Search
Tuesday 4 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

அழகிய சிற்றம்பலமுடையான்

அழகிய சிற்றம்பலமுடையான்

பிறேமலதா பஞ்சாட்சரம்
“அழகிய சிற்றம்பலமுடையான்” என்ற அழகான கையெழுத்தின் சொந்தக்காரர் யாரென சைவ சமயத்தோர் பலருக்கும் தெரிந்திருக்கும். திருவாசகம் என்னும் தேன்தமிழ் பாடல்களை மணிவாகசப் பெருமான் பாட அதனை அழகாக எழுதி உலகுக்களித்த சிவபெருமானுக்கு சொந்தமான கையெழுத்தே “அழகிய சிற்றம்பலமுடையான்” என்பது. அழகிய சிற்றம்பலமுடையான் என சிவன் ஏன் எழுதவேண்டும் என இக்கட்டுரை நோக்குகிறது.

திருவாசகம் எழுதப்பட்ட நிகழ்வு
சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசகர் சிதம்பரத்திற்கு சிவனை தரிசிக்க வந்த பொழுது சிவபெருமான் மானிட உருக்கொண்டு அந்தணர் வடிவில் மாணிக்கவாசாகரைக் கண்டு நீங்கள் பாடிய திருவாசகத்தை பாடினால் தான் ஓலையில் அதனை எழுதிக்கொள்வதாகக் கூற மாணிக்கவாசகரும் அதற்கு இசைந்து சிவனை நினைத்து அருள் நிலையில் திருவாச பாடல்களைப் பாட மானிட உருவில் வந்த சிவபெருமான் அதனை ஓலைச்சுவடிகளில் எழுதிகொள்கின்றார். மாணிக்கவாசகர் திருவெம்பாவை பாடல்களை பாடி முடித்ததன் பின்னர் “பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக” என சிவன் அன்புக் கட்டளையிட மாணிக்கவாசகரும் மெய்மறந்த நிலையிலே திருச்சிற்றம்பலக் கோவையினை தில்லையம்பல சிவனை ( பேரான்மாவை ) தலைவனாகவும் தன்னை (ஆன்மாவை ) தலைவியாகவும் நினைத்து அகத்திணை மரபில் அமைத்துப் பாடிமுடிகின்றார்.

மாணிக்கவாசகர் பாடியதை அழகுற எழுதிய சிவபெருமான் மொத்தமாக திருவாசகத்தின் 658 பாடல்களையும் எழுதியெடுத்து அவ்வோலைச் சுவடிகளை ஒழுங்காகக்கட்டி ஆடல்வல்லானின் (நடராஜ பெருமான்) பொற்சபையின் முன்னேவைத்து விட்டு மறைந்து விட்டார். அடுத்த நாள் காலையில் பொற்சபையில் ஓலை சுவடிகளைக்கண்ட தில்லைவாழ் அந்தணர்கள் அதனை எடுத்துப் படித்துப் பார்க்கையில் இறுதி ஓலையில் “மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது என கையெழுத்திடப்பட்டிருந்தது. அதனைப் படித்தவர்கள் மாணிக்கவசகரை அழைத்து வந்து அவரைக் கேட்ட பொழுது மாணிக்கவாசகரும் முதல்நாள் இரவு நடந்த நிகழ்வுகளைக் கூற சிவனின் அருளை வியந்து கண்ணீர் சொரிந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் மாணிக்கவாசகரிடம் திருவாசகத்தின் பொருளைக் கூறுமாறு கேட்க ஆடல்வல்லானை சுட்டிக்காட்டி அவரே அதன் பொருள் என உரைகின்றார் . அப்பொழுது அங்கே ஓர் ஒளி தோன்றியது அவ்வொளியை நோக்கி சிரசில் கைகுவித்த வண்ணம் “என் சிவமே என் சிவமே” என வணங்கிக் கொண்டு சென்ற மணிவாசகப் பெருமான் அவ்வொளியுடன் இரண்டறக் கலந்தார் என்பது மணிவாசகப்பெருமானின் வரலாறு.

aadal vallan 2

திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவன்தான் எழுதி அருளினார் என்ற செய்தியை திருவாதவூரர் புராணம் அருளிய கடவுண்மாமுனி

“திருச்சதக முதலாச் சிறந்ததமி ழறுநூறும்
விரித்தவகப் பொருட்கோவை விளங்கவொரு நானூறும்
உரைத்தனன்பின் முடிந்தவிடத் துயர்வாத வூரன்மொழி
தரித்தெழுது மம்பலவ னெழுத்தென்று சாற்றினான்”
என்ற பாடலூடாக கூறுகின்றார் .

திருக்கோவையார்
சிவன் மாணிக்கவாசகரை கோவை பாடச்சொன்ன போது அவர் பாடிய திருகோவை அகத்திணை மரபில் அமைந்தமையினால் அதனைச் சிற்றின்ப நூல் என வாதிடுவோருமுளர். ஆனால் அது அத்தகைய நூல் அல்ல என்பதனை சைவ சித்தாந்த அமைப்பைப் பற்றி விரிவான ஆய்வினைச் செய்த குமரகுருபரர் (17ஆம் நூற்றாண்டு ) திருக்கோவை என்றால் என்ன என்பதனை தனது சிதம்பர மும்மணிக்கோவை என்ற நூலின் 23ஆம் செய்யுளில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் .

“ஐந்திணை யுறுப்பில் நாற்பொருள் பயக்கும்
காமஞ் சான்ற ஞானப் பனுவல்”
அகத்திணை மரபில் அமைந்த ஞான நூல் அதுவாகும். ஆன்மாவுக்கும் இறைவனுக்கும் இடையிலுள்ள உறவு எத்தகையதாக இருக்க வேண்டும் என்ற சைவ சித்தாந்த கருத்தை உணர்த்துவதாக பின்வரும் திருக்கோவையார் பாடல் உள்ளது.

‘சொற்பால் அமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ஙனே
நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நானிவ ளாம்பகுதிப்
பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில்வெற்பில்
கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே’.

தலைமகளைக் கூடிப்புணர்ந்த இன்ப அனுபவத்தைத் தலைமகன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இதன் பொருள்:

‘புலியூர்ப் புனிதனான தில்லைச் சிவனின் பதியில், கல்பரவிய மலைப்பரப்பில், நாம் புணர்ந்த களவுச் சூழலிலே, அவள் அமுது, நான் அதன் சுவை என்னும் இரண்டறக்கலந்த நிலையை தெய்வம் தந்தது. நான் இவள் என்னும்படி ஒன்றென நின்ற நிலையை என்னைத் தவிர வேறுயார் அறியவல்லார்?’ என்பதே இதன் வெளிவாரியான பொருளாகும். இதன் ஆழ்ந்த பொருள் தில்லைப்பதிதனில் உள்ள பரமான்மாவுடன் ஆன்மா ஒன்றிய பேரின்பப் பெருநிலையை விளக்குகின்ற பாடல் இதுவாகும்.

“திருக்கோவையார் வாழ்வுக்குரிய இயற்கை நூல்; இன்ப அன்புக்குரிய அகநூல்; வீடு பேற்றிற்குரிய ஞான நூல். அஃதொரு தமிழ்க் கோயில்; இன்ப அன்புத் தெய்வத் திருக்கோயில். அதனுள் இயற்கை – இறையின் கோலங்கள், பாட்டோவியங்களாக வரையப் பட்டிருக்கின்றன. இவ்வோவியங்களை அழியா முறையில் வரைந்தமைத்துத் திருக்கோவையாரென்னும் தமிழ்க் கோயிலை நமக்களித்த மாணிக்கவாசகனார்க்கு நாம் எத்தகைக் கைம்மாறு செலுத்த வல்லேம்! உரிய கைம்மாறும் உலகில் உண்டோ? அத்திருக் கோயிலை முறைப்படி வழிபட்டு விடுதலை பெற முயல்வதே அவர்க்கு நாம் செலுத்தும் கைம்மாறாகும்.” என திரிகோவையார் இயல்பு (1936 ) என்ற நூலின் அணிந்துரையில் (பக்கம் 13-14) திரு .வி .காலியாண சுந்தர முதலியார் அவர்கள் குறிப்பிடுகின்றார் .

பண்டைத் தமிழர்களின் மதம்
சிவன் என்னும் தமிழ் சொல்லுக்கு அன்பு, அழகு, அருள், அறிவு, அறம், செம்மை, ஒளி, இன்பம், தூய்மை, இன்பம், இனிமை எனும் பல பொருள்கள் உள்ளன. இச் சொற்களின் பொருள்கள் அனைத்தும் நிரம்பிய சிவபெருமானே சைவ சமயத்தின் முழுமுதல் கடவுள், தமிழர்கள் பன்நெடுங்காலமாக கடைப்பிடித்துவரும் ஆதியான சமயம். சைவ சமயம் என்பது இந்தியாவுக்கு ஆரியர்கள் படையெடுத்து வருவதற்கு முன்பிருந்தே கடைபிடிக்கப்பட்ட தொன்மையான மதம். சிந்துவெளி நாகரிக மக்கள் ( கி.மு 3000 – கி.மு 2500) கடைப்பிடித்த மதம் என்பது தொல்லியல் ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது. இன்னமும் விரிவாக அது தமிழர்களின் நாகரீகமே என்பதற்கான சான்றாதாரங்களையும் ஒப்பீடுகளையும் பல்வேறு தொல்லியல் ஆய்வாளர்கள் முன்வைத்து நிறுவியுள்ளனர்.

சைவ சித்தாந்த கோட்பாடு
தமிழர்கள் ஆன்மிகம் தொடர்பாக சிந்தித்து கண்டறிந்த பேருண்மையே சைவ சித்தாந்தம், இது சைவ சமயத்தின் அடிப்படையாக விளங்குகின்றது. சைவ சித்தாந்த தத்துவ முடிவுகளின்படி பதி ( பேரான்மா/இறைவன் ) , பசு (ஆன்மா /உயிர் ), பாசம் (தளைகள் / மலங்கள்) என்ற மூன்றும் அழிவில்லாது என்றும் நிலைத்திருப்பன. ஆணவம், கன்மம், மாயை என்ற தளைகளால் பிணைக்கப்பபட்டிருக்கும் ஆன்மாவானது அவற்றிலிருந்து விடுபட்டு பேரான்மாவாக்கிய பரம்பொருளை சேர்வதே முக்தி நிலையாகும் . அதனையே அடைவதிலேயே ஒவ்வொரு ஆன்மாவும் முழுமையான பேரானந்தத்தைப் பெறுகின்றது.

இப்பேருண்மையையே சிதம்பரத்தில் அன்று மணிவாசகப்பெருமானின் திருவாசகத்தை தொகுத்தளித்த சிவபெருமான் தனது கையொப்பத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். “அழகிய சிற்றம்பலமுடையான்” என்பது அழகான சிற்றம்பலமான இடமாகக் கொண்ட சிவன் என்பது வெளிவாரியாக பொருள் கொள்ள முடியும். அதாவது சிதம்பரத்துறையும் சிவபெருமான். அவ் வாசகத்தின் ஆழ்ந்த பொருள் யாதெனப் பார்க்க சிற்றம்பலம் என்னும் தமிழ் சொல்லை சிறு +அம்பலம் என பிரிக்கலாம் . அம்பலம் என்றால் வெளி எனப் பொருள்படும் . சிற்றம்பலம் என்பது சிறுவெளி என்பதாகும். பெருவெளியாகிய பேரண்டம் இவ்வுலகையும் சேர்ந்து விரிந்து செல்வது, பேரண்டத்தை ஒத்த சிறு அம்பலமே சிற்றம்பலம் எனும் சிவனுறையும் திருக்கோவில் ஆகாயத்தலமென சிறப்பிக்கப்படுகின்ற சிதம்பரம். அச்சிற்றம்பலம் ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் உள்ளது. ஆன்மாவுக்குள் பேரான்மா கலந்துள்ள நிலையை ஒவ்வொரு ஆன்மாவும் அறிகின்ற பொழுது அது பேரானந்த பெருநிலையைப் பெறுகின்றது. அதாவது நாம் தான் அது . அதுவே நாம் என உணரும் இரண்டறக்கலக்கும் நிலை ஆகும்.

இதனையே திருமூலர் அருளிய திருமந்திர பாடலொன்றிலிருந்து கிடக்கின்றது.

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே.

(திருமந்திரம்)

சிதம்பர இரகசியம்
சிதம்பரத்தில் ஆடல்வல்லானின் சிலையுள்ள சிற்சபையில் வலப்பக்கமாக திரையொன்றுள்ள சிறுவாயில் ஒன்றுள்ளது. குறிப்பிட்ட காலத்தில் பூசையின் போது அத்திரையை விலக்கி தீபாராதனை காட்டுகிறார்கள். அந்த தீப ஒளியில் வெளிச்சத்தில் நாம் காண்பது தங்கத்தினாலான வில்வதளமாலை தொங்க விடப்பட்டுள்ளதேயன்றி வேறொன்றுமில்லை. இதன் கருத்து இறைவன் அங்கு ஆகாய உருவில், அருவ வடிவமாக இருக்கிறார் என்பதுதான். இதுவே பரசிவ சிவானந்த சிதம்பர இரகசியம்! இவ் வடிவே பரவெளியென்னும் பேரண்ட வடிவமாகும். அதனாலேயே “அண்டத்திலுள்ளது பிண்டத்தில் உள்ளது!” எனும் பழமொழி கூறுகின்றது.

Sithambaram

ஒவ்வொரு ஆன்மாக்களும் தமது ஆணவம் கன்மம் மாயை முதலிய திரைகளை நீங்கின் எமது ஆன்மாவை கோடி ஒளிவடிவம் கொண்ட பேரான்மாவாக காண முடியும். அந்நிலையே அழகு பொருந்திய சிற்றம்பல நிலையாகும்.

ஆதிசங்கரருடைய மெய்ஞ்ஞான கோட்பாடு
இதனையே ஆதிசங்கரருடைய மெய்ஞ்ஞான அத்வைத (இரண்டற்ற நிலை ) கோட்பாடு விளக்குகின்றது . ஆதிசங்கரர் வடநாட்டவர் என்ற கருத்து மயக்கம் பலபேருக்கு உண்டு . அவர் சேரநாட்டை சேர்ந்த தமிழர். இன்றைய கேரளா மாநிலத்தில் எர்ணாகுள மாவட்டத்திலுள்ள காலடி என்னும் ஊரிலே பிறந்தவர் ஆதிசங்கரர். இவருடைய அத்வைத கோட்பாட்டின் நான்கு அடிப்படைகள் ஆவன:

1. என்றும் நிலைத்திருக்கும் பொருள் ஒன்றே ஒன்றுதான். அதுதான் ‘ஸத்’ என்றும், (பரப்-)பிரும்மம் அல்லது பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தவிர வேறு எதுவும் மெய்ப்பொருளல்ல.

2. பிரும்மம் என்பது பெயர் உருவம் ஆகிய எந்த குணங்களும் அற்றது. அதனால் அதை நிர்க்குணப்பிரும்மம் என்று சொல்லி, நாம் மனதால் நினைக்கக்கூடிய குணங்களுடன் சேர்ந்த கடவுள் என்ற பரம்பொருளை ஸகுணப்-பிரும்மம் என்றும் வேறுபடுத்தவேண்டும்.

3. அனைத்துயிர்களுக்கும் உயிருக்குயிராகவும் அறிவுக்கறிவாகவும் இருக்கும் ஜீவாத்மா, வெறும் தோற்றமான அகில உலகிற்கும் அடிப்படை மெய்ப்பொருளாக இருக்கும் பிரம்மம், ஆகிய இரண்டும் இரண்டல்ல, ஒன்றே.

4. உபநிடதங்கள் மெய்ப்பொருளை குணங்களுள்ளதாக விவரிக்கும்போது அதை (சகுனப் பிரம்மம்) ( உருவத்துடன் கூடிய இறைவன்) இடைநிலை விளக்கங்களாகவும், குணங்களற்றதாக விவரிக்கும்போது அதை (நிர்குணப் பிரம்மம்- உருவம் அற்ற இறைவன்) கடைநிலை விளக்கமாகவும் கொள்ளவேண்டும்.

aathisankarar
பேரான்மாவினதும் ஆன்மாவினதும் தன்மையை தற்காலத்திற்கு ஏற்றவகையில் விளக்கமாக தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ( 14.08.1911 – 28.03. 2006) அவர்கள் “எல்லாம் வல்ல ஆதியான, எங்கும் நீக்கமற நிறைந்த மெய்ப்பொருளாகிய வெட்டவெளியின் நுண்ணியக்க ஆற்றலே ‘பரமாணு’ என்னும் சிறப்பாற்றல். இப்பரமாணுவே பேரியக்கத் தொடர்களத் தோற்றங்கள் அனைத்துக்கும் அடிப்படையான மூலக்கூறு. இக்கூறு பல சேர்ந்த ஆற்றல்தான் அணு (Atom) எனப்படுகிறது. இவ்வணுக்கள் பல இணைந்த இயக்க ஆற்றல் பேரணு அல்லது அணுத்திறள் (Molecule) எனப்படுகிறது. இவ்வணுத்திரல்கள் கூடிய தோற்றங்களே பேரியக்கத் தொடர்களாக விளங்குகின்றது. மெய் (Truth) என்னும் தெய்வநிலையின் ஆற்றலாக இருப்பதால் இவ்வாற்றலே “உயிர்” என அழைக்கப்படுகின்றது. பொருளைச் சிவமெனக்கொண்டு அதன் ஆற்றலாகிய “விண்” நிலையைச் சக்தியெனவும் வழங்கப் பெறுகின்றது. இந்த நுண்ணியக்க மூலக் கூறுகள் நெருங்கி இயங்கும் விரிந்த ஒரு தொடர்களமே மற்ற தோற்றங்கள் யாவும் இயங்கவும் முடியவும் அடிப்படையான பேராற்றல் களம். இதுவே பிரபஞ்ச காந்த களம் (Universal field). இதனை பேரான்மா என்றும் பேருயிர் என்றும் வழங்குகின்றோம் என்கின்றார் .

வள்ளளார் பெருமான் (05.10. 1823 – 30.01. 1874)
இராமலிங்கர் என இயற்பெயர் கொண்ட வள்ளளார் தனது அருட்பெருஞ்ஜோதி அகவலில் சிற்சபையே அருட்பெருஞ்ஜோதி என்பதை மிகவும் விளக்கமாக தருக்கின்றார்.

இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி என அண்ட பிண்ட தத்துவத்தை இருவரிகளில் கூறும் வள்ளலார் பெருமான் அப்பேரொளியே சிதம்பர சிற்சபையிலுள்ள மதங்களை கடந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவர் என்பதை தான் கண்டுணர்ந்ததாக விளக்குகின்றார்.

பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி

தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி

சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

என்றா தியசுடர்க் கியனிலை யாயது
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

சிற்றம்பல பேருண்மையை விளங்குகினறரர் . சிதம்பரத்தில் கோவில் கொண்டுள்ள இறைவனே எல்லா ஆன்மாவுகுள்ளும் இருக்கும் இறைவன் என்பதை வள்ளளார் கூறுகின்றார். இதனை உணர்த்தும் முகமாக தனது கையொப்பத்தை சிதம்பர இராமலிங்கம் என கையொப்பமிடுவார். தனது வாழ்வு நெறி மூலம் இறுதியில் ஒளியுடம்புடன் மாணிவாசகப் பெருமான் போன்றே இறைவனுடன் இரண்டறக் கலந்தார்.

ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் இருக்கும் மெய்ப்பொருள்ளான பேரான்மாவை வணக்கும் முகமாக சைவசமய ஆன்மிகப் பெருமக்கள் ஒருவரை ஒருவர் காணும் பொழுது இருகரம் கூப்பி திருச்சிற்றம்பலம் என்று வணக்கம் செலுத்துவது வழமை. அதனை ஏற்றுக்கொள்ளும் மற்றவர் இருகரம் கூப்பி தில்லையம்பலம் என பதில் வணக்கம் கூறுவர் . அதாவது உன் ஆன்மாக்குள்ளுள் இருக்கும் திருச்சிற்றம்பலத்திலில் உறையும் இறைவனான சிவனே என் ஆன்மாவுக்குள்ளும் இருக்கின்றார் என்பதே அதன் பொருளாகும்.

இதனை உறுதிப்படுத்தும் சான்றாக மணிவாசகப் பெருமான் தனது சிவபுராணத்தில்

“கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் “

என்று ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் இருக்கும் சிவனைக் கூறி, பின்வரும் பாடலடிகள் மூலம் அச்சிவன் தில்லைச் சிற்றம்பல சிவன் என கூறி சிவபுராணத்த நிறைவு செய்கின்றார்.

“தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ⁠
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து!”

vallar

இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கின்ற பொழுது சிவன் ஏன் மாணிக்கவாசகரின் திருவாசகம் எழுதிய ஏட்டில் தன்னை “அழகிய சிற்றம்பலமுடமுடையான்” என உவமித்து கையொப்பமிட்டதன் பொருளை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மனிதனும் மற்றைய மனிதனை சிவனின் உருவாக கருதி அன்பு செய்யின் அவனுடைய அழுக்காறு (பொறாமை), அவா( பேராசை) , வெகுளி (சினம்), இன்னாச்சொல் (தீயமொழி ) என்னும் நான்கும் செயலற்றுப் போக அங்கு அன்பே சிவாமாய் அமர்ந்திருக்கும் நிலை அழகிய சிற்றம்பலமுடையானின் இருப்பிடமன்றி வேறேது ?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *