Search
Saturday 24 October 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இரட்டை இராஜ கோபுரங்கள் உடைய கைதடி வீரகத்தி பிள்ளையார் கோவில் குடமுழுக்கு விழா

இரட்டை இராஜ கோபுரங்கள் உடைய கைதடி வீரகத்தி பிள்ளையார் கோவில் குடமுழுக்கு விழா

ஊர்க்குருவி

இலங்கையில் சமவுயர இரட்டை இராஜ கோபுரங்களை கொண்ட கைதடி வீரகத்தி பிள்ளையார் கோவிலின் குடமுழுக்கு எதிர்வரும் (10.02.2019) ஞாயிறுக்கிழமை நடைபெறவிருக்கிறது.

இவ்வாலயம் 16ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் இலங்கையில் சமவுயர இரட்டை இராஜ கோபுரங்களை கொண்ட ஆலயங்களில் முன்னோடியாக திகழ்ந்து தென்மராட்சி மண்ணின் தனித்துவமான ஆலய கட்டட மற்றும் சிற்பக்கலை மரபை உலகிற்கு பறைசாற்றுகின்றது .

கோவில் கட்டிட அமைப்பு முறையின்படி ஐந்துநிலை, ஏழுநிலை, ஒன்பதுநிலை, பதினொரு நிலை என்று கோபுரங்கள் அமைக்க்கப்படுகின்றன . கோபுரங்கள் அகன்று நீள் சதுரமாக அமைந்து மேலே செல்லச் செல்ல அளவு குறைந்து கொண்டே சென்று உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை நிலை உண்டோ அத்தனை கலசங்கள் உச்சியில் அமைந்திருக்கும்.

யாழ்மாவட்டத்தில் சமாந்தரமாக இரட்டை கோபுரம் காரைநகர் சிவன் கோயிலில் உள்ளபோதும் அதில் ஜயனாரின் கோபுரத்தின் உயரமானது சிறிதாக உள்ளது . அனால் இவ்வாலயத்தில் பிள்ளையார், சிவன் சந்நிதிவாயில்களில் சம உயரத்துடன் கூடிய இரட்டை ராஜ கோபுரங்களை அமைந்தது சிறப்பம்சமாகும்.

தமிழ் நாட்டில் பிற்கால சோழர் காலத்தில் ஆலயங்கள் பலவும் கற்றளியாக மாற்றப்பட்ட போது கோபுரங்களும் உயரமாக எழுப்பப்பட்டன . தஞ்சை பெருவுடையார் கோவிலின் கோபுரமானது ஆயிரமாண்டுகள் பழமையான தமிழரின் கட்ட தொழிநுட்ப அறிவை உலகே இன்றளவும் வியக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய சிற்பியின் பெயர் ராஜராஜ பெருந்தச்சன் குஞ்சரமல்லன். பேரரசன் இராஜ ராஜ சோழனின் தலைமைச் சிற்பி .சுமார் 86-க்கு 86 அடி அடிபீடமிட்டு தஞ்சை பெரிய கோயிலின் கோபுர உயரம் 214 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டது. இக்கோயிலைக் காட்டிலும் பெரிதாக எழுப்பத் திட்டமிட்டே இராஜ ராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழன் 100-க்கு 100 அடி என கங்கைகொண்ட சோழபுரத்தை குஞ்சர மல்லனின் மாணவனான குணவனவனைக் கொண்டு எழுப்பினான். குணவனின் திறமையை வியந்து நித்த வினோத பெருந்தச்சன்’ என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தான் ராஜராஜன். அந்த நித்த வினோத பெருந்தச்சன்தான் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தின் தலைமைச் சிற்பி. தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தை விட உயர்ந்த கோபுரத்தை அமைக்க வேண்டும் என்ற விருப்புடன் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தின்அடிப்பீடம் அமைக்கப்பட்ட போதிலும் அதன் கோபுரமானது 186 அடியே உயர்த்தப்பட்டது. ஏனெனில் தான் எழுப்பும் கோயில், தன் தந்தை எழுப்பியதை விட பெரிதாக இருந்தால், வரலாற்றில் அவரின் புகழ் மங்கிவிடும் என்ற நோக்கிலேயே தனது கற்றளியின் உயரத்தைக் குறைக்க ராஜேந்திரன் ஆணையிட்டதாக வரலாறு கூறுகின்றது.

இவ்வாலயத்தின் கோபுர நிர்மாணம் அராலியைச் சேர்ந்த சிற்ப சிரோன்மணி திரு வேலுப்பிள்ளை யோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றினின் உயரம் 65 அடி ஆகும். இரு பக்கமும் அமைக்கப் பட்டுள்ள மணிக்கோபுரங்களில் உள்ள காண்டா மணியில் ஒரு மணி மிகவும் தொன்மையானது. மற்றைய காண்டா மணியானது 2017 ல் நிறுவப்பட்டது. அதன் சிறப்பு என்னவெனில் ஒரு தடவை அசைத்தால் 80 தொடக்கம் 100 தடவைகள் ஒலி எழுப்பும் என ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர். (தகவல் மற்றும் படங்கள்: ஜெயகாந்தன் நடராஜா )

கைதடி வீரகத்தி பிள்ளையார் 3


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *