தலைப்பு செய்திகள்

இந்தியப் பிரதமர் மோடி மார்ச் மாதத்தில் இலங்கை வருவார்: மங்கள சமரவீர தகவல்

இந்தியப் பிரதமர் மோடி மார்ச் மாதத்தில் இலங்கை வருவார்: மங்கள சமரவீர தகவல்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுவதாக இந்தியாவின் முன்னணிப் பத்திரிகையான ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இது குறித்த தகவல்களை வெளியிட்டார். அண்டை நாடுகளுடன் உறவுகளைப் பலப்படுத்திக்கொள்வதில் இலங்கையின் புதிய அரசாங்கம் அக்கறையாகவுள்ளது எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கொழும்பு வரவுள்ளார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வார். பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயமாக இது அமையும்.

இலங்கையில் ஆட்சிமாற்றம் என்பது அவ்வளவு இலகுவானதாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் சமரவீர, இறுதிவேளையில் கூட அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனடிப்படுத்தி இராணுவச் சதி முயற்சி ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்டதாகவும், இராணுவத்தினர் அதற்கு ஒத்துழைக்காததால் மகிந்தவின் முயற்சி தோல்வியடைந்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து முழுமையான விசாரணை ஒன்று இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளூர் விசாரணை சர்வதேச ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டு தமது அரசாங்கம் செயற்படும் எனவும் தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *