Search
Friday 20 September 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அரசியல் தீர்வும் கூட்டமைப்பின் ஒற்றுமையும் ?

அரசியல் தீர்வும் கூட்டமைப்பின் ஒற்றுமையும் ?

யதீந்திரா
அரசியலமைப்பு முயற்சிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்திருக்கின்றார். இது தொடர்பான நிகழ்வு இவ்வாரம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் போது ரணில் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் ஆழமாக உற்றுநோக்க வேண்டிய ஒன்றாகும். அதாவது, முற்றிலும் புதியதொரு அரசியலமைப்பை நோக்கிச் செல்வதா அல்லது தற்போது உள்ள அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதா என்பது தொடர்பில் இன்னும் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று ரணில் குறிப்பிட்டிருக்கின்றார். அதே வேளை ரணில் தெரிவித்திருக்கும் பிறிதொரு விடயம் ஆழமான அரசியல் உள்ளடக்கம் கொண்டதாகும். அதாவது, அதிகாரப் பகிர்வு விடயத்தில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. நாடு பிளவுபடக் கூடாது என்பதில் சகலரும் இணங்கியுள்ளனர். மாகாணங்களுக்கு அதிகூடிய அதிகாரப்பகிர்வு வழங்கப்படுவது தொடர்பிலும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் மாகாண நிர்வாகத்தில் அனுபவத்தை பெற்றுள்ளன. அதிகாரப்பகிர்வு தொடர்பில் முன்னர் இருந்த பிரிவுகள் தற்போது இல்லை. ஒரேயொரு பிரிவு மட்டுமே உண்டு. அதாவது முதலமைச்சர்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பது மட்டுமே.

ரணிலின் மேற்படி கூற்றையும் சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண சபையை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட குழப்பங்களையும் ஒன்றுசேர வாசிப்புச் செய்தால் இதன் அரசியல் ஆழத்தை புரிந்துகொள்ள முடியும். தங்களுடைய நடவடிக்கைகளுக்கு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை ஒரு இடையூறாக இருக்குமென்றே கொழும்பு கருதுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு மாகாண சபையில் திட்டமிட்டு குழப்பங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்தக் குழப்பங்கள் மேலும் தொடரலாம். இது தொடர்பில் விக்கினேஸ்வரன் தெரிவித்திருக்கும் அபிப்பிராயங்களும் கவனிப்புக்குரியவைதான். வடக்கு மாகாண சபையையும் அதன் செயற்பாடுகளையும் திட்டமிட்ட வகையில் குழப்புவதன் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பவதற்கு அரசாங்கமும் அவர்களோடு சேர்ந்தியங்குகின்ற தமிழ் அரசியல் வாதிகளும் முயன்று வருகின்றார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கும் விக்கினேஸ்வரன், சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி உட்பட பல்வேறு ஆக்கபூர்வமான அதிகாரப்பகிர்வினை தமிழர் தரப்பு எதிர்பார்த்திருக்கும் வேளையில் அதனை வழங்காது ஒரு அரைகுறைத் தீர்வை திணிப்பதற்கு அரசாங்கம் முயன்று வருவதாகவும் விக்கி குறிப்பிடுகின்றார். விக்கினேஸ்ரன் கணிப்பு நிராகரிக்கக் கூடிய ஒன்றல்ல.

இதே வேளை விக்கினேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை ஏனைய மாகாண சபைகளிலிருந்து தனித்துத் தெரிகிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான அமைச்சர்களை விசாரிப்பதற்கென விக்கினேஸ்வரன் விசாரணைக் குழுவொன்றை நியமித்து அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்திருந்தார். இதுவும் ஏனைய எந்தவொரு மாகாண சபையிலும் இடம்பெற்றிராத விடயம். இந்த விடயங்களிலுள்ள ஆலோசனைப் பிரச்சினைகளை ஒரு புறமாக வைப்போம். உதாரணமாக விசாரணைக் குழுவிலுள்ளவர்களின் தகுதிநிலை தொடர்பான கேள்விகள். எந்தவொரு விடயத்தை முன்னெடுக்கும் போதும் சில குறைபாடுகள் நிகழ்வது இயல்பே. ஒரு ஆரம்பநிலையில் இருக்கும் வடக்கு மாகாண ஆட்சியில் இதனை முற்றிலுமாக தவிர்க்கவும் முடியாது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தற்துனிவின் அடிப்படையில் சில விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். இன்று அனைவரும் வடக்கு மாகாண சபையை பிரச்சினைக்குரிய ஒன்றாக பார்ப்பதற்கும் விக்கினேஸ்வரனை வில்லனாகப் பார்ப்பதற்கும் இதுவே காரணம். இலங்கையின் சிங்கள ஆள்புல எல்லைக்குள் தமிழர்கள் தனித்துவமான முடிவுகளை எடுப்பதை சிங்கள அளும் வர்க்கம் விரும்பவில்லை. ஆனால் அதிக அதிகாரத்தை கோரும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண சபை, அவ்வாறுதான் இயங்க வேண்டும். விக்கினேஸ்வரன் அதனையே செய்ய முற்படுகின்றார். எல்லாவற்றுக்கும் மத்தியிடம் அனுமதி பெறும் நடைமுறைகளுக்கு சவால் விடும் வகையில் அவர் செயற்பட்டு வருகின்றார். விக்கினேஸ்வரனின் இந்தச் செயற்பாடுகள்தான் கொழும்பின் நிகழ்ச்சிநிரலுக்கு பிரச்சினையாகவும் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த நேரத்தில் விக்கினேஸ்வரன் போன்ற ஒருவர் வடக்கு மாகாண சபையில் இல்லாதிருந்தால் நல்லதென்று கொழும்பு கருதலாம். ஒரு வேளை அவர் இருந்தாலும் கூட முழுமையான உறுப்பினர் ஆதரவுடன் இல்லாமல் இருப்பது நல்லதென்றும் கருதியிருக்கலாம். அந்த வகையில் பார்த்தால் ஒன்றில் விக்கினேஸ்வரனை அகற்றிவிடுவது அல்லது அவரை சபைக்குள் பலவீனப்படுத்துவது. இரண்டாவது நிiலையில் அவர்களது இலக்கு வெற்றிபெற்றுவிட்டது. தற்போதைய நிலையில் அரசியல் தீர்வு தொடர்பான வடக்கு மாகாண விவாதங்களில் ஒரு அமைப்புக்குள் இரு வேறுபட்ட வாதங்கள் வெளிவரக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபை பிளவுபட்டிருக்கிறது. சிந்திக்கும் தமிழ் தரப்பின் முழுக் கவனமும் இவ்வாறான உள் மோதல்களைச் சுற்றியே வலம்வரும் இவ்வாறு நிகழ வேண்டுமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

TNA

இந்த இடத்தில்தான் மீண்டும் கூட்டமைப்பின் ஒற்றுமை தொடர்பில் கேள்வி எழுகிறது. ஓற்றுமை அவசியம். இவ்வாறான சூழலில் தமிழ் தரப்பு பிரிந்துநிற்கக் கூடாது. எனவே கூட்டமைப்பை உடைப்பதற்கு எவருக்கும் இடமளிக்க மாட்டோம். இவைகள் அனைத்தும் சரியான வாதங்கள்தான். இதில் மாறுபட ஏதுமில்லை. ஆனால் அந்த ஒற்றுமையின் இலக்கு என்ன? எதைச் சாதிப்பதற்காக அந்த ஒற்றுமையை நாம் பேணிப் பாதுகாத்துவருகின்றோம்? இந்தக் கேள்விகளுக்கு கூட்டமைப்பின் தலைவர்களிடம் இருக்கின்ற பதில் என்ன – அதாவது ஒற்றுமை தொடர்பில் பேசுகின்றவர்களிடம் ?

இந்தக் கட்;டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது கூட ஒரு செய்தியை காண முடிந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசியல் தீர்வு தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக! ஆனால் இந்தப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சி மட்டுமே பங்குகொண்டிருக்கிறது. அவ்வாறாயின் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் கூறுகின்ற ஒற்றுமையின் அளவுகோல் என்ன? அதற்கான பெறுமதி என்ன? ஒரு அரைகுறையான அரசியல் தீர்வை திணிப்பதற்கு சிலர் கூட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார்கள் என்றால், அதிலும் கூட, நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம் என்று, கூட்டமைப்பின் தலைவர்கள் வாதிட முடியுமா? கூட்டமைப்பின் பெயரால்தான் தமிழரசு கட்சி, அரசியல் தீர்வு தொடர்பில் தன்னிச்சையாக செயற்பட்டு வருகிறது. தங்களின் தன்னிச்சையான முடிவுகளுக்கு வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இடைஞ்சலாக இருக்கின்றார் என்னும் போதும், அவரை வெளியேற்றுவதற்கான முயற்சியையும் தன்னிச்சையாகவே மேற்கொண்டது. கணக்கு பிழைத்துவிட்ட பின்னர்தான் ஏனைய கட்சிகளை நாடியது.

ஆனால் வழமைக்கு மாறாக இந்த விடயத்தில் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட்டிருந்தன. விக்கினேஸ்வரனை பாதுகாக்கும் கவசமாக மேற்படி மூன்று முன்னாள் ஆயுத விடுதலை இயக்கங்களே இருந்தன. ஒரு வேளை அவர்கள் தமிழரசு கட்சியின் முடிவுக்கு இணங்கியிருந்தால் விக்கினேஸ்வரன் தற்போது ஒரு சாதாரண மாகாண சபை உறுப்பினராகவே இருக்க நேர்ந்திருக்கும். இது தொடர்பில் விக்கினேஸ்வரனிடம் ஒரு புரிதல் இருப்பது அவசியம். இந்த விடயத்திலும் தமிழரசு கட்சி ஒரு படிப்பினையை பெற்றுக்கொண்டது. தமிழரசு கட்சி நிச்சயம் இந்தப் படிப்பினையிலிருந்தே, தனது எதிர்கால தேர்தல் வியூகங்களை வகுக்கும். அதனை பிறிதொரு பத்தியில் தனித்து பார்ப்போம். வடக்கு மாகாண சபை விவகாரத்தில் கூட்டமைப்பின் ஏனைய மூன்று காட்சிகளும் வெளிப்படுத்திய ஒற்றுமையை, அரசியல் தீர்வு விடயத்திலும் காண்பிப்பது அவசியம். அரசியல் தீர்வு விடயத்தை சம்பந்தன் மற்றும் சுமந்திரனிடம் மட்டும் விட்டுவிட்டு, அமைதியாக இருக்கும் அனுகுமுறையை ஏனைய கட்சிகள் இனியும் ஒற்றுமையின் பெயரால் நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. அரசியல் தீர்வு விடயத்தை நோக்கி தமிழ் சிந்திக்கும் தரப்பினர் தங்களது முழுக் கவனத்தையும் குவிக்க வேண்டியதும் அவசியம். அதன் மூலமாகவே, அரைகுறையான அரசியல் தீர்வைவொன்றை, தமிழ் மக்கள் மீது திணிக்கும் சிலரது முயற்சிகளை தோற்கடிக்க முடியும். எவ்வாறு விக்கினேஸ்வரனை அகற்ற முற்பட்ட போது அது வடக்கில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி தமிழரசு கட்சியை பின்வாங்கச் செய்ததோ, அது போன்றதொரு மக்கள் எழுச்சியை அரசியல் தீர்வு விடயத்திலும் ஏற்படுத்தினால் மட்டுமே இதில் ஈடுபடுபவர்களை பின்வாங்கச் செய்யலாம்.


One thought on “அரசியல் தீர்வும் கூட்டமைப்பின் ஒற்றுமையும் ?

  1. S.Sakthithasan

    There should be no backward motion for Tamil Leaders and Tamil intelligent groups. The solution should be devolution of power that leads to real independency. No one should not agree the solution which is not fulfilled our basic demand. Tamils wish to live with majority and other minorities with happy.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *