இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது – சீ.யோகேஸ்வரன்
மிகவும் இனவாதம்கொண்ட ஜனாதிபதி தமிழ் மக்களின் எதிர்ப்புக்கும் மத்தியிலும் உருவாக்கப்பட்டுள்ளார். தமிழர்களுக்கு எதிரான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.2015ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கத்திற்கு சில ஆதரவுகளை வழங்கியதன் காரணமாக முன்னெடுக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு செயற்பாடு புதிய ஜனாதிபதியின் வரவின் பின்னர் தடைசெய்யப்பட்டுள்ளது.தேசிய கீதமும் தமிழில் பாடும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு தனிச்சிங்களத்தில் பாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.மத பீடங்கள் நல்ல போதனை மக்களுக்கு வழங்கவேண்டும்.ஆனால் இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது.இவ்வாறானவர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டு தமிழ் மக்களுக்கான எந்த உரிமையினையும் வழங்காத வகையில் இந்த பீடங்கள் செயற்படுகின்றன என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கு எதிரான பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தங்களது சிங்கள சமூகத்தில் கோரிவருகின்றார்.நாடு பிளவுபடப்போகின்றது அதனை பாதுகாக்க எங்களுக்கு வாக்களிங்கள் என்றே மொட்டுக்கட்சி சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றது.நாங்கள் நாடு பிளவுபடுத்துமாறு கூறவில்லை.ஒன்றுபட்ட நாட்டுக்குள்ளேயே தீர்வினைக்கோரிவருகின்றோம்.அனைத்து சிங்கள தலைவர்களிடமும் இதனை நாங்கள் வலியுறுத்தியுள்ளொம்.ஆனால் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதுவும் வழங்கிவிடக்கூடாது என்பதிலும் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராக திரட்டு தமது சுயநலத்தினைப்பேணுவதற்காக சிங்கள பகுதிகளில் மொட்டுக்கட்சி தீவிரமான பிரசாரங்களை தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவருகின்றது.
இந்த இடத்தில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு செயற்படக்கூடிய காலம் ஏற்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமடைந்து பாராளுமன்றத்தில் குரல்கொடுக்ககூடாது என்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ பல கட்சிகளை பலகோடி நிதிகளை வழங்கி களமிறக்கியுள்ளார்.அதில் முதலாவது மொட்டுக்கட்சி.அந்த கட்சியில் ஏனைய சமூகத்தினை சேர்ந்தவர்களும் இணைந்திருந்தனர்.தற்போது வியாழேந்திரன் மூலமாக அதனை தனி தமிழ் கட்சியாக காட்டி அதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்.இரண்டாவதாக மகிந்தராஜபக்ஸவின் செல்லப்பிள்ளையான பிள்ளையான் தலைமையிலான படகுக்கட்சி.அது மொட்டுக்கட்சியின் நிழல்கட்சி.தாங்கள் சிங்கள கட்சியுடன் இணையவில்லை,தனியாக கேட்கின்றோம் என்று தமிழர்களின் வாக்குகளை பிரிக்கசெயற்படுகின்றது.இவர்கள் யாரும் ஓரு பிரதிநிதியைக்கூட பெறமாட்டார்கள்.
பௌத்த பீடத்தின் ஏற்பாட்டில் இராணுவத்தினையும் இணைத்துக்கொண்டதாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் கிழக்கு தொல்பொருள் செயலணியை உருவாக்கி அதன் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 56இடங்களை பிரகடனப்படுத்தி அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும் அதன் மூலம் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கையெடுத்துவருகின்றார்.மத பீடங்கள் நல்ல போதனை மக்களுக்கு வழங்கவேண்டும்.ஆனால் இந்த நாட்டில் இருக்கின்ற சில பௌத்த பீடங்கள் இனவாதத்தினையே வெளிப்படுத்துகின்றது என மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை,மகிழடித்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)




