Search
Monday 3 August 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை இருக்கின்றதா? : அம்பாறை சம்பவம் தொடரபாக ராஜித

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை இருக்கின்றதா? : அம்பாறை சம்பவம் தொடரபாக ராஜித

ஆண்களுக்கு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்து மாத்திரைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரட்ன அம்பாறையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவத்திற்கு காரணமானதாக கூறப்படும் மாத்திரை விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பாக விசாரணைகளை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது அம்பாறையில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேள்வி : அம்பாறையில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?
பதில் : தற்போது அங்கு ஏற்பட்டிருந்த நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய சகரையும் கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பாக ஆராயும் போது சில தரப்பினர் வேண்டுமென்றே இவ்வாறான நிலைமையை ஏற்படுத்தினார்களா? என்பது தொடர்பாகவும் தேடப்படுகின்றது.
கேள்வி : உணவில் ஏதோவொரு மருந்து வகை கலக்கப்பட்டதாக கூறப்படும் விடயத்தை அடிப்படையாக கொண்டே அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சு மட்டத்தில் ஏதேனும் விசாரணைகள் நடத்தப்படுகின்றதா?
பதில் : வைத்தியர்கள் மீதும் இதற்கு முன்னர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வைத்தியசாலைகளில் யாரேனும் தமிழ் முஸ்லிம் வைத்தியர்கள் செயற்படும் போது அவர்கள் சிங்கள மக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். ஆனால் அது தொடர்பாக ஆராயும் போது அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. ஆனால் தற்போது அம்பறை சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மாத்திரை தொடர்பாக எனக்கு ஒன்றும் தெரியாது. அது தொடர்பாக பொலிஸ் விசாரணைகள் நடக்கின்றன. விசாரணைகள் நடத்தப்பட்டு சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய விடயமேதும் இருக்குமாக இருந்தால் நாங்கள் விசாரணை நடத்த தயார்.
கேள்வி : குறித்த மாத்திரை விடயம் தொடர்பாக உணவகத்தின் உரிமையாளரினால் ஏற்றுக்கொள்ளும் வீடியோவொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளனவே
பதில் : அப்படியொரு வீடியோவையும் நான் பார்க்கவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்கள் உண்மையானதா? இல்லையே. போலியாகவும் வீடியோவை தயாரிக்கலாம். யாருக்கும் தெரியும் அது கடை உரிமையாளரா? இல்லையா? என்று. கடந்த காலங்களில் இனவாதங்கள் பரப்பப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
கேள்வி : அவ்வாறான மருந்து வகைகள் உலகில் இருக்கின்றதா? இலங்கையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
பதில் : கருத்தடை மாத்திரைகளை கொடுக்க வேண்டுமென்றால் பெண்களுக்குதானே கொடுக்க வேண்டும். ஆண்களுக்கு அல்லவே. ஆண்களுக்காக அவ்வாறான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆண்களுக்காக வேறு ஒன்றுதான் இருக்கின்றது. -(3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *