Search
Sunday 21 July 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு இலங்கை அரசு தடை விதிக்க என்ன காரணம்?

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு இலங்கை அரசு தடை விதிக்க என்ன காரணம்?

தொடர்ந்து தனது கடல் எல்லையில் இந்திய மீனவர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த இலங்கைக் கடற்படையும் அதன் அரசும் தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய சட்டத்திருத்த மசோதா ஒன்றை இயற்றியுள்ளது. மீன்வளம் மற்றும் கடல்சார்வளச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ள இலங்கை அரசு, தனது கடல் எல்லையில், இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதித்துள்ளது. இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடித்ததற்காக அவ்வப்போது சிறைபட்டு மீண்டுவந்த தமிழக மீனவர்களுக்கு இந்தத் தடை பெரிய பாதிப்பாக வந்து சேர்ந்துள்ளது.

இதுகுறித்து எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் செந்தில்வேல்,

 செந்தில்வேல்“1983-ல் இருந்து இந்த மீன்பிடி எல்லைப் பிரச்னை இருந்துவருகிறது. பிறகு 2009-ல் இலங்கையில் போர் சூழல் நிலவிய காலத்தில் பாதுகாப்புக் காரணத்துக்காகத் தமிழக மீனவர்களை எல்லையில் இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டார்கள் அதில், எண்ணற்ற மீனவர்கள் இறந்தார்கள். பிரபாகரன் இறப்புக்குப்பிறகு, போர் சூழல் மறைந்த நிலையில் இன்றளவிலும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாண மீனவர்கள் தலைமையிலான கமிட்டி ஒன்றும் கடந்த வருடங்களில் நான்கைந்து முறை நடந்திருக்கிறது. ஆனால், கமிட்டியின் தீர்மானம் எதுவும் சட்டமாகக் கொண்டுவரும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க, கடல் எல்லையில் பிரச்னை வருவதால் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய – மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. ஆனால், ஒப்புதல் அளித்ததோடு மட்டும் நின்றுவிட்டது, அதற்காக 250 கோடி ரூபாய் செலவில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் தயாரிக்கப்பட்டு அத்தனையும் தற்போது கிடப்பில் இருக்கிறது. நம் மீனவர்கள் கடல் தாண்டி மீன் பிடிக்கக் கூடாது என்று கூறும் அதே இலங்கை அரசின் பொருளாதார எல்லை, நம் நாட்டின் பஞ்சாப் மாநிலம்வரை விரிந்துகிடக்கிறது. ‘தனக்கொரு சட்டம்… ஊருக்கொரு சட்டம்’ என்று இருக்கும் அந்த அரசுதான் தற்போது ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தடை விதித்து… மீறினால் சிறைத் தண்டனை அபராதம் என்று சட்டம் இயற்றியுள்ளது” என்றார்.

இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறுகையில், “இழுவைப் படகுகள்கொண்டு மீன் பிடிப்பதால், ஆழ்கடல் பவளப்பாறைகள் செடிகள் கொடிகள் உள்ளிட்டவற்றுக்கு ஆபத்து என்பதால், அதனைத் தடைசெய்யும் சட்டத்தைசிவாஜிலிங்கம் இலங்கை அரசு கொண்டுவந்தது தமிழக – இலங்கை மீனவர்களிடையே மோதல் சூழலை உருவாக்கும். இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பு இல்லை. ஆனால், வடக்குக் கடற்கரைப் பகுதியில்… அதாவது, ஈழப் பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்பு அதிகம். சுமார் 600 படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்திய அரசு தனது ஆழ்கடல் மீன்பிடிப்பைக் கொள்கை அளவில் தளர்த்திக்கொள்வதாக அன்மையில்தான் அறிவித்தது. இந்த நிலையில்தான் இலங்கை அரசு அவசரமாக இப்படியொரு சட்டத்திருத்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. உண்மையில், தமிழக அரசும் வட மாகாண அரசும் இணைந்து பேசி… அதன் பிறகு இருநாட்டுத் தரப்பும் இதில் இணைந்து முடிவெடுத்திருக்க வேண்டும். இந்தச் சட்டம் தமிழக மீனவர்களையும் ஈழத்து மீனவர்களையும் பாதிக்கும் வகையிலேயே தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

விகடன் 

n10


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *