக்கையும்

அரசியல் கைதிகளும் ஜனாதிபதியிடம் விடப்படும் கருணை கோரிக்கையும்

வசந்தன்-

தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு 9 ஆண்டுகள் கடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி எனச் சொல்லப்படும் இந்த அரசாங்கம் கூட விட்டுக் கொடுப்புடன் செயற்படவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் இறுதி யுத்தம் நடைபெற்ற போது நேரடியாக யுத்தத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 12 ஆயிரம் வரையிலான முன்னாள் போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்கள் புனர்வாழ்வின் பின் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் இதே காலப்பகுதியிலும் இதற்கு முன்னரும் இராணுவ சுற்றி வளைப்புக்களின் போதும், பொலிசாரின் தேடுதல்களின் போதும், புலனாய்வாளர்களின் செயற்பாட்டின் மூலமும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார்கள் அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயறபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலும் பலர் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்றும் சிறைச்சாலைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10, 15 வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இவ் அரசியல் கைதிகளில் சிலருக்கு எதிராக இன்று வரை வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. இன்னும் சிலருக்கு விசாரணைகளின் போது அவர்களால் வழங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் சிலருக்கு வழக்கு விசாரணைகள் நிறைவுறும் நிலையில் மீண்டும் புதிய வழக்குகளும் போடப்படுகின்றது. இவற்றை பார்க்கின்ற போது இதற்கு பின்னால் சட்டம், நீதி என்பதற்கு அப்பால் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பது புலனாகின்றது.

அரசியல் கைதிகள் தொடர்பில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கிய போதும், அந்த நீதிமன்றம் அமைப்பதிலும் இழுபறி நிலை நீடிக்கிறது. அரசியல் கைதிகளின் விவகாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் உரிய வகையில் செயற்படவில்லை என்ற காரணம் காட்டி சட்டமா அதிபர்களும் மாற்றப்பட்டனர். இதே காரணத்திற்காக நீதி அமைச்சரும் கூட மாற்றப்பட்டிருந்தார். இவைகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி பார்க்கின்ற போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் கைதிகளும் அரசியல் நோக்கங்களுக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றே எண்ணவேண்டியுள்ளது.

இந்த நிலையில் அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களும் வெகுவாக பாதிப்படைந்துள்ளனர். அரசியல் கைதிகளைப் பொறுத்தவரை அவர்கள் சிறைக் கூடங்களில் இருப்பதாலும், அவர்கள் மீதான விசாரணைகளின் போது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் மற்றும் விசாரணை முறைகளாலும் உடல், உள ரீதியாக கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் சிறைக் கூடங்களில் தமது வாழ் நாட்களைக் எண்ணிக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்களது குடும்பங்களும், உறவினர்களும் தமது பிள்ளைகள் எப்ப வருவார்கள், கணவன்மார் எப்ப வருவார்கள், அப்பா எப்ப வருவார்..? என்ற ஆதங்கத்துடன் தினமும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றனர். கணவர் ஆயுட் கைதியாக தண்டனை விதிக்கப்பட்டதை எண்ணி எண்ணி பிஞ்சுக் குழந்தைகளை எப்படி ஒரு ஆண் துணையின்றியும், குடும்பத் தலைவனின் துணையின்றியும் வளர்த்து எடுக்கப் போகின்றோம் என்ற ஏக்கத்தில் செய்வதறியாது குழம்பிய நிலையில் நோய்வாய்ப்பட்டு அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் மனைவி யோகராணி என்ற இளம் யுவதி அண்மையில் மரணத்தை தழுவினார். பால் மனம் மாறாத பிஞ்சுக் குழந்தைகள் இரண்டை நிர்கதியாக்கிவிட்டு தாய் மரணத்தை தழுவிக் கொள்ள தந்தை சிறைக் கூண்டிற்குள் முடங்கிப் போனார். குடும்ப சூழலை சற்றும் கணக்கில் எடுக்காத அரச நிர்வாகம், மனைவியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்கு மூன்று மணிநேரம் மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது. தனையன் தாயின் சிதைக்கு கொள்ளி வைப்பதற்காக சுடுகாடு செல்கையில், தந்தை சிறைக்கூடம் செல்வதற்கு வாகனம் ஏறுகிறார். பாலகி செய்வதறியாது தந்தையின் காலடி தடம் பற்றி அதே சிறைச்சாலை வாகனத்தில் ஏறுகின்றார். கண்டவர்கள் ஒரு கணம் செய்வதறியாது விக்கித்து நிற்க காவல் துறையினர் உட்பட அனைவரது நெஞ்சங்களும் மனசாட்சியை உலுப்பி எடுக்க, தங்களை அறியாமலேயே தங்கள் கடமையை மறந்து கண்ணீர் சிந்தினர். இந்த சம்பவம் அனைவரது மனத்திலும் ஈரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இளைஞர், யுவதிகளின் ஏற்பாட்டில் கருணை மனுக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். வடக்கு முதலமைச்சர் ஜனாதிபதிக்கு ஆனந்த சுதாகர் மீது கருணை காட்டுமாறு கடிதமும் எழுதியுள்ளார். வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், சிவசக்தி ஆனந்தன் எம்.பி போன்ற பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பில் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் கூட ஜனாதிபதியிடம் தமது அப்பாவை விடுதலை செய்யுங்கோ மாமா என உருக்கமாக கோரியுள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இலங்கையின் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய போராட்டங்களுக்கு ஆதரவாக புலம்பெயர் தேசங்களில் குறிப்பாக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் வாசல் ஸ்தலத்திற்கு முன்னால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளும் தொகையான கொடுரங்கள் இனஅழிப்புக் கெதிரான செயற்பாடுகளுக்கான அமைச்சர் மணிவண்ணன், சமூக நலத்தின் பிரதி அமைச்சர் யோகலிங்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பல ஆர்பாட்டங்களை முன்னின்று நடத்தி வரும் செயற்பாட்டாளர்களான சிவகாந்தன், தீபன், குகறூபன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு பிரித்தானியாவை அழுத்தம் கொடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறாக ஓட்டுமொத்த தமிழ் மக்களின் கவனத்தையும் அரசியல் கைதிகள் விவகாரம் ஈர்த்துள்ளது. இதனை நல்லாட்சி எனச் சொல்லப்படும் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

IMG_4256அரசியல் கைதிகள் பலரை சிறைச்சாலைகளிலேயே இழந்திருக்கின்றோம். இன்று அவர்களின் வருகைக்காக ஏங்கித் தவிக்கும் அவர்களது குடும்பங்களையும் இழந்து வருகின்றோம். இதனை ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆனந்த சுதாகர் மட்டுமல்ல அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். அதற்காக தமிழ் தலைமைகளும், ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் ஒரணியில் அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனந்த சுதாகரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது. அது வரவேற்கக் கூடிய ஒரு விடயம். தன்னை கொல்ல வந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கே பொது மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி ஒட்டுமொத்த அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் தரப்பின் ஆதரவைக் கோரிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அனைத்து அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி வழங்கியுள்ளார். எனவே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து அரசியல் கைதிகள் பிரச்சனைக்கு தீர்வு காண முன்வரவேண்டும். அதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதன் மூலமே இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, நிலையான அமைதியையும், உண்மையான நல்லிணக்கத்தையும், நீண்டகால அபிவிருத்தியையும் ஏற்படுத்தக் கூடியதாக அமையும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *