Search
Thursday 19 July 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியல் தலைமைகளின் பார்வையும் மக்களின் வாழ்வாதாரமும்

அரசியல் தலைமைகளின் பார்வையும் மக்களின் வாழ்வாதாரமும்

நரேன்-

தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக ஒரு நூறாண்டு காலமாக போராடி வருகின்றது. அந்த இனம் ஜனநாயக ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தமது உரிமைக்காக போராடி இன்று ஆயுதப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு எட்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை மீளக் கட்டியெழுப்ப முடியாதவர்களாகவும் உள்ளனர். நுண்நிதி நிறுவனங்களிடம் அதிக வட்டியில் கடன் பெறுவதும், ஆங்காங்கே இடம்பெறும் தற்கொலைகளும் மக்களது பொருளாதார பிரச்சனையை கண்முன்னே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது. இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வடக்கு, கிழக்கு பகுதியில் மக்கள் தற்கொலை செய்து கொண்ட செய்திகளை காண்பது மிக அரிதாகவே இருந்தது. ஆனால் தற்போது நிலமை அவ்வாறு இல்லை. இதற்கு அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளின் செயற்பாடும் காரணம் என்பதை மறுத்துவிட முடியாது.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்களில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருந்தன. சில பொருட்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அந்தப் பகுதிகளுக்கும் சென்றன. ஆனாலும் மக்கள் பொருளாதார ரீதியாக ஒரு கட்டமைப்பாக இருந்தனர். மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்ட போது அதனை சிக்கனமாக பயன்படுத்த பழக்கிக் கொண்டனர். சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் தடைசெய்யப்பட்டு சீவல் தொழிலுக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டு அந்த குடும்பங்களின் வாழ்வாதரம் பாதுகாக்கப்பட்டது. சவர்காரத்தை பெற முடியாத நிலை ஏற்பட்ட போது உள்ளூரிலேயே சவர்காரங்களை உற்பத்தி செய்து உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்தனர். வடக்கு, கிழக்கில் இருந்த வளங்களைக் கொண்டு சிறிய சிறிய கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் பல குடும்பங்கள் தமது நாளாந்த சீவியத்தை கொண்டு நடந்த முடிந்தது. மக்களின் பிரதான தொழிலாகிய விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு கிராமமும் சுய தேவைக் கட்டமைப்பைக் கொண்டதாகவும காணப்பட்டது. விடுதலைப் புலிகள் அரசியல், பொருளாதார கட்டமைப்புக்களை அந்தந்த பகுதிக்குமு;, காலநிலை மற்றும் தரையமைப்புக்கும் ஏற்ற வகையில் தமது பகுதிகளில் பாதுகாத்து இருந்தனர். விடுதலைப் புலிகளுக்கு முன்னர் பல இயக்கங்கள் இருந்த காலத்திலும் கூட ஒவ்வொரு இயக்கங்களும் பொருளாதாரம் தொடர்பில் கவனம் செலுத்தி இருந்தன.

யுத்தம் முடிவடைந்து தற்போது தேர்தல் அரசியல் வந்த பின்னர் வடக்கு, கிழக்கு பகுதிகளின் பொருளாதாரம் பற்றிய பார்வை அரசியல்வாதிகளிடம் இல்லாமல் போயுள்ளது. தேர்தல் நெருக்கும் வேளையில் தேசியம் நோக்கிய பேச்சுக்களும் அதனை வைத்து தமது வாக்கு வங்கியை நிரப்புவதாகவுமே கடந்த எட்டரை ஆண்டுகால தேர்தல் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் குறித்து பேசப்பட்டு வரும் நிலையில் முன்னரை விட அதிகமாகவே தேசியம் பற்றி அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் தமது பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கும், பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்குமான திட்டங்கள் அற்றவத்களாக உணர்ச்சி அரசியல் செய்து வருகின்றார்கள்.

அரசியல் தீர்வுக்காக இழந்தவை அதிகம். அதற்காக உயிர்ப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். ஆனால் உரிமைக்களை பெறுவதற்கான சகல கதவுகளையும் அடைத்துக் கொண்டு, தமிழ் தலைமைகள் தேர்தலுக்கான வெற்றுக் கோசமாக தேசியத்தை கையாள்வது ஏற்க முடியாது. இதன் மூலம் அபிவிருத்தியும் இல்லை. தீர்வும் இல்லை என்ற இரண்டும் கெட்ட நிலையில் தமிழ் இனம் நிற்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது.

கடந்த காலங்களில் மத்திய அரசாங்கத்தினால் வடக்கு, கிழக்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை. அதனை முறையாக செயற்படுத்துவதற்கும் தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு உரிய வகையில் அழுத்தம் கொடுக்க தவறியிருக்கின்றது. குறிப்பாக வவுனியாவில் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பேரூந்து நிலையம் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. வன்னியை மையப்படுத்தி அமைக்கபடவிருந்த பொருளாதார மத்திய நிலையம் மக்கள் விருப்பத்திற்கு மாறாக அமைக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பல அபிவிருத்திகளை திட்டங்களை பட்டியலிட்டு பார்க்க முடியும். தேர்தல் அரசியல் செய்யும் தலைமைகளிடம் அபிவிருத்தி, பொருளாதாரம் பற்றிய சிந்தனைகள், பார்வைகள் இல்லாமல் இருப்பது என்பது மிகவும் கவலையான விடயமே.

இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் பல இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்புக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நம்பி வாழும் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கோ, அல்லது அவர்களுக்கான தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கோ பொருத்தமான திட்டங்களை தயாரிக்க அல்லது முன்வைக்க முடியாதவர்களாகவே தமிழ் அரசியல் வாதிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்பு வழங்குமாறு கோரினால் தீர்வு முயற்சி பாதிக்கும் என்று கூறும் அளவிற்கே அவர்களது அரசியல் அறிவு இருக்கின்றது. ஆனால், தனிப்பட்ட ரீதியில் அரசாங்கத்திடம் தமது பிள்ளைகளுக்கும், உறவினர்களும் சில தமிழ் அரசியல்வாதிகள் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றமை இங்கு கவனிக்கத்தக்கது. பிரதிநிதிகளின் இத்தகைய இரட்டை வேடங்களையும், அவர்களது போக்கையும் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகம் கண்டு இனங்கண்டு கொள்ள வேண்டும். அதுவே எதிர்காலத்தில் மக்களது அபிவிருத்தி, அவர்களுக்கான தீர்வு குறித்து சிந்திக்கக் கூடிய பொருத்தமானவர்களை தேர்தல் அரசியல் ஊடாக தெரிவு செய்வதற்கு உதவியாக இருக்கும்.

எந்தவொரு இனமும் தனது அடிக்கட்டுமானத்தில் இருந்தும், காலாசார பண்பாடுகளில் இருந்தும் தவறாமல் இருப்பதற்கு பொருளாதாரம் கட்யெழுப்பப்பட வேண்டும். புராதன மன்னர் ஆட்சிக்காலங்களில் போரியல் உத்தியாக பொருளாதாரத்தை நிலை குலையச் செய்தல் பயன்படுத்தப்பட்டு வந்தது. விடுதலைப் புலிகளும் இராணுவத்தையும், தென்னிலங்கையின் அரசியலையும் சீர்குலையச் செய்ய தெற்கின் பொருளாதார கட்டமைப்புக்கள் மீதும் இலக்கு வைத்திருந்தனர். ஆக, பொருளாதாரம் என்பது மிகவும் அவசியமானதும், ஒரு இனத்தின் நீட்சிக்கு தேவையானதும் கூட. இதனை தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுதவிர, ஒட்டுமொத்த இலங்கையும் தன்னிறைவு பெற முடியாத நிலையில் உள்ளது. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவித்து அந்நியச் செலாவணியைப் பெறுவதற்குப் பதிலாக இறக்குமதி ஊக்குவிப்புக்களை வழங்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை விவசாயத்திலும், கடல் உற்பத்தியிலும் நம்பியிருக்கும் ஒரு நாடு. அது சார்ந்த உற்பத்திகளையும், தொழிற்சாலைகளையும் நிறுவி ஏற்றுமதி செய்து அன்னிய செலாவணியை அதிகரிப்பதற்கான திட்டங்கள் என்பது முறையாக செயற்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் பாதீடுகளில் விவசாயம், கடல் உற்பத்திகள், உள்ளூர் உற்பத்திகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றதாக காட்டப்படுகின்ற போதும் அவை முறையாக செயற்படுத்தப்படுகின்றதா, அதற்கான முறையான திட்டங்கள் தொடர்ச்சியாக பின்பற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

பொருளாதார அபிவிருத்தியைப் பொருத்தவரை மாகாணம், மத்தி என பிரித்து பார்க்க முடியாது. இரு பகுதிகளும் இணைந்து செயற்படுவதன் மூலமே அந்தந்த பகுதிகளுக்கு பொருத்தமான பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க முடியும். இன்று உலக நாடுகள் பலவற்றில் சூழல் பாதிப்பில்லாத உற்பத்திகள் தொடர்பிலும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்காத உற்பத்திகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போதைய தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு அத்தகைய உற்பத்திகளை இலங்கையிலும் அதிகமாக முன்னெடுக்க முடியும். ஆனால் அது பற்றிய துள்ளியமான பார்வை அரசியல் தலைமைகளிடம் இல்லை. தென்னிலங்கையுடன் ஒப்பிடுகின்ற போது வடக்கு, கிழக்கில் இந்த நிலை மிகவும் பின்னடைவிலேயே உள்ளது. ஆக, மத்தி மாகாணம் என்ற வேறுபாடு இன்றி மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் தொடர்பில் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. இது ஒட்டுமொத்த மாகாணங்களுக்கும், நாட்டுக்கும் பொருத்தமானதும் கூட. அதுவே ஒட்டுமொத்த இலங்கையின் அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் அவசியமானது. இதனை அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *