Search
Saturday 4 April 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இந்திய எதிர்ப்பும் தமிழரசு கட்சியின் தீர்மானமும்

இந்திய எதிர்ப்பும் தமிழரசு கட்சியின் தீர்மானமும்

யதீந்திரா
அண்மையில் இலங்கை தமிழரசு கட்சியின் மகாநாடு இடம்பெற்றது. இதன் போது ‘இந்தியாவை நாங்கள் நம்புகிறோம்’ என்னும் அடிப்படையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழரசு கட்சியின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு சம்பவம் முன்னர் எப்போதும் இடம்பெற்றதில்லை. இது தர்க்க ரீதியில் ஆராயப்பட வேண்டிய ஒன்று.

தமிழரசு கட்சி என்பது இந்தியாவிற்கு சார்பான கட்சி என்பதுதான் பொதுவான பார்வை. தமிழரசு கட்சி மட்டுமல்ல வடக்கு கிழக்கை தளமாகக் கொண்டு செயற்படும் பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் இவ்வாறான புரிதலுக்குள் அடங்கும். இதில் விதிவிலக்கான ஒரு கட்சி என்றால், அது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மட்டும்தான். எனினும் கஜேந்திரகுமார் இந்தக் கருத்தை பல்வேறு சந்தர்ப்பங்களில் மறுத்திருக்கிறார். தனது கட்சி இந்தியாவிற்கு எதிரான ஒன்றல்ல ஆனால் அவ்வாறு தங்களை சிலர் காண்பிக்க முற்படுகின்றனர். கஜேந்திருகுமார் இவ்வாறு கூறினாலும் கூட, அவர கட்சியின் செயற்பாடுகள், அவரது கட்சியின் சாhபில் பேசக் கூடியவர்களின் கருத்துக்கள் என்பன இந்தியாவிற்கு சார்பானதாக இருப்பதில்லை. இதன் காரணமாக அகில இலங்கை காங்கிரஸ் தொடர்பில் ஒரு மாறுபட்ட பார்வை இருந்துவருகிறது. ஆனால் தமிழரசு கட்சி அப்படியான ஒன்றல்ல. தமிழரசு கட்சியின் நிறுவனரான செல்வநாகம் தொடக்கம் தற்போது அதனை வழிநடத்துபவரான சம்பந்தன் வரையில் அனைவருமே இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர்கள். இந்தியாவின் ஆதரவை எப்போதுமே கோரி நிற்பவர்கள். தற்போது தமிழரசு கட்சியின் தலைவராக இருக்கின்ற மாவை சேனாதியும் இந்தியாவின் ஆளுகையை விளங்கிக் கொண்ட ஒருவர்தான். நிலைமை இவ்வாறிருக்கின்ற போது, ‘நாங்கள் இந்தியாவை நம்புகிறோம்’ என்னும் அடிப்படையில், ஒரு பிரேரணையை, நிறைவேற்ற வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? அதனை உந்தித்தள்ளிய மறைமுகமான காரணிகள் என்ன?

TNA-Modi-575-10

2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு முறை கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதுடில்லிக்கு பயணம் செய்திருக்கவில்லை. இத்தனைக்கும் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் சம்பந்தன் மூன்று வருடங்களாக, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். ஒரு நாட்டின் எதிர்கட்சித் தலைவர் என்பது சாதாரணமான ஒரு நிலையல்ல. இருந்தும் சம்பந்தன் அந்தப் பொறுப்பை இராஜதந்திர அர்த்தத்தில் கையாளவில்லை. முற்றிலும் கொழும்பை நம்பி அரசியல் செய்யும் ஒருவராகவே இருந்தார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்த காலத்தில், அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஒரு ஆலோசனையை முன்வைத்திருந்தார். அதாவது, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு, புதுடில்லிக்கு செல்வோம். ஒரு வேளை இந்திய பிரதமர் எங்களை சந்திக்காது விட்டாலும் கூட, நாங்கள் அங்குள்ள ஊடங்களை சந்திக்கலாம், கொள்கை வகுப்பில் செல்வாக்குச் செலுத்தும், சிந்தனைக் கூடங்களை சந்திக்கலாம். இது நிச்சயம் பிரதமருக்கும் சவுத் புளொக்கிற்கும் ஒரு செய்தியை சொல்லும். உண்மையில் இது ஒரு நல்ல யோசனை. ஆனால் சம்பந்தன் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சம்பந்தன் சொன்ன காரணம்தான் இங்கு கவனிக்க வேண்டியது. அதவாது, அவ்வாறு நாம் செய்தால் சிங்களவர்கள் கோபிப்பார்கள். சம்பந்தனைப் பொறுத்தவரையில் தமிழர் விவகாரத்தில் இந்தியாவை சற்று எட்ட வைத்திருப்பதுதான் நல்லதென்னும் ஒரு நிலைப்பாட்டில்தான் இருந்திருக்கிறார் போலும். இதன் காரணமாகவே சம்பந்தன் இந்தியாவிற்கும் அழைக்கப்படவில்லை. மிகவும் கௌரவமாக புதுடில்லிக்கு சென்றிருக்க வேண்டிய சம்பந்தன் கடந்த வருடம் சபாநாயகர் கருஜெயசூரியவின் தலைமையில் சாதாரணமான ஒருவராக புதுடில்லிக்கு சென்றிருந்தார். உண்மையில் சம்பந்தன் அவ்வாறு சென்றிருக்கக் கூடாது. இந்தியாவை பொறுத்தவரையில் எப்போதுமே தமிழர்கள் ஒரு தனித்தரப்பு என்னும் நிலையில்தான் அணுகப்பட வேண்டும். அதுதான் அரசியல் ரீதியில் தமிழர்களுக்கு சாதகமான ஒன்று. ஆனால் சம்பந்தனின் கடந்த ஒரு தசாப்த கால தலைமைத்துவத்தில் தமிழர்கள் இலங்கையின் ஒரு தனித்தரப்பு என்னும் அரசியல் தகுதிநிலையை பெருமளவு இழந்துவிட்டனர். குறிப்பாக ஆட்சி மாற்றத்திற்கு பின்னர்தான் இந்த நிலைமை தீவிரமடைந்தது. இதில் சம்பந்தனுக்கும் கூட்டமைப்புக்கும் பெரும் பங்குண்டு.

கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, சம்பிரதாக பூர்வமாக கூட்டமைப்பினரையும் சந்தித்திருந்தார். இதன் போது மேலதிகமாக பேசுவதற்கு புதுடில்லி வருமாறும் அழைத்திருந்தார். இதன் பின்னர்தான் தமிழசு கட்சி இந்தியாவை நம்புகிறோம் என்னும் அடிப்படையில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றிருக்கிறது. இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்விகள் – மோடியின் முதலாவது ஆட்சிக் காலத்தில் தமிரசு கட்சி இந்தியாவை நம்பியிருக்கவில்லையா? இரண்டாவது ஆட்சிக்காலத்தில்தானா மோடியை நம்பலாம் என்னும் நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறது? இந்தியாவை நம்புவதற்கு ஒரு பிரேரணையை கொண்டுவருமளவிற்கு, தமிழசு கட்சிக்குள் இந்திய எதிர்ப்பாளர்கள் ஊடுருவிட்டனரா? அவர்களை சம்பந்தனாலும் மாவையினாலும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றதா? இந்த விடயங்கள் இந்திய மட்டத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றதா?

tna modi

இந்தியா தொடர்பில் பிரேரணை நிவேற்றுவதால் அல்லது இந்தியாவிற்கு எதிராக பேசுவதால், இந்தியாவிற்கு எந்தவொரு இலாபமும் இல்லை – நஸ்டமும் இல்லை. ஏனெனில் கருங்கல் பாறையுடன் தலையை மோதினால் தலைக்குத்தான் நஸ்டமே தவிர, பாறைக்கல்ல. அண்மையில் மோடி இலங்கைக்கு வந்திருந்த போது, கொழும்பு அவருக்கு எவ்வாறு வரவேற்பளித்தது என்பதை தெளிவாக காணக் கூடியதாக இருந்தது. இந்தியா என்பது என்ன என்பதை கொழும்பு தெளிவாக புரிந்து வைத்திருக்கிறது. ஆனால் தமிழர் தரப்பில் அவ்வாறான புரிதல் எந்தளவிற்கு இருக்கின்றது என்பது கேள்விக்குறியே!

சம்பந்தன் முற்றிலும் தளர்ந்துவிட்டார். இனி அவரால் தமிழசு கட்சிக்கும் அல்லது கூட்டமைப்புக்கும் எந்தவொரு பெறுமதியும் இல்லை. அவர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கள் அவiது தளர்வின் வெளிப்பாடுகள்தான். எனவே சம்பந்தன் முற்றிலுமாக தளர்ந்துவிட்ட நிலையில், இனி வரும் காலத்தில் தமிழரசு கட்சிக்குள் – கூட்டமைப்புக்குள் குழப்பவாத சக்திகள் ஊடுருவதற்கும் தீர்மானங்களை திணிப்பதற்கும் ஏராளமான வாய்புக்கள் உண்டு. இந்த விடயங்களை மாவையினால் எந்தளவிற்கு கட்டுக்குள் வைத்திருக்க முடியுமென்பதும் கேள்வியே! இது தொடர்பில் பங்காளிக் கட்சிகள்தான் அதிகம் சந்திக்க வேண்டிய தேவையிருக்கிறது. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், டெலோ ஆகியவை அதிகம் இணக்கப்பாட்டு;டன் செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் தொடர்பில் உரையாடுவது அவசியம். டெலோவும் புளொட்டும் தொடர்ந்தும் சம்பந்தனை முன்னிறுத்தி சிந்திப்பதும், பேசுவதும் எந்தவொரு பயனையும் தரப்போவதில்லை. தமிழரசு கட்சிக்குள் இந்திய எதிர்ப்பாளர்கள் ஊடுருவது, வெமனே தமிழசு கட்சியின் பிரச்சினை மட்டுமல்ல மாறாக, அது கூட்டமைப்பின் பிரச்சினை – தமிழ் மக்களின் பிரச்சினை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பங்காளிக் கட்சிகள் மௌனம் காப்பதும் சரியானதொரு அரசியல் அணுகுமுறையல்ல.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *