Search
Saturday 11 July 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லும் வியூகங்களை தமிழ் மக்கள் வகுக்கவேண்டும் : கிளிநொச்சியில் விக்னேஸ்வரன்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லும் வியூகங்களை தமிழ் மக்கள் வகுக்கவேண்டும் : கிளிநொச்சியில் விக்னேஸ்வரன்

மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை நிறைவேற்றாமல் பல்வேறு ஏமாற்று வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு ஏமாற்றிவந்த நிலையில் அவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக உண்மை நிலைமைகளை எடுத்துக்கூறி தமிழ் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களும் அரசியல் செயற்பாடுகளுமே ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையில் சில சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன என்று தெரிவித்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் வியூகங்களை அமைத்து செயற்படவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மக்கள் தொடர்பு பணிமனை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளதாக பாராட்டினார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது,

தமிழ் மக்கள் கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான மக்கள் தொடர்பு பணிமனை திறப்பு விழாவில் கலந்துகொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

தமிழ் மக்கள் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் திறக்கப்படும் முதலாவது மக்கள் தொடர்புப் பணிமனை இதுவாகும். இந்த நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெறுவதில் முக்கியத்துவம் இருக்கின்றது. தமிழ் மக்களின் போராட்ட காலங்களில் கிளிநொச்சி மாவட்டம் பல வகிபாகங்களை வகித்திருக்கின்றது. யுத்த காலங்களில் இலட்சக்கணக்கான எமது மக்கள் குடா நாட்டில் இருந்து இடம்பெயர்ந்தபோது கிளிநொச்சியில்த் தான் அடைக்கலம் புகுந்தார்கள். கிளிநொச்சி மாவட்டத்தின் தன்னிறை பொருளாதார வளங்களே இந்த மக்களுக்கான உணவு , உறையுள் என்பவற்றை வழங்கி அவர்களைப் பாதுகாத்தது. அடைக்கலம் புகுந்த மக்களை அரவணைத்து வேண்டிய உதவிகள் அனைத்தையும் வழங்கி கிளிநொச்சி மாவட்ட மக்கள் தமது சகோதரத்துவத்தை காண்பித்திருந்தார்கள். அதேபோல கிளிநொச்சி மாவட்ட மக்கள் எமது உரிமைகளுக்கான போராட்டத்தில் பல்வேறு வகைகளிலும் மகத்தான பங்களிப்பை இதுவரை வழங்கி வந்;துள்ளார்கள். பல தியாகங்களை செய்திருக்கின்றார்கள். அரசியல் ரீதியான பங்குபற்றலும் விழிப்புணர்வும் உங்களிடம் அதிகம் என்று கூறினால் மிகையாகாது. இந்த வகையில் கிளிநொச்சியில் எமது முதலாவது பணிமனையைத் திறந்து வைப்பது சாலப்பொருத்தமானது.

அன்பான என் மக்களே!
எமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப் பல தசாப்தங்களாக நாம் போராடி வருகின்றோம். சொல்லொண்ணாத் துன்பங்களையும் துயரங்களையும் தாங்கி மாபெரும் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு தொடர்ச்சியாக இன நீதி மறுக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து வருகின்ற துயர் நிலையைக் கொண்டவர்களாக நாம் வாழ்ந்து வருகின்றோம்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலான தமிழர்களின் ஆயுதம் தழுவிய உரிமை மீட்புப் போராட்டம் 2009 மே மாதத்தோடு மௌனிக்கப்பட்டு இவ்வாண்டோடு பத்தாண்டுகள் நிறைவுபெறுகின்றன. இந்நிலையிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்படாமலும், இனப்படுகொலைக்கான நீதி, போர்க்குற்ற விசாரணை, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகள் விடுவிப்பு, போர் முடிந்து இராணுவத்தினர் வெளியேறுதல் போன்ற பல விடயங்களில் ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற அரசாங்கங்களின் தொடர்ச்சியான ஏமாற்று நாடகமும் அரச எதிர்ப்பில்லாத தமிழ் அரசியல் தலைவர்களின் நிலைப்பாடும் தமிழ் மக்களாகிய எமது மனதில் ஆறாத காயத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன.

இதன் விளைவாகவே கொள்கையில் உறுதியோடு, இன விடுதலையை முதன்மைப் படுத்தி, நீதியின் வழி நின்று செயலாற்ற தமிழ் மக்கள் கூட்டணி என்கின்ற கட்சியை நிறுவ வேண்டியது காலத்தின் கட்டயாமாகிற்று. இவ் வருடம் ஆயிரம் பிறை கண்ட அற்புதப் பெருமையை எதிர் நோக்கியுள்ள என்னால் இந்தக் கட்சியை நானாக நடத்த முடியாது. உங்கள் அனைவரதும் அயராத உழைப்பும், ஒத்துழைப்பும், பொறுமையுமே அதனைச் செய்ய முடியும்.

மதிப்புக்குரிய கிளிநொச்சி வாழ் மக்களே,
தமிழர்களின் சமூக மேம்பாட்டுக் கட்டமைப்புக்களின் தலைமையகமாகவும் தமிழர்களின் அரசியல் கோட்டையாகவும் கோலோச்சிய கிளிநொச்சி மாநகரம் தொடர்ந்தும் கொள்கை வழிநின்று, இனவாத சக்திகளினதும் அதற்குத் துணைபோகும் தரப்புகளினதும் சதிவலைகளை முறியடித்து மண்ணின் மகத்துவத்தைக் காத்து, தமிழ்த் தேசிய விடுதலையை முன்னெடுப்பதில் முன்னுதாரணமாக நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலேயே கிளிநொச்சியில் இன்று இந்தப் பணிமனை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றடுப்பதற்கான தமிழ் மக்கள் கூட்டணியின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான செயற்பாடுகளில் கிளிநொச்சி மக்கள் முழுமையான அளவில் பங்குபற்றி எம்மை பலப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன். எமது மக்களுக்கு எதிரான இனப்படுகொலை திட்டமிடப்பட்டவகையில் வன்னியில் மேற்கொள்ளப்பட்டபோதும் பீனிக்ஸ் பறவை போல புத்துயிர்பெற்று இன்றைய தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தின் முதுகெலும்பாக வன்னி மக்கள் செயற்பட்டு வருவதைக் கண்டு நான் வியப்படைந்துள்ளேன். பல வருடங்களாக வீதிகளில் நின்று நீங்கள் பற்றுறுதியுடன் மேற்கொண்டுவரும் பல்வேறு போராட்டங்களைக் கண்டுகொண்டுதான் இருக்கின்றேன். அத்துடன் கண்டு நான் உள்ளக்கிளர்ச்சி அடைந்திருக்கின்றேன். உங்கள் போராட்டங்கள் ஒருபோதும் வீண் போகாது. உங்கள் போராட்டங்களுக்கான எம்மாலான உதவிகளை வழங்கும் வகையிலும் உரிமைகளை வென்றடுப்பதற்கான எமது செயற்பாடுகளுக்கு உங்களின் உதவிகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலுமே இன்று இந்தப் பணிமனை திறந்துவைக்கப்படுகிறது.

பார்த்தேன் ஞாபகமில்லை. கேட்டேன் மறந்துவிட்டேன். செய்தேன் நிலைத்து விட்டது என்பது ஒரு சீனப்பழமொழி. அதேபோல இன்று இந்தப் பணிமனை திறந்து வைக்கப்படுவதன் பின்னால் பல கரங்கள் உழைத்திருக்கின்றன. அவர்கள் செய்தவைதான் இன்று நிலைத்து இங்கு நிற்கின்றது. குறிப்பாக எமது கட்சி முக்கியஸ்தர்களான ரெஜி, ஆலாலசுந்தரம், ஜொனி, சுதாகரன் ஆகியவர்களை இத்தருணத்தில் நான் பாராட்டுகின்றேன். பல கஷ்டங்கள் மத்தியில் இந்தப் பணிமனையை திறந்துவைத்து எதிர்காலத்தில் சிறந்த முறையில் மக்கள் சேவை ஆற்றுவதற்கான பல்வேறு திட்டங்களை அவர்கள் வகுத்திருக்கின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் எமது இந்தப் பணிமனையுடன் இணைந்து எமது மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான அபிலாiஷகளை வென்றெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.

அத்துடன் இந்நிகழ்விலும், கட்சி சார் செயற்பாடுகளிலும், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் பணியில் எம்மோடு பயணிக்க அனைவரையும் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றேன்.

மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை நிறைவேற்றாமல் பல்வேறு ஏமாற்று வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு ஏமாற்றிவந்த நிலையில் அவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக உண்மை நிலைமைகளை எடுத்துக்கூறி நீங்கள் நேர்கொண்ட போராட்டங்களும் அரசியல் செயற்பாடுகளுமே ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் சில சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. இலங்கையில் என்ன நடைபெற்றுவருகின்றன, உண்மை நிலைமை என்ன, மக்களின் உணர்வுகள் என்ன என்பவை எல்லாம் சர்வதேச சமூகத்துக்கு எட்டியிருக்கின்றது என்பதையே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்தப் பரிந்துரைகள் காட்டுகின்றன.

அதாவது, போர்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான உள்ளக விசாரணை நடைபெறவில்லை என்பதால் போர்க்குற்றம் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்து வழக்கு தொடரும் நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ. நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தனது இலங்கை தொடர்பான அறிக்கையில் உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைத்திருக்கின்றது.

சித்திரவதை, வலிந்து காணாமல் செய்யப்படுதல், போர்குற்றங்கள் அல்லது மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை குறிப்பாக சர்வதேச நியாயாதிக்க கோட்பாடுகளுக்கு அமைவாக விசாரணை செய்து வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் மனித உரிமைகளை கண்காணிப்பதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், மனித உரிமைகள் சபை, மற்றும் ஏனைய மனித உரிமைகள் பொறிமுறைகள் ஆகியவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்றும் பொருட்டும் ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் ஐ. நா மனித உரிமைகள் அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கவேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் பேரவையில் ஒரு தீர்மானத்தினைக் கொண்டுவந்து ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் உட்பட சம்பந்தப்பட்ட பல தரப்புக்களுக்கும் நாம் அனுப்பிய தீர்மானத்தில் இந்த விடயங்களையும் உள்ளடக்கியிருந்தோம். இவை கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பரிந்துரைகளை நாம் வரவேற்கிறோம். அதேவேளை, இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் என்றும் நாம் எமது தீர்மானத்தில் வலியுறுத்தி இருக்கின்றோம். ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தினை இலங்கை நிறைவேற்றுவதற்கு தவறி இருக்கும் நிலையில் இந்த விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டியதன் அவசியத்தை சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழுவும் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை விடயம் தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபை விசேட பிரதிநிதி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் எனப் பல தமிழ்க் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஆகவே எமது இந்த வலியுறுத்தல்கள் நடைமுறைக்கு வரும் வகையில் இங்குள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் தமது அரசியல், ராஜதந்திர செயற்பாடுகளை வகுத்து செயற்படவேண்டும்.

அத்துடன் இந்நிகழ்விலும், கட்சி சார் செயற்பாடுகளிலும், தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்தும் பணியில் எம்மோடு பயணிக்க அனைவரையும் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றேன்.

தன்னாட்சி – தற்சார்பு – தன்னிறைவே எமது தாரக மந்திரம்.

 TMK Opening Ceremoney in Kilinochchi 9 (4) TMK Opening Ceremoney in Kilinochchi 9 (3) TMK Opening Ceremoney in Kilinochchi 9 (2) TMK Opening Ceremoney in Kilinochchi 9 (1) TMK Opening Ceremoney in Kilinochchi (7) TMK Opening Ceremoney in Kilinochchi (6) TMK Opening Ceremoney in Kilinochchi (5) TMK Opening Ceremoney in Kilinochchi (4) TMK Opening Ceremoney in Kilinochchi (3) TMK Opening Ceremoney in Kilinochchi (1) TMK Office opening Ceremony in KIlinochchi (4) TMK Office opening Ceremony in KIlinochchi (3)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *