Search
Friday 13 December 2019
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்தியாவும் 13வது திருத்தச் சட்டமும்

இந்தியாவும் 13வது திருத்தச் சட்டமும்

யதீந்திரா

இம்முறை மனித உரிமைகள் பேரவை விவாதத்தில் பேசிய இந்திய பிரதிநிதி, 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் பேசியிருக்கிறார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்ற போதெல்லாம் 13வது தவிர்க்க முடியாமல் வந்துபோகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் அதனைத் தாண்டி அதனால் பேச முடியாது என்பதுதான் விடயம். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தையான 13வது திருத்தச்சட்டத்தின் கீழுள்ள மாகாண சபை முறைமை தொடர்பில் பலவாறான கருத்தோட்டங்கள் – முரண்பாடுகள் தமிழ் சூழலிலும் சிங்கள சூழலிலும் இருக்கின்ற போதிலும் கூட, அரசியல் தீர்வு – நல்லிணக்கம் பொறுப்பு கூறல் என்று வருகின்ற போது, பிராந்திய சக்தியான இந்தியா 13வது திருத்தச்சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பிலேயே பேசிவருகிறது. இங்கு விளங்கிக் கொள்ள வேண்டிய விடயம் அதுதான் இந்தியாவின் எல்லை. அந்த எல்லைக்குள்தான் இந்தியாவால் பேசவும் முடியும். இது கொழும்பிற்கும் நன்கு தெரியும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்தில் இருந்த வடக்கு கிழக்கு இப்போது இல்லை. சனத்தொகை, கல்வி, பொருளாதாரம் என அனைத்து நிலைகளிலும் தமிழ் சமூகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்ற காலம் இது. ஆனால் இந்த நிலைமை மேலும் மேலும் மோசமடைந்து செல்லுமே தவிர, குறைவடைந்து செல்வதற்கான சூழல் தெரியவில்லை. முக்கியமாக கிழக்கு தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். யுத்தம் நிறைவுற்று பத்து வருடங்கள் ஆகின்றன. இந்த பத்து வருடங்களில் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழ்ந்துவரும் மக்களின் வாழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தலைமைகள் என்ன செய்திருக்கின்றன என்பது ஒரு பெரிய கேள்விக் குறியுடன் துருத்திக் கொண்டு தெரிகிறது.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்த நாட்டுடன் பேசியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை. கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சர்வதேச அழுத்தங்கள் என்பவை தமிழர் பிரச்சினையின் மீதான தீவிரத்தை உறுதிப்பாட்டை கரையச் செய்திருக்கிறே தவிர, அதனை உருத்திரட்டி உறுதிப்படுத்தவில்லை. அரசாங்கத்தின் நல்லிணக்கம் இறுதியில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு 6000 ரூபா மாதாந்த கொடுப்பனவில் வந்து நிற்கிறது. இதனை பிச்சை சம்பளம் என்றெல்லாம் அரசியல்வாதிகள் சிலர் கூறினாலும் கூட, பாதிக்கப்பட்டவர்களை அதனை வாங்குவதை எவ்வளவு தூரம் தடுத்து நிறுத்த முடியும்? வழமைபோல் அறிக்கைகளை விட முடியுமே தவிர, பாதிக்கப்பட்ட மக்களை ஒரு நேர்கோட்டில் நிறுத்த முடியாது. நிறுத்தும் வல்லமையுடன் எந்தவொரு தலைமையும் இல்லை. இந்த விடயங்களை துல்லியமாக கணித்தே அரசாங்கம் ஒவ்வொரு விடயங்களையும் திட்டமிட்டு நகர்த்திவருகிறது. அரசாங்கத்தின் நகர்வுகள் ஒவ்வொன்றும் பாதிக்கபட்டவர்களை பிரித்தாளுவதுடன், மெது மெதுவாக பிரச்சினையின் மீதான அவர்களது உறுதிப்பாட்டையும் மழுங்கடிக்கவல்லது. அரசாங்கத்தின் நகர்வுகளுக்கு தீனிபோடும் வகையில்தான் தமிழர் தரப்புக்களின் செயற்பாடுகளும் அமைகின்றன. வடக்கு கிழக்கில் நிலவும் எந்தவொரு பிரச்சினையிலும் தமிழர் தரப்பு ஒன்றாக இல்லை. ஒவ்வொரு தரப்பும் தங்களின் நிலைப்பாடுகளுக்கு பின்னால் மக்கள் வர வேண்டும் என்னும் நிலைப்பாட்டில் செயலாற்றிவருகின்றனர். இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களும் பல்வேறு குழுக்களாக பிரிந்து நிற்கின்றனர். இந்த நிலைமையையே அரசாங்கம் தனது நிகழ்ச்சிநிரலுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்கிறது. இதற்கிடையில் பல்கலைகழக மாணவர்கள் என்போர், தங்களை தாங்களே தலைமையாக எண்ணிக் கொண்டு செலாற்றிவருகின்றனர். அரசியல்வாதிகளை தவிர்த்து தாம் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக கூறுகின்றனர். ஆனால் அவர்களது யெற்பாடுகளோ மிகவும் பலவீனமானவை. மொத்தத்தில் தமிழ் அரசியல் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றது என்று தெரியாமல் பயணிக்கின்றது என்பதுதான் உண்மை. தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள்.

Signing of Indo - Sri Lanka Accord

இவ்வாறானதொரு சூழலில்தான் அரசியல் தீர்வு என்று வருகின்ற போது, 13வது திருத்தச்சட்டம் மட்டுமே துருத்திக் கொண்டு தெரிகிறது. ஏனெனில் ஏனைய முயற்சிகள் அனைத்தும் தோற்கும் போது, எஞ்சியிருக்கும் ஒரேயொரு தெரிவாக மீண்டும் மீண்டும் 13வது திருத்தம் மேல் வருகிறது. புதிய அரசியல் யாப்பு ஒன்றின் மீதான நம்பிக்கையை கூட்டமைப்பு அளவுக்கதிகமாக ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இறுதியில் அனைத்தும் புஸ்வானமாகிப்போனது. இவ்வாறானதொரு சூழலில்தான் இந்தியாவின் பிரதிநிதி ஜ.நாவில் 13வது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் தொடர்பில் பேசியிருக்கிறார். இங்கு கவனிக்க வேண்டிய விடயம், இதுவரை இலங்கையின் மீது நிறைவேற்றப்பட்ட பேரவையின் பிரேரணைகளில் எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்னும் சொற்பதம் இடம்பெறவில்லை. மிகவும் கவனமாகவும் நுட்பமாகவும் அரசாங்கம் இதனை செய்திருக்கிறது. ஆனால் இறுதியாக 2015இல் கொண்டுவரப்பட்டு, தொடர்ந்தும் கால அவகாசத்திற்குள்ளாகிவரும் பிரேரணையின் செயற்பாட்டு பந்தி, 16இல், 13வது திருத்தச்சட்டம் தொடர்பிலேயே பேசப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில்தான் தயான்ஜயதிலக போன்றவர்கள் 13வது திருத்தச்சட்டத்தை தாண்டிச் செல்ல வேண்டிய எந்தவொரு சர்வதேச கடப்பாடும் அரசாங்கத்திற்கு இல்லை ஆனால் அதனையும் கடந்து தேவையற்றவகையில் ரணில் புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுகின்றார் என்று விமர்சித்திருந்தார். மேற்படி பிரேரணையின் அடிப்படையில் பேசுவதாயின் அது சரியான கூற்றுத்தான். உண்மையில் சர்வதேசத்துடன் தொடர்பிலிருந்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்ட சுமந்திரன் தலைமையிலான தரப்பு ஆகக் குறைந்தது பிரேரணையின் உள்ளடக்கத்திலாவது மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இவ்வாறானதொரு சூழலில்தான் இந்தியா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியிருக்கிறது. ஆனால் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்தியா பேசவில்லை என்று கூறுவோரும் உண்டு. 13வது தொடர்பில் கூறினால் அதற்குள் வடக்கு கிழக்கு இணைப்பையும் உள்ளடக்க வேண்டும் என்னும் கோரிக்கையை யார் முன்வைக்க வேண்டும்? இந்தியாவா அல்லது கூட்டமைப்பா அல்லது இதில் அக்கறைப்படுவோரா?

தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் தலையிடும் ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது. பெருமளவுக்கு அது ஒரு சம்பிரதாயபூர்வமான விடயமாக சுருங்கிவிட்டது. எப்போதாவது சில அரங்குகளில் பேசுவது. இதில் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பிழையாக கணிக்கின்றனர். அவர்கள் தங்களின் நன்பர்களை தெரிந்துகொள்ளவில்லை என்றும் வாதிடும் அரசியல் ஆய்வாளர்கள் தமிழர் மத்தியில் உண்டு. அதே போன்று இந்தியாவையும், இந்தியாவுடன் உரையாட வேண்டும் என்று முன்னர் கூறியவர்களை, கடுமையாக சாடிய சில ஆய்வாளர்கள் என்போர், தற்போது அதே இந்தியாவிடம் சென்று தங்களின் தீர்வாலோசனைகள் தொடர்பில் கலந்துரையாடுமளவிற்கு அவர்கள் மத்தியில் மாற்றங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் இந்தியா எப்போதும் தனது நலன்களிலிருந்துதான் சிந்திக்கும் என்பதில் தெளிவுடன் இருந்தால் இந்தியாவை விமர்சிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் சிலர் சொல்லுவது போன்று இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிங்களவர்களை விளங்கிக் கொள்ளவில்லை என்று கூறுவதை அவ்வளவாக ரசிக்கமுடியவில்லை. விளங்கிக்கொள்ளமல் செயற்படுவதற்கு இந்திய கொள்கை வகுப்பாளர்கள் அப்படியொன்றும் அப்பாவித்தனமானவர்கள் அல்ல. நமது அப்பாவித்தனம் அவர்களை அப்பாவிகளாக விளங்கிக்கொள்கிறது. இந்தியாவின் கொல்லைப்புறமான இலங்கை அவ்வளவு சாதாரணமாக தங்களிலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது என்றே அவர்கள் எண்ணுவது போன்றே தெரிகிறது. இதில் எங்காவது நெருக்கடிகள் ஏற்படும் போது இந்தியா அதற்கான பதிலடியை கொடுக்கும் ஆற்றலுடன் இருப்பதாகவே நம்புகிறது. இந்த நம்பிக்கையின் வழியாகவே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நகர்கின்றனர். இதில் பெரிய மாற்றங்கள் எதனையும் அண்மைக்காலத்தில் எதிர்பார்க்க முடியாது. இந்த பின்புலத்தில் நோக்கினால் இந்தியாவின் எல்லை எபபோதும் 13வதுடன்தான் நின்றுகொள்ளும். இதனை எப்படி கையாளுவது – பயன்படுத்திக்கொள்வது என்பதெல்லாம் தமிழர் தரப்புக்களை பொறுத்தது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *