தலைப்பு செய்திகள்

இந்தியாவின் அரசியல் எங்களுக்கு அந்தவேளையில் தெரியவில்லை –சித்தார்த்தன் எம்.பி

இந்தியாவின் அரசியல் எங்களுக்கு அந்தவேளையில் தெரியவில்லை –சித்தார்த்தன் எம்.பி

இந்தியா பங்களாதேசை பிரித்துக்கொடுத்தது போன்று தமிழீழத்தையும் பிரித்துக்கொடுத்துவிடும் என பல தமிழர்கள் நம்பினார்கள்.இந்தியாவின் அரசியல் எங்களுக்கும் அந்தவேளையில் தெரியவில்லை.அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும் என தமிழீழ விடுதலைக்கழகத்தின் (புளோட் கட்சி)செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.தமிழீழ விடுதலை மக்கள் கழகத்தின் (புளோட்) செயலாளர் நாயகம் க.உமாமகேஸ்வரன் மற்றும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அ.அமிர்தலிங்கம் ஆகியோர் படுகொலைசெய்யப்பட்டதை நினைவுகூரும் 28வது ஆண்டு வீரமக்கள் நினைவு தினம் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைக்கழகத்தின் உபதலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு  சனிக்கிழமை  மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழீழ விடுதலைக்கழகத்தின் (புளோட் கட்சி)செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துகொண்டார்.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,இரா.துரைரெட்னம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இங்க தொடர்ந்து உரையாற்றிய அவர்,
வடக்கு கிழக்கு என்ற பேதமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இருந்து தமிழ் மக்களின் விடுதலையை ஒரேநோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே தமிழ் இயக்கங்களாகும்.1983ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இணைந்துகொண்டனர்.
83ஆம்ஆண்டுக்கு பின்னர் நான்கு இயக்கங்கள் சமபலத்துடன் இருந்துவந்தாலும் நான்கு இயக்கங்களையும் தமிழ் மக்கள் நேசித்தனர்.பெற்றோரே தமது பிள்ளைகளை எங்களது முகாம்களுக்கு கொண்டுவந்து விட்டுச்சென்றதை கண்டிருக்கின்றேன்.அவ்வளவு உணர்வுடன் ஆரம்பிக்கப்பட்டது.இயங்களுக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடுகள் எங்களை பலவீனப்படுத்தினாலும் இறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் உலகமே வியக்கும அளவுக்கு வளர்ச்சியடைந்து அவர்களின் ஆயுதப்போராட்டமும் முற்றுக்குகொண்டுவரப்பட்டது.
சர்வதேச ஆதரவுகளை பிழையானமுறையில் கணக்கிட்டதன் காரணமாகவே இந்த தோல்விக்கு காரணமாகும். இந்தியா பங்களாதேசை பிரித்துக்கொடுத்தது போன்று தமிழீழத்தையும் பிரித்துக்கொடுத்துவிடும் என பல தமிழர்கள் நம்பினார்கள்.இந்தியாவின் அரசியல் எங்களுக்கும் அந்தவேளையில் தெரியவில்லை.அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
இந்தியாவோ சர்வதேசமோ தமிழீழத்தை பிரிப்பது என்றால் தங்களுக்கு என்ன இலாபம் என்பதையே கணக்கிட்டு செய்வார்களேயொழிய எங்களுக்காக செய்யமுன்வரமாட்டார்கள் என்பதை நாங்கள் சரியாக உணர மறந்துவிட்டோம்.அதுவுமொரு எமது தோல்விக்கு அடிப்படை காரணமாகும்.
இவ்வாறான நிலையில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்தாலும் இன்றுள்ள நிலையில் நாங்கள் பல விடயங்களில் ஒரு பலவீனமான சமூகமாக மாற்றப்பட்டுள்ளோம்.யாழ்குடாவினை எடுத்துக்கொண்டால் 1981ஆம்ஆண்டு ஒன்பதரை இலட்சம் மக்கள் தொகையிருந்தது.ஆனால் இன்று 36வருடங்களுக்கு பின்னர் எட்டு இலட்சம் மக்களே அங்கு உள்ளனர்.சாதாரண இயற்கை வளர்ச்சியுடன் நோக்கினால் இன்று 15இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையிருக்கவேண்டும்.ஏறக்குறைய 15இலட்சம் பேர் மேற்குலகில் வாழ்கின்றனர்.அவர்கள் திரும்பிவரப்போவதில்லை.
நாங்கள் சந்தித்த அழிவினை மீண்டும் எப்படி கட்டியெழுப்புவது என்று திகைத்துப்போயுள்ள நேரத்தில் மீண்டும் மக்களுக்கு ஓர் அழிவுப்பாதையினை காட்டக்கூடாது என்ற அடிப்படையில் எங்களுக்கான அரசியல் உரிமையினை எவ்வாறு வென்றெடுக்கலாம் என்ற பாதையினை சரியாக தேர்தெடுத்து செல்லவேண்டும்.
இன்று இந்த நாட்டில் உள்ள அரசியல் சூழ்நிலையினை நோக்கும்போது நியாயமான அரசியல் தீர்வு ஒன்று தமிழ் மக்களுக்கு கிடைக்காது என்ற நிலைப்பாட்டை காணக்கூடியதாகவுள்ளது.
நான்கு மகா நாயக்கர்கள் தெளிவாக கூறியுள்ளனர் புதிய அரசியலமைப்பு வேண்டாம்,தேர்தல் முறையினை மாற்றுங்கள் என்று.இரண்டு தேசிய கட்சிகளும் தேர்தல்முறையினை மாற்றவேண்டும் என்று மிகவும் அக்கறையாகவுள்ளனர்.
இதற்கு காரணம் கடந்த தேர்தல்களை நோக்கும்போது எந்த அரசும் ஒரு சிறுபான்மை கட்சியில் தங்கியிருந்த நிலைமையிருந்தது.மகிந்த அரசாங்கத்தினை தவிர.இதுமாற்றப்படவேண்டும் என்ற எண்ணம் சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் உள்ளது.அதுவே தேர்தல் முறைமை மாற்றத்திற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கமுடியும்.தொகுதி முறை தேர்தல் முறையே கொண்டுவரப்படவுள்ளது.
இதனால் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு பெரியளவில் பாதிப்புகள் வரப்போவதில்லை.ஆனால் தெற்கில் மலையகத்தில் உள்ள சிறுபான்மை கட்சிகள்,சிறிய கட்சிகளுக்கு வாய்ப்புகள் இல்லாமல்போகும் நிலைமையேற்படும்.அவர்கள் விகிதாசாரம் வழங்கப்படும் என்று கூறினால் கூட சிறுபான்மை கட்சிகள் பலவீனமடைந்துசெல்லும் நிலையேற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.இதனையே இந்த தேசிய கட்சிகள் விரும்புகின்றன.
இதனடிப்படையிலேயே தனியாக தேர்தல் முறைமையை மாற்றிவிட்டு புதிய அரசியலமைப்பின் கொண்டுசெல்வதற்கானமுனைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.இதன்காரணமாக நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று இருந்த குறைந்த நம்பிக்கையும் குறைய ஆரம்பித்துள்ளது.அது முடிந்துவிட்டது என்று நான் கூறமாட்டேன்.
இவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பினை ஏற்படுத்துவதற்கு உருவாக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்ந்துசெல்லவேண்டும் அதனை நாங்கள் முறித்துவிடக்கூடாது என்ற நிலையிலேயே அது சென்றுகொண்டுள்ளது. நிலைப்பாடே எங்களது கட்சியின் நிலைப்பாடாவுள்ளது.
நாங்களாக இந்த பேச்சுவார்த்தைகளையும் நடவடிக்கைகளையும் உடைத்துவிட்டு வெளியே வருவோமாக இருந்தால் அரசியலமைப்பு நிறைவேற்றப்படாமல் போகின்றபோது மீண்டும் சர்வதேசத்திடம் முறையிட முடியாத நிலை தோன்றும். இந்த அரசியலமைப்பு நடவடிக்கைகள் முடிகின்றபோது நாங்கள் சர்வதேசத்திடம் சென்று நீங்கள் சொன்னீர்கள், நடக்கவில்லை என்று சொல்லக்கூடியதாக இருக்கும். நாங்கள் உடைத்தால் நீங்கள் தானே உடைத்தீர்கள் ஆகவே நீங்களே பாhத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் சொல்வார்கள். இதற்காகவே நாங்கள் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் படவேண்டும் என்பதற்காக அழுத்தங்களை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்றவர்கள் மத்தியில் நிச்சயமாக பல குழப்பங்கள் இருக்கின்றன. வடக்கில் மாகாண சபைக்கு எங்கோ இருந்த விக்னேஸ்வரன் ஐயா அவர்களை நாங்களே கொண்டு வந்தோம். தமிழரசுக் கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்ததானது ஒரு கட்சி தானே தன்னுடைய முதலமைச்சருக்கு எதிராக செயற்பட்டது உலகிலே வேறெங்கும் நடந்ததில்லை. இதுவே முதன்முறையாகும்.
நாங்கள் உடைய வேண்டும் குழம்பவேண்டும் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.ஏதோவொரு வழியில் குழப்பவேண்டும்.விக்னேஸ்வரனை தமிழ் தேசிய தீவிரவாதியாக பார்க்கின்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் ஒன்றிணைந்த வடகிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வினையே தொடர்ந்து வலியுறுத்துவதாக சம்பந்தனும் தெரிவித்துள்ளார்.நாங்கள் தேர்தல் காலங்களில் முன்வைத்த கோரிக்கைகளை கைவிட்டுபோகமுடியாது.அவ்வாறு யாரும்போக முற்பட்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஏற்றுக்கொள்ளமாட்டாது.இதில் மிகத்தெளிவாக நாங்கள் உள்ளோம்.
இது தொடர்பில் நாங்கள் எங்களுக்குள் முரண்பட்டுக்கொள்வதில் எந்த பிரயோசனமும் இல்லை.அரசாங்கம் எதனையும் தரப்போவதில்லையென்ற நிலைப்பாடு உருவாகியுள்ளது.ஆகவே நாங்கள் கவனமாக எங்களது காய்களை நகர்த்தி எங்களது ஒற்றுமையினை நிலைநாட்டி நாங்கள் தவறுவிட்டவர்கள் என்பதை உலகுக்கு காட்டாமல் இருப்பது இன்றைய காலத்தில் மிக முக்கியமானதாகும்.
ஆயிரக்கணக்கான உயிர்கள் இந்த விடுதலைப்போராட்டத்திற்காக தியாகம் செய்யப்பட்டுள்ளது.ஒரு நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுபெறப்படும்போதே அவர்களின் ஆத்மா சாந்தியடையும்.
தமிழர்களுக்கென்று தனிநாடு என்ற போராட்டத்தினை நாங்கள் தொடர்ந்து முன்னெடுத்தாலும் இன்றைய சர்வதேச அரசியலில் அது சாத்தியமற்ற விடயமாகவே பார்க்கப்படவேண்டியுள்ளது.விடுதலைப்புலிகளினால் சாதிக்கமுடியாத விடயத்தினை நிச்சயமாக சாத்வீக போராட்டத்தினால் சாதிக்கமுடியாது.மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கான சந்தர்ப்பமே இந்த நாட்டில் இல்லை.
சிலவேளைகளில் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் தூக்குவதை சிங்கள பேரினவாதிகள் விரும்பலாம்.அதன் மூலம் முற்றுமுழுதாக தமிழ் இனத்தை இல்லாமல்செய்துவிடலாம் என்ற நோக்குடன்.அது சாத்தியம் இல்லாத நிலையில் தமிழீழம் என்பது சாத்தியமில்லையென்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.அதனை சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளாது.
தமிழர்கள் தங்களது பகுதிகளை தாங்களே நிர்வகிக்ககூடிய வகையில் நியாயமான தீர்வினை அடையவேண்டும்.அதற்கு அனைத்து கட்சிகளின் ஒன்றுபட்ட பலமே முக்கியமானதாக இருக்கின்றது.அனைத்து கட்சிகளிலும் பிழையுள்ளது.ஆனால் பல விடயங்களில் தமிழரசுக்கட்சி தங்களது மேலாதிக்கத்தை நிலைநாட்டவேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் பல பிழைகளை விட்டுக்கொண்டுள்ளனர்.அதற்காக அந்த கட்சியை நாங்கள் வெறுக்கவில்லை.நாங்கள் அனைவரும் அதில் இருந்துவந்தவர்கள்தான்.நாங்கள் ஒன்றுபட்ட ரீதியில் சாத்வீகமான முறையில் எமது பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினைபெற்றுக்கொடுக்கவேண்டும்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *