தலைப்பு செய்திகள்

இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…?

இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…?

நரேன்-

சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்னும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்து வருகின்றது. ஆனாலும் அரசாங்கத்துடன் தமக்குள்ள தொடர்பை பயன்படுத்தி தமிழ் மக்களது அவசிய பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் தமிழ் மக்கள் நம்பியிருந்தனர். ஆனாலும், இன்று வரை அந்த மக்களின் நம்பிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. கடந்த 3 வருடங்களாக கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்தும், பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களை கொண்டிருந்தும், எதிர்கட்சி தலைமையைப் பெற்றிருந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்க்க முடிந்ததா…? குறைந்தபட்சம் போதிய அழுத்தம் கொடுத்து இராஜதந்திர ரீதியாக கூட கூட்டமைப்பு தலைமை செயற்பட தவறியிருக்கிறது. இந்த நிலையே மக்கள் தமது உரிமைக்காக தாமாகவே ஜனநாயக ரீதியாக போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் மட்டுமன்றி தமது தலைமைகளும் ஏமாற்றி விட்டதாக கருதியே தமிழ் தேசிய இனம் தாமாகவே வீதிகளில் இறங்கி நிலமீட்பு போராட்டத்திலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்று 450 நாட்களைக் கடந்து இரண்டாவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைத்து மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்த போராங்களின் பார்வையாளர்களாக இருந்தனரே தவிர, அந்த மக்களை வழிநடத்த தவறிவிட்டனர். இது 2009 முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு சரியான ஒரு தலைமை இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. இது புதிய தலைமைக்கான அல்லது மாற்று தலைமைக்கான தேடலையும் உருவாக்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் தாமாகவே வலுவான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் அந்தப் போராட்டங்கள் குறித்து ஐ.நாவுக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தி மக்களது எழுச்சியை இராஜதந்திர ரீதியாக கூட்டமைப்பு தலைமை கையாள தவறியிருக்கின்றது. மாறாக அரசாங்கம் அந்த மக்களின் போராட்டங்களை தாம் கொடுத்த ஜனநாயக இடைவெளியை பயன்படுத்தி மக்களால் சுதந்திரமாக, அச்சமின்றி போராட முடிகிறது எனவும், அந்த மக்களின் காணிகள் மெல்ல மெல்ல விடுவிக்கப்படுவதுடன் அவர்களுக்கான தீர்வுகளும் வழங்கப்படும் எனவும் அதற்கு கால அவகாசம் தேவை எனவும் கூறி இராஜதந்திரமாக செயற்பட்டு சர்வதேசத்தை திசை திருப்பியிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் தலைமைகளின் இராஜதந்திரம் குறிப்பாக சம்மந்தரது இராஜதந்திரம் தென்னிலங்கையிடம் தோல்வி அடைந்து விட்டதாகவே கருதவேண்டியுள்ளது. காத்திரமான செயற்பாடுகளுமின்றி, இராஜதந்திரமுமின்றி செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு அடைய முடியும்…?

மக்கள் தமது உறுதியான போராட்டங்களின் காரணமாக கேப்பாபுலவு- புலக்குடியிருப்பு, இரணைதீவு, வலிவடக்கு என்பவற்றில் ஒரு தொகுதி நிலங்களை மீட்டுள்ளனர். இது அந்த மக்களின் தற்துணிவான, தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் தமது நிலங்களை மீட்டு அங்கு நுழைந்த பின் அதனை பார்வையிடுபவர்களாகவே தமிழ் தலைமைகள் இருக்கின்றார்கள் என்பதை இரணைத்தீவு சம்பவம் வெளிப்படுத்தியிருக்கின்றது. இப்படியான தலைமைகள் தமிழ் மக்களுக்கு தேவையா…? என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

ரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன…? 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு வரும் என கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் முன்னர் கூறியிருந்தார். ஆனால் தற்போது 2018 ஆம் ஆண்டும் அரையாண்டை அண்மித்துள்ளது. எந்த தீர்வை அவரால் பெற முடிந்தது. அல்லது எந்த தீர்வை பெற முடியும் என நம்பிக்கையை வழங்க முடிந்தது. புதிய அரசியலமைப்பு வருகிறது. அதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் இருக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறி வந்தது. ஆனால் தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்த இடைக்கால அறிக்கையுடனனேயே புதிய அரசியலமைப்பு முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்போது 20 ஆவது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களது அபிலாசைகளை அடைவதற்காகவும், தேர்தலின் போது தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டமைப்பினால் காத்திரமாக என்ன செய்ய முடிந்தது…? குறைந்த பட்சம் போர் முடிந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்ய முடிந்ததா..?

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34-1 இன் மூலம் அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இந்த காலநீடிப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தது. அந்த கால நீடிப்பு வழங்கி 15 மாதங்கள் கடந்து விட்டது. இதன் பின் கிடைத்த மாற்றம் என்ன..? கால நீடிப்புக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு தலைமை அதனை நடைமுறைப்படுத்த கொடுத்த அழுத்தம் என்ன…? அல்லது உரிய வகையில் நடைமுறைப்படுத்த போதிய அழுத்தத்தை கொடுத்திருக்கின்றதா..?

கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று தற்போதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இனவிகிதாசாரத்தை குழப்பும் வகையிலான குடிப்பரம்பல்கள், தமிழரின் ஆட்புல அடையாளத்தை சிதைக்கும் எல்லை மீள்நிர்ணயம் என்பன நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் முழுமையாக பறிபோய் விட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என வடக்கிலும் நிலப்பறிப்புக்கள் தீவிரமாக இடம்பெறுகிறது. மகாவலி திட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் வடக்கு நோக்கி நகருகின்றன. இதைத்தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது. குறைந்த பட்சம் வடக்கு- கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களை தாம் விரும்பியவாறு செய்ய முடிந்ததா…? இதைக் கூட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து செய்ய முடியாமல் போய்விட்டது. விரும்பிய இடத்தில் ஒரு அபிவிருத்தி திட்டத்தைக் கூட மேற்கொள்ள முடியாத இவர்கள் தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று எவ்வாறு நம்ப முடியும்..?

ஆக, ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான இணக்க அரசியல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிச்சலுகைளையும், சொகுசு வாகனங்களையும், பாராளுமன்ற பதவிகளையும், வெளிநாட்டு பயணங்களையும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப் பதவிகளையும் பெற்றுக் கொண்டதை தவிர மக்களுக்காக அவர்களால் முழுமையாக எதை செய்ய முடிந்திருக்கின்றது. ஜனாதிபதி, பிரதமருடன் விருந்துகளிலும், வீட்டு வைபவங்களிலும் பங்கு பற்றியதுடன், அவர்களை தமது வீடுகளுக்கும் அழைத்து கொண்டாட்டங்களை செய்ய முடிந்திருக்கின்றது. இவ்வாறு தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் அன்னியோன்னியமாக பழக முடியும் என்றால் அந்த நட்பையும், தொடர்பையும் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சனைகளை ஏன் தீர்க்க முடியாது…? தமிழ் மக்களுக்காகவும் இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தமது கட்சியின் ஒற்றுமையையும் காக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் இவர்களை நம்பி தீர்வுக்காக தமிழ் தேசிய இனம் காத்து இருப்பதன் மூலம் அடையக் கூடியது என்ன என்ற கேள்வியே எழுகிறது. எனவே, தமிழ் தேசிய இனம் அரசியல் ரீதியாக விழிப்படையாத வரை அவர்களுக்கான தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கப் போகிறது. இதனையே தலைமைகளின் செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது.

N5


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *