தலைப்பு செய்திகள்

ஆயுதப் போராட்டமும் தமிழர் அரசியலும் ஒரு நேர்காணல் தொடர்பான சர்சைகளை முன்வைத்து…

ஆயுதப் போராட்டமும் தமிழர் அரசியலும் ஒரு நேர்காணல் தொடர்பான சர்சைகளை முன்வைத்து…

யதீந்திரா

ஆயுதப் போராட்டம் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. அது சரியானதா அல்லது தவறானதா என்னும் வாதங்கள் முகநூல்களில் நிரம்பி வழிகின்றன. கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் நேர்காணல் ஒன்றைத் தொடர்ந்துதான் இ;வ்வாறான வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சுமந்திரனின் கருத்துக்கள் எவையும் புதியவையோ அல்லது ஆச்சரியமானவையோ அல்ல. அவர் இதற்கு முன்னரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார். முன்னர் தமிழில் தெரிவித்ததை இப்போது சிங்களத்தில் தெரிவித்திருக்கின்றார். இது ஒன்றுதான் வேறுபாடு.

ஆயுதப் போராட்டம் தொடர்பில் ஒருவரிடம் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்க முடியும். அதனை வெளிப்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. இதில் விவாதிக்க – முரண்பட ஏதுமில்லை. ஒருவர் இதுதான் எனது நிலைப்பாடு என்று கூறிய பின்னர் – இல்லை – நீ இப்படித்தான் கூற வேண்டுமென்று மற்றவர்கள் கூறுவது எந்தளவிற்கு சரியாக இருக்க முடியும்? ஆயுதப் போராட்டங்கள் உலகெங்கும் நடைபெற்றிருக்கின்றன. ஒரு காலகட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரேயொரு மார்க்கமாக ஆயுதப் போராட்டங்களே காணப்பட்டன. அதில் அன்றைய உலக அரசியல் போக்கும் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. அவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தமிழர் அரசியலும் ஒரு கட்டத்தில் அயுதப் போராட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஒரு கட்டம் வரைக்கும் அந்த ஆயுதப் போராட்டம் அயல்நாடான இந்தியாவினால் போசிக்கப்பட்டது.

தமிழர் ஆயுதப் போராட்டம் என்பது தமிழரசு கட்சி – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் பெயர்களில் இயங்கிய மிதவாதத் (ஜனநாயகவழி) தலைமைகளின் தோல்வின் விளைவாகும். தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை நோக்கி சென்றமைக்கு பின்னால் சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை இருக்கின்றது என்பது எந்தளவிற்கு உண்மையோ, அதேயளவிற்கு தமிழ் மிதவாதிகளின் இயலாமையும் இருக்கின்றது என்பதும் உண்மை. ஏனெனில் தமிழ் மிதவாதத் தலைவர்கள் அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேடைகளில் கூறிக் கொண்டாலும், காந்தி போன்று அகிம்சை போராட்டத்தை நம்பிக்கையுடனும், உண்மையாகவும் முன்னெடுக்கவில்லை. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்திருந்தால் இளைஞர்கள் வேறுவிதமாகவும் சிந்தித்திருக்கலாம். ஈழத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அகிம்சை போராட்டங்களில் ஒரு தமிழ் தலைவர் கூட இறக்கவில்லை. அந்தளவிற்குத்தான் அவர்களது அன்றைய அகிம்சைப் போராட்டமிருந்தது. இளைஞர்கள் தங்களின் கட்டுப்பாட்டை மீறிச் சென்று கொண்டிருக்கின்றனர் என்னும் நிலையில்தான், மிதவாதிகள் ஆயுதப் போராட்டத்திற்கு ஆதரவாக பேசத் தொடங்கினர். அன்றைய ஆயுதப் போராட்டத்தின் பிரதான தலைவர்களாக இருந்தவர்கள் பலரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தீவிர விசுவாசிகள்தான். ஆனாலும் ஆயுதப் போராட்டம் தங்களுக்கு எதிராக திரும்பும் என்பதை அப்போது எந்தவொரு மிதவாதத் தலைவர்களும் உணர்ந்திருக்கவில்லை. நிலைமைகள் தலைக்கு மேல் சென்ற பின்னர்தான், ஆயுதப் போராட்டத்தை மனதில் வெறுத்துக் கொண்டு, உதட்டில் ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்தனர். இது இன்றுவரை தொடர்கிறது.

சுமந்திரனின் நேர்காணல் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் அதன் மூத்த உறுப்பினர்கள் பலரும் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருப்பதை இந்தப் பின்புலத்தில்தான் புரிந்துகொள்ள வேண்டும். அதே போன்றுதான் ஏனையவர்களும் செயற்பட்டிருக்கின்றனர். ஆயுதப் போராட்டம் தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கும் எந்தவொரு அரசியல் தலைவரும் – ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போபவர்கள் அல்லர். புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோ ஆகியவை தங்களால் முடியாது என்னும் அடிப்படையில், 90களிலேயே ஆயுதப் போராட்டத்தை கைவிட்டவர்கள். இங்கு ஒரு விடயத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப் புலிகளை ஆதரித்தல் என்பதும் – விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மீதும், அந்த அமைப்பின் இலக்கிற்காக உயர்நீத்த போராளிகள் மீதும் – மதிப்பும் அனுதாபமும் கொண்டிருப்பதற்கு இடையில் அடிப்படையான வேறுபாடுண்டு. ஒரு முறை இது தொடர்பில் புதுவை இரத்தினதுரை இப்படிக் கூறினார். நீங்கள் விடுதலைப் புலிகளை நூறுவிகிதம் ஆதரிக்காமல் இருக்கலாம் – ஆனால் உடன்படக் கூடியளவிற்கு ஆதரிக்கலாமே! உங்களுக்கு பத்து விகிதம்தான் உடன்பாடு என்றால் அந்தளவிற்கு ஆதரிக்கலாம்.

Suma-Pira_1080

பிரபாகரனை ஆதரித்தல் – விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்தல் என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். அதாவது, பிரபாகரனின் தனிநாட்டு கனவை சுமந்துகொண்டு, அவரது ஆயுதப் போராட்டப் பாதையில் பயணிப்பதாகும் – அதற்கு உறுதுணையாக இருப்பதாகும். இந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு எத்தனை பேர் இப்போது தயார்? ஆனால் விடுதலைப் புலிகளின் அர்ப்பணிப்பு – தியாகம், தொடர்பில் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பது முற்றிலும் வேறானதாகும். ஒருவரது நிலைப்பாட்டை ஆதரிப்பது என்பதற்கும் – ஒருவர் மீது மரியாதை வைத்திருப்பதற்கும் இடையில் வேறுபாடுண்டு. இதனை புரிந்துகொள்ளாமலேயே இங்கு பலரும் உணர்ச்சிவசப்படுகின்றனர். தேர்தல் காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவரையும், விடுதலைப் புலிகளையும், தாங்கள் விசுவாசிப்பதாக காண்பித்துக் கொள்வது, விடுதலைப்புலிகள் தொடர்பில் அனுதாபம் கொண்டவர்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காகத்தான். இன்று பல அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்படுவதற்கு பின்னால் இருக்கும் சூட்சுமமும் இதுதான். அந்த அனுதாபம் கொண்டவர்களின் வாக்குகளை சுமந்திரன் கருத்தில்கொள்ளவில்லை. இதுதான் சுமந்திரனும் – கூட்டமைப்பிலுள்ள மற்றவர்களும் வேறுபடும் இடம். உண்மையில் சுமந்திரனின் நிலைப்பாடுதான் – கூட்டமைப்பிலுள்ள அனைவரதும் நிலைப்பாடு ஆனால் அதனை வெளிப்படையாக கூறும் துனிவும் ஆற்றலும் சுமந்திரனிடம் மட்டும்தான் இருக்கின்றது.

இப்போது சுமந்திரனின் விடயத்திற்கு வருவோம் – சுமந்திரன் தனது நேர்காணல் தொடர்பில் ஒரு விளக்க ஒளிநாடாவை வெளியிட்டிருக்கின்றார். அதில் தனது பக்க நியாயங்களை தெரிவித்திருக்கின்றார். இதில் முக்கியமான விடயம் – சுமந்திரனின் சிங்கள நேர்காணலை கேட்க முடியாமல்போன அனைவரும், அவரது விளக்கத்தை தெளிவாக கேட்கக் கூடியதாக இருக்கின்றது. சுமந்திரன் தொடர்ந்தும் ஊடகங்களில் உயிர்ப்பாக இருக்கின்றார். ஒவ்வொரு வாரமும் அவர் பற்றி பேசுவதற்கு ஏற்றவாறு எதையாவது செய்து கொண்டிருக்கின்றார். ஒன்றில் சர்சைகளை ஏற்படுத்துகின்றார். அல்லது கொழும்பின் அரசியலில் தலையீடு செய்து, தனது பெயரை உயிர்ப்பாக வைத்துக் கொள்ள முயற்சிக்கின்றார். இந்த இடத்தில் சுமந்திரனை எதிர்க்கும் ஏனைய அரசியல் தரப்பினர் அனைவரும் அவரிடம் தோற்றுக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை. தமிழரசு கட்சியின் தலைமைதான் சுமந்திரனின் இலக்கு. அதனை நோக்கி அவர் உறுதியாகவும் தெளிவாகவும் பயணிக்கின்றார். தமிழரசு கட்சி எவரிடமும் இருக்கின்றதோ அவரிடம்தான் கூட்டமைப்பும் இருக்கும்.

கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு. இப்போதும் எழுந்திருக்கின்றது. இது ஒரு தேவையற்ற சர்ச்சை. இது தொடர்பில் சம்பந்தனே முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் புதைப்பதற்கு ஒப்பாகவே பதலளித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளுக்கும் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும் சம்பந்தம் இருந்ததாக, சம்பந்தன் அறியவில்லையாம். இப்போது கேட்டாலும் சம்பந்தனின் பதில் இப்படித்தான் அமைந்திருக்கும். சம்பந்தனை தனது தலைவர் என்று கூறும் சுமந்திரன் அதற்கு மாறாக எப்படி பதலளிப்பார்? 2010இல் கஜேந்திரகுமாருடன் இணைந்து ஒரு தரப்பினர் வெளியேறியதிலிருந்து, கூட்டமைப்பை புலிநீக்கம் செய்ய வேண்டும் என்னும் நோக்கில்தான் சம்பந்தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்திருந்தார். கூட்டமைப்புக்குள் புளொட் மற்றும் ஆனந்தசங்கரியை உள்வாங்கியமைக்கு பின்னால் இருந்ததும் அந்தக் காரணம்தான். ஏனெனில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இந்த இரண்டு அமைப்புக்களும் கூட்டமைப்பில் இடம்பெறவில்லை. ஆனந்தசங்கரி – சம்பந்தன் முரண்பாட்டால் – சங்கரி 2004 தேர்தலில் தனித்துச் சென்றார். சங்கரிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிண்டு முடித்துவிட்டதில், சம்பந்தன் தரப்பிற்கு பிரதான பங்குண்டு. சம்பந்தன் – சங்கரி மோதலின் போது, தமிழரசு கட்சிக்கு அறிமுகமானவர்தான் சுமந்திரன். அவ்வாறில்லாது, பிரபாகரன் இருக்கின்ற போதே, சுமந்திரன் தேசியபட்டியலுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதெல்லாம் வெறும் ஊடக உளறல்.

ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்த ஒன்று. இதில் விவாதம் செய்ய ஒன்றுமில்லை. ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தமைக்கு பலரும் பல காரணங்களை கூறக் கூடும் ஆனால் அது தோற்றுவிட்டது என்பதுதான் உண்மை. இவ்வாறானதொரு பின்னணியில் ஆயுதப் போராட்டத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா என்று கேட்பதும் கூட தேவைற்ற ஒன்றுதான் – அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்று ஒற்றை வரியில் பதிலளிப்பதும் தவறான ஒன்றுதான். கேள்வி கேட்பவர் இனவாத நோக்கில் கேட்கலாம் ஆனால் பதிலளிப்பவர் தனது பதிலில் கவனம் செலுத்தியிருக்கலாம். நீங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்கின்றீர்களா? – இல்லை நான் ஏற்றுக்கொள்ளவில்லை – என்னும் ஒரு பதிலுடன் இது முடிந்துவிடும் விடயமல்ல. அவ்வாறான ஒரு போராட்டம் ஏன் எழுச்சிகொண்டது? அதற்கு பின்னாலிருந்த காரணங்கள் என்ன? இந்த விடயங்கள் தொடர்பிலும் சுமந்திரன் துனிவாக பேசியிருக்க வேண்டும். ஆனால் சுமந்திரனோ ஒற்றை வரியில் அதனை முடித்துவிடப் பார்க்கின்றார். அதுதான் பிரச்சினை. கூட்டமைப்பின் உருவாக்கம் தொடர்பிலும் – அன்று என்ன நடைபெற்றது என்பதும் தொடர்பிலும் சிறிலங்காவின் உளவுத்துறை அனைத்தும் அறியும். கேள்வி கேட்கும் அந்த சிங்கள ஊடகவியலாளருக்கும் அது தெரியும். சுமந்திரன் அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்பதில்லை. ஆயுதப் போராட்டத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கின்றதா என்னும் கேள்வி – ஆயுதப் போராட்டம் நடைபெறுகின்ற சூழலில் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும். ஜனநாயக சூழலில் அது ஒரு அர்த்தமற்ற கேள்வி. அதற்கு பதிலளிப்பது எவ்வாறு அர்த்தமற்ற ஒன்றோ – அதனை அடிப்படையாகக் கொண்டு விவாதிப்பதும் அர்த்தமற்ற ஒன்றுதான். இன்றைய தமிழ் அரசியல் என்பது – இரண்டு அனுபவங்களின் சேர்க்கையாகும். அதாவது, மிதவாதிகளின் தோல்வி – ஆயுதப் போராட்டத்தின் தோல்வி ஆகிய இரண்டிலிருந்தும் – கற்றுக்கொண்டு, அதிலிருந்து முன்னேறுவதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. செயலற்ற பேச்சுக்களில்தான் தமிழரின் நாட்கள் நகர்கின்றன.


2 thoughts on “ஆயுதப் போராட்டமும் தமிழர் அரசியலும் ஒரு நேர்காணல் தொடர்பான சர்சைகளை முன்வைத்து…

 1. Thampoo

  ஆழமாக ஆராயமால் எழுந்தமானதாக எழுதியுள்ளார். ஆயுதப்போராட்டமோ அகிம்சை போராட்டமோ தோல்வியில் முடியவில்லை. அது அக்காலச் சூழ்நிலைக்கேற்ற அடுத்த பரிமாணங்களை எடுக்கின்றது. ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பினுடான பரிகார நீதி என்னும் சர்வதேச பரிமாணத்தை எடுக்கின்றது. தோல்வி என்பது இவர்கள் முன்னெடுத்துச் சென்ற தமிழ் தேசியம் மக்களிடத்திலிருந்து அகலும் போதே ஏற்படும். அதுவே சுமந்திரன் செய்துகொண்டிருக்கும் வேலையுமாகும். அதில் அவர் கணிசமான அளவு முன்னேறியுள்ளார் என்பதும் உண்மையே. அவர்செய்கின்ற அந்த வேலையின் ஒரு பகுதியே அவரது அன்றைய பேட்டியும் அதற்கு முன்னரான மகிந்தவின் சந்திப்புமாகும்.

  Reply
 2. Coomaran

  சம்பந்தன் இருக்கும் வரைதான் சமந்திரனின் அதிகரமும் ஆட்டமும். எப்படி செல்வி ஜெயல்லிதா உயிர் உடன் இருக்கும் வரை சசிகலா ஆட்டிப்படைத்தாரோ அதேநிலமைதான் சமந்திரனுக்கும் Sumanthiran is not a mass leader after MGR, ஜெயல்லிதா has proved that she was a mass leader. Track record has proved Sumanthiran is not a tactful ,shrewd or Inclusive leader
  EPS (எடப்பாடி பழினச்சாமி) is a tactful & shrewd politician and a leader
  Sumanthiran is not
  He can capture the both TNA & தமிழரசுக்கட்சி but that will not last for ever because our Srilankan political landscape is totally controlled by south

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *