தலைப்பு செய்திகள்

இலங்கை இளம்கிரிக்கெட் வீரர்களின் எழுச்சியினால் வாய்ப்பினை இழக்கும் சிரேஷ்ட வீரர்கள்

இலங்கை இளம்கிரிக்கெட் வீரர்களின் எழுச்சியினால் வாய்ப்பினை இழக்கும்  சிரேஷ்ட வீரர்கள்

பாகிஸ்தானிலிருந்து இலங்கை அணி நாடு திரும்பிய பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமைய கேட்போர்கூடத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியும் பலம்வாய்ந்த அணியுமான பாகிஸ்தானை முழுமையாக வெற்றிகொண்ட தசுன் ஷானக்க தலைமையிலான அணியில் இடம்பெற்று அபரிமிதமாகப் பிரகாசித்த வீரர்களைக் கொண்டு புறம்பான இருபது 20 இலங்கை அணியை அமைக்கும் திட்டம் உள்ளதா என தெரிவுக் குழுத் தலைவர் அஷன்த டி மெல்லிடம் பிரத்தியேகமாகக் கேட்டபோது, அது குறித்து ஆழமாக சிந்தித்து வருகின்றோம் என பதிலளித்தார்.

அதற்கு முன்பதாக ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அஷந்த டி மெல், “சிரேஷ்ட வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தபோது புதியவர்கள் பிரகாசித்தால் நீங்கள் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என அவரகளிடம் கூறியிருந்தேன். அந்தப் புதியவர்களும் அற்புதமாக விளையாடிய தத்தமது ஆற்றல்களை வெளிப்படுத்தினர். அதன் மூலம் எம்மிடம் சிறந்த வீரர்கள் பலர் இருப்பது உணர்த்தப்பட்டதுடன் அவர்களிலிருந்து தேசிய அணியைத் தெரிவு செய்யும் நிலை இப்போது தோன்றியுள்ளது. எமது அணியில் பலம் மேலும் மேலும் அதிகரித்துள்ளது. ஐந்து மாற்றங்களுடன் கடைசி இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்றதன் மூலம் அது நிரூபணமாகியுள்ளது. இவர்கள் தொடர்ந்து வெற்றிகள் ஈட்டுவதைப் பழக்கமாக்கிக்கொண்டால் அவுஸ்திரேலியாவில் நிச்சயமாகத் திறமையை வெளிப்படுத்துவார்கள் என்றார்.இதற்கு முன்னர் உரிய வீரர்களைத் தெரிவு செய்வதில் சிக்கலை எதிர்கொண்டதாகவும் தற்போது அந் நிலை மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.72784965_3398732756824574_2594038286892662784_n

முன்னர் உரிய வீரர்களைத் தெரிவு செய்வதில் சிக்கலை எதிர்கொண்டோம். ஆனால் இப்போது துடுப்பாட்ட வரிசையில் 6 இடங்களுக்கு போட்டித்தன்மை தோன்றியுள்ளது. இளையோருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் பற்றிப் பிடித்துக்கொண்டு பிரகாசித்ததன் மூலம் அவர்கள்பால் நான் ஈர்க்கப்பட்டேன். பானுக்க ராஜபக்ஷ, மினோத் பானுக்க, ஓஷாத பெர்னாண்டோ ஆகியோர் உடலாலும் உள்ளத்தாலும் அர்ப்பணிப்புடன் விளையாடினார். மற்றவர்களும் அப்படித்தான். இவர்கள் எல்லோரும் உள்ளூரில் விளையாடுவதைப் பார்த்துள்ளோம். ஆனால், சர்வதேச இருபது 20 அரங்கில் முதல் நிலை அணிக்கு எதிராக அதுவும் அதிவேகப் பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணிக்கு எதிராக அவர்கள் ஆற்றல்களை வெளிப்படுத்திய விதம் பெரும் பாராட்டுக்குரியது. மேலும் 30, 40 பந்துகளில் ஓட்டங்களைப் பெறமுடியாமல் (டொட் போல்ஸ்) போனாலும் சிக்சர்கள், பவுண்ட்றிகளை விளாசி அவர்கள் அதனை நிவர்த்தி செய்துகொள்கின்றனர். அதுதான் இருபது 20 கிரிக்கெட் அவசியமானதாகும். அத்துடன் பானுக்க ராஜபக்ஷ துடுப்பெடுத்தாடிய விதம் மஹேல ஜயவர்தனவின் துடுப்பாட்டத்தை நினைவுக்கு கொண்டுவந்தது.

“இந்த சுற்றுப் பயணத்தில் அதிகளவில் முன்னேற்றதை வெளிப்படுத்தியவர் சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க ஆவார். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் மனஉறுதியுடன் விளையாடியமை அவரது மகத்தான ஆற்றலை வெளிக்காட்டியது. எனவே அவுஸ்திரேலிய கிரிக்கெட் விஜயத்துக்கான குழாத்தை தெரிவு செய்யும்போது இந்த வீரர்களின் ஆற்றல்களை கவனத்தில் கொள்வோம்” என்றார்.73075017_3398730960158087_8510279149275840512_n

மேலும் சர்வதேச இருபது கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக (3-0) வெற்றிகொண்டு தங்களது அற்புத ஆற்றல்களால் தேசத்துக்கு புகழும் பெருமையும் ஈட்டிக்கொடுத்த இளம் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மொத்தமாக 145,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.இதில் இருபது 20 கிரிக்கெட்டில் ஈட்டிய ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 15,000 அமெரிக்க டொலர்கள் ஊக்குவிப்புத் தொகை அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெகுமானத்தை வென்ற இருபது 20 கிரிக்கெட் வீரர்களில் பலர் இலங்கை அணியில் தமது இருப்பை உறுதிசெய்வதற்கான வாயிலைத் திறந்துகொண்டதுடன் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாகிஸ்தான் செல்ல மறுத்த பத்து வீரர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *